குண்டலினி தவத்தைப் பற்றி விளக்கிச் சொல்லும் பொழுதெல்லாம் ஒரு கேள்வியைப் பல நண்பர்கள் முன் வைக்கிறார்கள். அதாவது, யோகிகள் நினைத்தால் ஒரு சீடனுக்கு அவனை தொட்டு குண்டலினியை எழுப்ப முடியும் என்று சிலர் கூறுகிறார்களே ? என்று. இதற்கு இராம கிருஷ்ண பரமஹம்சரை உதாரணப்படுத்தி,அவர் விவேகானந்தருக்குத் தொட்ட மாத்திரத்தில் பரவசத்தை ஏற்படுத்தி விட்டார் என்கிறார்கள். சரியாக அவர்கள் குறித்த வரலாறுகளைப் படிக்காததினால்தான் அவ்வாறு சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர் விவேகானந்தருக்குப் பல பரிட்சைகளை வைத்துத் தேறிய பிறகுதான் உபதேசித்தருளினார் என்பதுதான் உண்மை. இராம கிருஷ்ண பரமஹம்சரே ஓரிடத்தில் சொல்கிறார் ''நினைத்த மாத்திரத்தில் ஒருவனுக்கு ஞானத்தை அளித்து விட முடியாது. அதைப் பெறுவது காலத்தைப் பொருத்திருக்கிறது. உலகப் பற்றில் ஆழ்ந்திருக்கும்வரையில் ஒருவனுக்கு பெரும்பாலும் ஆன்ம உபதேசங்கள் பயன்படுவதில்லை.எனவே கொஞ்ச காலம் அவன் உலக சுகங்களை அனுபவிக்கும் படி விட்டு விட வேண்டும். உலகப் பற்று கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து உபதேசம் பயன் தரக் கூடிய காலம் அவனுக்கு வரும். அப்போதுதான் உபதேசித்து உதவ வேண்டும். அதற்கு முன்னால் செய்யும் உபதேசமெல்லாம் வீணே. அதனால் யாதொரு பயனும் விளையாமல் வீணாகிப் போகும்'' என்கிறார்.
தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவிப்பவனுக்கே வைராக்யம் ஏற்படும். மற்றவர்களுக்கு வைராக்யம் ஏற்படாது. உலக சம்பத்துகளெல்லாம் எளிதில் அடையக் கூடியவை. ஆனால், அவை நிலையற்றவை. மேலும் நிலையான இன்பமான ஆனந்தத்தை அடைய அவை ஏற்றதல்ல. இதை ஒருவன் உணரும் பொழுதுதான் வைராக்யம் ஏற்படும். இத்தகைய வைராக்யத்தைப் பெற்றவனிடம் சகலமும் வந்து குவியும். ஆனால், எல்லாம் இருந்தும் அவன் ஒன்றுமில்லாதவனைப் போல் வாழ்வான். அவனே ஞானத்தைப் பெறத் தகுதியானவன். எனக்குத் தெரிந்து நிறைய ஞானிகள் வாழ்ந்திருக்கிறார்கள். யோகி ராம் சூரத் குமார், காஞ்சி மஹா பெரியவர் போன்று பலர் உண்டு. எளிமை எளிமை அவ்வளவு ஒரு எளிமை. ஒரு உண்மையான குருவுக்குத் தெரியும் இவன் தகுதியானவனா ? இல்லையா ? என்பது. அவனுக்குத்தான் அவர்கள் ஞானத்தை வழங்குவார்கள். தற்போது சிலர் தங்கள் பிராண சக்தியின் திணிவைப் பயன்படுத்தி தொட்டவுடன் குண்டலினியை மேலேற்றி விடுகிறார்கள் என்கிறார்கள். அது பொய். குண்டலினி மேலேறுவது என்பது இறுதி நிலை. முக்தி நிலை. அப்படி ஒருவேளை ஏறிவிட்டது என்றால் அதனால் யாதொரு பயனுமில்லை. குருவானவர் அவனை மேன்மைப்படுத்துவதற்குப் பதிலாகப் படுகுழியில் தள்ளி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மனம் பரிபாகம் அடையாத ஒருவன் பெறும் சக்திகளெல்லாம் அவனை அழிவு நிலைக்கே கொண்டு செல்லும். மேலும் பிறருக்கும் அவன் மூலம் துன்பங்களை விளைவிக்கும். இதைப் புராணங்கள் தோறும் பார்க்கிறோம்.
ஒருவன் நீந்த வேண்டும் என்று விரும்பினால், அதற்கான பயிற்சியை பழகும் வரை சில நாட்கள் மேற்கொள்ள வேண்டும். ஒரே நாளில் பழகி கடலில் போய் யாரும் நீச்சலடித்து விட முடியாது. அதைப் போலவே பரமாத்மா எனும் கடலில் நீந்த விரும்புபவன் பல கடுமையான பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அங்கு நீந்தக் கூடிய சக்தி அவனுக்கு உருவாகும். குண்டலினி என்பது மஹா சக்தி. ஒட்டு மொத்த உலகின் சக்தி. அதை தொட்டவுடன் ஒருவனுக்கு மேலேற்றினால் அவ்வளவுதான், அவன் அதைத் தாங்க மாட்டாமல் கபாலம் வெடித்து, இரத்த நாளங்கள் வெடித்து இறந்து விடுவான். இது ஒன்றும் விளையாட்டு காரியங்களல்ல. உயிர் சம்மந்தப்பட்ட விஷயங்களாகும். பிராணாயாமம் கூட அப்படித்தான். ஒரு சிறிய தவறு நேர்ந்தால் கூட உயிர் பிரிந்து விடும். இதைத்தான் ''இழுத்து விடும் மூச்சு நின்னாப் போச்சு'' என்பார்கள். சதுரகிரியில் பிராணாயாமம் செய்யும் போது தவறாகச் செய்து உயிரை விட்ட ஒரு வாலிபனின் உடலில்தான் அரசனின் உடலை விட்டு நீங்கி திருமூலர் புகுந்து கொள்வார். பரமாத்மாவோடு கலக்கப் பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்பவர்கள் உண்டு. உடல்தான் அழியும் ஆன்மா அழியாது. எனவே புதிய உடலை எடுப்பது பிறவியாகாது பல உடல்களை மாற்றுவது அவ்வளவுதான் என்பவர்கள் உண்டு. இப்படி பல உயிர்களாகப் பரிணமித்து கிடைப்பதற்கரிய மானிடப் பிறவியை அடைந்ததன் நோக்கமே இந்தப் பிறவியைப் பயன்படுத்தி முக்தியை அடைய வேண்டும் என்பதற்காகவே. இப்படி அடைய வேண்டிய ஒரு விஷயத்தை, தொட்டவுடன் ஒருவர் தந்து விடுகிறார் என்றால், அதை நம்பலாமா ?
குண்டலிடனியை எழுப்ப பல வழிகள் உண்டு. குறிப்பாக இராஜ யோகம், ஹட யோகம் இவற்றைச் சொல்லலாம். எல்லா யோகங்களிலும் இது தலை சிறந்தது என்கிறார்கள். இதனால் அடையும் சமாதி மற்றவற்றை விடச் சிறந்தது. மன ஏகாக்ரதையினாலும் சமாதி நிலையை அடையலாம். உலகப் பற்றிலிருந்து விடுபட்டுள்ள அளவுக்கு அதன் தரம் இருக்கும். ஆனால் குண்டலினி அவ்வாறல்ல, எழுப்பப்பட்ட உடன் ஞானத்தையும், முக்தியையும் தந்து விடுகின்றது. இதனால் விளையும் சமாதி மிகவும் வலிமையானது. இதை அடைந்தவர் பூரண யோகியாவார். அவர் நீண்ட நாட்கள் இந்தக் கூட்டில் தங்க முடியாது. எனவே அதை அனுசரித்தே இணைப்பானது நிகழும். பிராப்தம் உள்ளவரை பூரண இணைப்பு என்பது நிகழாது. மற்ற வினைகள் எல்லாம் நீங்கிய பூரண யோகியாக, ஜீவன் முக்தர்களாக வாழ்ந்து வருவார்கள். எனவே மனதின் பரிபாகம் இல்லாதவர்களுக்கு குண்டலினி ஏறாது. ஏறினாலும் நிலைக்காது. நிலைத்தாலும் மேன்மையைத் தராது.
Thursday, May 19, 2016
குண்டலினி தவத்தைப் பற்றி
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி
ReplyDelete