நமக்கே நமக்குன்னு ஒரு வீடு வேணும். நமக்கே அது தோணுது ... சமச்சகாரம் வேற போட்டு அரிச்சு தள்ளறா ... வீடு வாங்கு ... வீடு வாங்குனு... சரி கையில் அவ்ளோ காசு ஏது? ... நமக்கு என்ன ... பாட்டன் உயிலு எழுதி வச்சிட்டா போயிருக்காரு? கைய ஊணி கர்ணம் அடிச்சிக்கிட்டு இருக்கோம்...
ஆனா வீடும் அவசியந்தானே? நம்ம நல்லதுக்குதானே சொல்ராங்க, எல்லோரும்?
மாசா மாசம் சம்பளம் ... வந்துடும்னு ஒரு நெலமையில இருக்கறோமே ... செலவோட செலவா .. பேங்குல ... கடனை ஒடனை வாங்கியாவது ... ஒரு வீட்டை கட்டி உட்டுறுவமே'ன்னு பேங்குக்கு போறோம்...
அவிய்ங்க கேக்கற டாக்குமெண்டு எல்லாம் குடுக்கறோம் ... லோன் குடுத்துப்புடறாய்ங்க... Fixed interest ங்கறான், floating interest ங்கறான், ... என்னவாவோ இருந்துட்டு போவட்டும் ... நான் EMI மட்டும் ஒழுங்கா கட்டிக்கிட்டு வாரேன்... நானு எங்க கட்டறேன் ... பாங்குகாரன்... மாசம் பொறந்து என்னோட அக்கவுண்டுக்கு சம்பளப் பணம் உழுந்துடுச்சின்னு தெரிஞ்சதுமே 'சரேல்'னு உருவிடுறாய்ங்க...
மூணு வருஷம் கழிச்சி ... அகஸ்மாத்தா ... அந்தபக்கமா போறப்ப ... சரி பேங்குக்கு உள்ளாறத்தான் போயி ... கடன் எப்ப முடியும்னு கேக்கலாம்னு போனா ... ஒரு புன்னகைய பரிசா குடுத்துட்டு .... லோன் statement ... கையில வாங்கறேன் ... அச்சோ! பேங்குகாரன் ஏமாத்திப்புட்டான்..
இட்லிய தட்டுல போட்டுப்புட்டு ... இடிய தலையில போட்டுட்டான்...
என்னோட லோனு வெவரம் என்னான்னா...
கடன் எவ்ளோ? 25 லட்சம்
எத்தினி வருஷம்? 30 வருஷம் ... அதாவது 360 மாசம்
வட்டி? அது ஒரு 10 %
EMI ... எவ்ளோ வரும்? 21939 ரூபாய்.
மூணு வருஷத்துல நானு கட்டுன பணம் பத்தின கணக்கு என்னான்னா...
3 வருஷம் × 12 மாசம் × 21939 ரூபா = 7 89 804 ...
முள்ளங்கி பத்தையாட்டம் ஏழு லட்சத்தி எம்பளத்தி ஒம்போது ஆயிரத்து சொச்சம் கட்டியிருக்கேன்... கட்டினேனா ... இதில அசல் எவ்வளவு முடிஞ்சிருக்குன்னு கேட்டாக்க ...
என்னோடு வா ... ரூபா, ஏராளந்தான் ரூபா ... அப்பிடீன்னு ... சகலாகலா வல்லவன் கமல் மாதிரி ... சொல்லிப்புட்டு ... இந்த பேங்கு காரன் ... நானு திலும்ப கட்டற பணத்தை எல்லாம் ... கபளீகரம் பண்ணிக்கிட்டு திரியறான்.
மாதாந்திர EMI 21939 ... அதில் அசலுக்கு போறது 1106 மட்டுந்தான் ... மிச்சம் உள்ள 20833 வாரி சுருட்டிக்கறானுவ... வட்டிக்காவ...
அப்பிடி பாக்கப்போனா ... லோனுல எவ்ளோ அசலுக்கு போயிருக்குன்னா ...39816 ரூபா மட்டுந்தான் ... ஏங்க, ஏழு லச்சத்து எம்பளத்தி ஒம்போது எங்க ?...
வெறும் முப்பத்தொம்போது ரூபா எங்க ?
வவுத்தெரிச்சலா இருக்குதுங்க ...
