Monday, September 26, 2016

தியானம்" என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் "அகத்தவம்"


"தியானம்" என்ற வடமொழிச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் "அகத்தவம்" ஆகும். உயிர் மீது மனதைச் செலுத்தி அமைதி நிலைக்கு வந்து அவ்வமைதியின் மூலம் சிந்தனையைச் சிறப்பித்து அறிவை வளப்படுத்தி வாழ்வில் நலம் காணும் ஒரு சிறந்த உளப்பயிற்சி தான் அகத்தவம் ஆகும். வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள மக்கள் அனைவருக்கும் அகத்தவம் இன்றியமையாத தேவையாகும்.

இதனை மாணவப் பருவத்திலேயே தொடங்குவது சாலச் சிறந்தது. பிரபஞ்சம் எனும் பேரியக்க மண்டலத்தைக் களமாகக் கொண்டு உடல், உயிர், அறிவு என்ற மூன்றும் ஒன்றிணைந்து இயங்கும் ஒரு சிறப்பியக்க நிலையமே மனிதன். கருவமைப்பின் மூலம் வந்த முன்வினைப் பதிவுகளையும் அவற்றால் ஊக்குவிக்கப்பட்டு தற்போது நிகழும் பிறவியில் ஆற்றியுள்ள வினைப்பதிவுகளையும் அடக்கமாகப் பெற்று அவற்றின் வெளிப்பாடாகச் செயலாற்றி விளைவுகளைத் துய்த்து வாழும் உருவமே மனிதன்.

உலகிலுள்ள எல்லாத் தோற்றங்களிலும் எல்லா உயிர்களிலும் சிறந்த, மேலான இரு இயக்கநிலை மனித உருவம். எல்லாம் வல்ல இறைநிலையை முழுமையாக எடுத்துக் காட்டும், பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதனே.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment