Sunday, September 11, 2016

கூனி, கைகேயின் மனதைக் கெடுத்து ராம பிரானை வனத்திற்கு அனுப்ப காரணம் ============================

====

பிரகலாதனின் கதையும் நரசிம்ம அவதாரமும் நாம் அறிந்த கதை தான். ஆனால், இதனைத் தாண்டி இன்னொரு சுவாரஸ்யமான கதையும் இந்து மதத்தில் உண்டு . அது என்னவெனில், பிரகலாதனின் மகன் விரோசனன் அவன் மிகுந்த தர்மவான். திருமாலிடமும், சிவபெருமானிடமும் "எம் கையால் உனக்குச் சாவு நேராது" என்ற வரத்தை வாங்கியவன் தான் இந்த விரோசனன். இந்திரனும், மற்ற தேவர்களும் , திருமாலிடமும், ஈசனிடமும் சென்று விரோச்சனனை ஒழிக்குமாறு வேண்டி நின்றார்கள். ஆனால், திருமாலும், ஈசனும் விரோச்சனனை தாங்கள் கொல்ல மாட்டோம் , என்று அவனுக்கு அளித்த வரத்தை நினைவு கூர்ந்தனர்.

அதனால் தேவர்கள் வேறு ஒரு சதித் திட்டம் போட்டார்கள் அதன் படி , அந்தணர் வேடம் பூண்டு விரோச்சனனின் உயிரை (அவன் நடத்திய ஒரு யாகத்தின் முடிவில் வந்து) யாசகம் கேட்டனர். இதனால் விரோசனன் யோக சக்தியால் தன் பிராணனை விட்டான் (அவன் பிரகலாதனின் மகன் ஆயிற்றே, வேள்வியின் முடிவில் யாசகம் கேட்டு வந்த அந்தண ரூபம் கொண்ட தேவர்களுக்கு அவர்கள் கேட்ட தானத்தை அளிப்பது அவன் கடமை அல்லவா? அதனால் தான் தனது இன்னுயிரையே பொருட் படுத்தாமல் அவர்களுக்கு அளித்தான்) . ஆனால், இவ்விஷயத்தை அறிந்த விரோச்சனனின் மகள் மந்தாரை கடும் சினம் கொண்டு தேவர்களுடன் போர் தொடுக்கத் தயாரானாள். அச்சமுற்ற இந்திரன் திருமாலிடம் ஓட அவர், " உன் வஜ்ராயுதத்திற்க்கு வேண்டிய வலிமையை நான் தருகிறேன் , நீயே போர் செய், வெற்றி உனதே" என்று கூற. இந்திரன் போரில் மந்தாரையை தனது வஜ்ராயுதம் கொண்டு கடுமையாகத் தாக்கினான். அதனால் , அவளது தலை திரும்பியது , முதுகம் வளைந்து கோணலானது. அழகு தேவதையாக இருந்த மந்தாரை விகார ரூபத்தை அடைந்தாள்.

"இந்திரன் ஒரு கோழை, அவனுக்குத் திருமால் அளித்த ஆற்றலினால் தானே எனக்கு இந்த நிலை ஏற்பட்டது, எனவே மறுபிறவியில் நானே விஷ்ணுவுக்கு எதிராகச் செயல் பட்டு அவருக்குப் பெரும் தீங்கு விளைவிப்பேன்" என்று உறுதி பூண்டாள். பிறகு மனதில் விஷ்ணுவின் மீது கொண்ட வஞ்சத்துடன் தற்கொலை செய்து கொண்டாள். அந்த மந்தாரை தான் அடுத்த பிறவியில் கோசல நாட்டில் கூனியாகப் பிறந்து கைகேயியின் தாதியாகப் பணியாற்றி , இராமபிரானைக் கானகம் அனுப்பியதின் மூலம் தீங்கு செய்து, தான் முற்பிறவியில் செய்த சபதத்தை நிறைவேற்றிக் கொண்டாள்.

No comments:

Post a Comment