பதறிக்கிட்டு பாங்கி மேனேசரை போயி கேட்டாக்க ... சர்ர்ர்னு ஒரு டீய உறிஞ்சிப்புட்டு ... சாவகாசமா ... பதில் சொல்றாரு ... We are following RBI instruction. மட்டுமில்ல. இதெல்லாம் உங்களுக்கு தெரியாமல் இல்லை... விவரணைகளை படித்து பார்த்த பின்னர் 'தான்' ... நீங்களும் sign பண்ணியிருக்கீங்கள்.
நானு எங்க படிச்சு பாத்தேன்... நீட்டுன எடத்துல கையெழுத்துப் போட்டேனே ... சந்தியில நிறுத்தப் பாக்கறீங்களேன்னு பொலம்பிபுட்டு ...
ஐயா மேனேஜரய்யா ... இதுக்கு ஏதாச்சும் விமோச்சனம் இருக்குதுங்களா?
நல்ல மனுஷன் ... நல்ல ஐடியால்லாம் குடுத்தார்... அவரு சொன்னது என்னான்னா ...
கடன் வாங்கினிங்க ... உண்மை ... சொத்து ஒன்னு சேந்துச்சி ... உண்மை ... ஊருல .. நீங்க வீடு கட்டுனதும் உங்களை மனுஷனா பாக்கறாங்க ... உண்மை ... பணம் திரும்ப கட்டிக்கிட்டு வரீங்க ... உண்மை. இப்ப என்ன பிரச்சனைனா ... வட்டிக்கு காசு அதிகமா போறதா ... நீங்க நெனைக்கறீங்க ... அத மட்டும் தீர்த்துட்டா problem solved இல்லையா?
ஆமாங்க, ஆமாங்க ... சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான்... ஐடியா குடுங்க ... ஐயாஆ...
மூனு முத்தான ஐடியா குடுத்தாரு ... அது என்னான்னா ...
தீர்வு 1: இப்ப மாதா மாதம் கட்டிக்கிட்டு வர EMI Rs. 21939 கூட ஒரு 3061 சேத்து ரூ 25000 கட்டுங்க... இதனால 360 மாசம் இருக்கற தவணை 216 ஆக கொறச்சிடறீங்க... வட்டி கணிசமா கொறையும்.
தீர்வு 2: வீடு கட்டுனதும் ... அது பாட்டுக்கும் செலவு வந்துகிட்டே இருக்கும்... EMI நம்மை கழுத்தைக்கட்டிக்கிட்டு இருக்கும்... அதனால மொத வருஷம் போற படி போவட்டும்... ஆனா சுதாரிச்சுக்குங்க ... இரண்டாவது வருஷத்துல இருந்து ... வழக்கமான EMI கூட ஒரு 5000 ரூபாய் சேர்த்து கட்டுங்க ... என்னாகும்? 360 மாதத்தவணை 103 கொறைஞ்சிடும் ... வட்டிக்காக போறது ... மொத்தத்துல 15 லட்ச ரூபாய்.. ஆனா EMI போறபடி போவட்டும்னு உட்டு இருந்தீங்கனா ... வட்டி மட்டுமே நீங்க 53, 50, 000 கட்ட வேண்டி இருந்திருக்கும்...
சரி போகுது ... வுடுங்க ... அதான் வழி கண்டுபுடுச்சுட்டோமே ... இனிமே ஒன்றும் அதிகம் நஷ்டம் வந்துடாது...
தீர்வு 3: EMI போறபடி போகட்டும் ... ஆனா, வருஷா வருஷம் ... ஒரு பெரிய தொகைய ... கொண்டு போயி வீட்டுக் கடனுக்காக போட்டுடுங்க ...
இப்ப என்னாவும்?
ஒரு வருஷத்துக்கு ... 100000 .... ஒரு லட்சம் போடறீங்கன்னு வச்சிப்போம் ... என்னாகும்? உங்க கடன் 159 மாசத்திலேயே முடிஞ்சிடும்... 360 மாசம் வரைக்கும் ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டு இருக்க வேண்டியதில்லை. இதனால என்னாவும்? வட்டிக்காக நீங்க கட்டுறது 19.21 லட்சம் மட்டுமே... இதனால வட்டிக்கு கொண்டுபோய் அழுவறதுலேருந்து எவ்ளோ மிச்சப் படுத்துவீங்க? ரூ. 34.77 லட்சம் ...
பாத்து சூதனமா பொழைச்சுக்கங்க ...
No comments:
Post a Comment