Thursday, May 19, 2016

மனிதனுக்கு இயற்கை மரணம் ஏன் ஏற்படுகின்றத

மனிதனுக்கு இயற்கை மரணம் ஏன் ஏற்படுகின்றது ? விஞ்ஞானியிட் கேட்டாலும், மெய்ஞானியிடம் கேட்டாலும் கிட்டத்தட்ட ஒரே பதிலையே தருவார்கள். உடலில் ப்ராண சக்தியின் குறைபாட்டினால் வயது ஆக ஆக நம் அன்றாட வேலைகளின் நிமித்தம் இறந்து போகும் செல்கள் மீண்டும் உற்பத்தியாகமல் போய் விடுவதால், உறுப்புகளுக்கு போதிய உயிர் சக்தி பரவ முடியாமல் ஒவ்வொரு உறுப்பாகச் செயலிழந்து முடிவில் மரணம் ஏற்படுகிறது என்பார்கள். ஆனால், இப்போது நாம் கூற வருகின்ற விஷயம் வேறு விதமானது. எனவே அதே கேள்வியை இப்போது கொஞ்சம் மாற்றிக் கேட்கலாம். இயற்கை தன் கட்டமைப்பில் மரணத்தை ஏற்படுத்தியதற்கான காரணம் என்ன ? இயந்திரம் பழையதாகும் போது பழுதடையும். அவ்வப்போது சீர் செய்து இயக்குவோம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சீர் செய்ய முடியாத அளவுக்குத் தேய்மானமும், பழுதும் அடைவதால் அதை அகற்றி விட்டு வேறு புது இயந்திரத்தை அந்த காரியத்துக்கு பயன்படுத்துவோம். அது போலவே இந்த உடலின் நிலையும். உடல் முதுமையடைந்து, தேய்மானமடைந்து,நாடி, நரம்புகள் தளர்ந்து முற்றிலும் இயங்க முடியாமல் வரும் போது உயிர் அதை விட்டு விலகி விடுகிறது. பிறகு வேறு உடலை அடைகிறது.
மறுபிறவி இல்லை என்பவர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உயிர் பரமாத்மாவோடு கலந்து விடும் என்பார்கள். அப்படியானால் அவன் கருமையத்தில் பதிந்த வினைப் பதிவுகள் என்னவாகும் ? அவன் மரபு வழியாகக் கடத்தப்படும். சரி, அவனுக்குக் குழந்தை பிறந்த பிறகு அவன் ஏற்றுக் கொண்ட பதிவுகள் என்னவாகும் ? எண்ணங்களே செயல்களாக மலர்கின்றன. எனவே அந்த எண்ண அலைகள் சூக்குமமாகக் காற்றில் மிதந்த ஒத்த எண்ண அலைகள் கொண்டவர்கள் உடலில் புகுந்து செயலாற்றும். இது ஒரு கொள்கை. இதன்படி பார்த்தால், ஒருவன் தான் செய்கின்ற பாவத்திற்கு தானே தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற கோட்பாடு முரண்படுகிறது. எவனோ ஒருவன் செய்கின்ற பாவத்தை எவனோ ஒருவன் ஏற்றுக் கொள்வதாக ஆகி விடுகிறது. அப்போது வாழும் வரை மகிழ்ச்சியாக, செல்வந்தனாக வாழ்வதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பிறகு யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன மனப்பாங்கு வளர்த்து விடுமல்லவா ? என்று கேட்டால், நாம் என்பது இங்கு நாம் மட்டுமல்ல இந்த மொத்த சமுதாயமும் கூடிய ஒரு அமைப்பே. எனவே ஒவ்வொரு தனி மனிதனின் செயலும் மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும். அப்படி மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் போது நம்மையும் பாதிக்கவே செய்யும். சுனாமி வரும் போது பாவம் செய்தவனுக்கு மட்டும் என்று வருவதில்லை. உத்ரகண்டில் வெள்ளம் வரும் போது பாவம் செய்தவர்களுக்குமட்டும் என்று வரவில்லை. மேலும் நாம் மரணித்து விட்டாலும் நம் சந்ததியினர் இந்த உலகில் வாழ்ந்து இந்த சமூகத்தோடு சேர்ந்து துன்பங்களை அனுபவிக்கவே செய்வார்கள். எனவே இதை உணர்ந்து மொத்த சமுதாயமுத்தில் உள்ள தனிமனிதர்களும் தங்கள் கடமைகளை அறவழியில் ஆற்றினால் உலகமே இன்பமயமாக, பேரறிவுக் களமாகத் திகழும் என்பது மறுபிறவி மறுப்பாளர்களின்முடிவு.
எது எப்படி இருந்தாலும் நம் முன்னோர்களில் பெரும்பாலவர்கள்மறுபிறவியை மனதில் கொண்டே யோக நிலைகளைக் குறித்தும், ஆன்மிக மேம்பாடு குறித்தும் விளக்குவதால் அதையொட்டியே நாமும் பேச வேண்டிய நிலை இருக்கிறது. கூர்ந்து கவனித்தால் இரண்டுமே தீமையிலிருந்து நம்மை விலக்கி வழி நடத்தும் விதமாகவே அமைந்துள்ளது விளங்கும். அந்த அடிப்படையில் இப்போது மரணம் பற்றி யோசிக்கும் போது, நம் முன்னோர்கள் சொல்வதென்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் தான் தோன்றிய நிலைக்கே மீண்டும் போய் விடுகிறது என்பதுதான். அதனதன் தன்மைக்கேற்ப எடுத்துக் கொள்ளும் காலம் மாறுபடுகிறதேயன்றி உண்மை நிலை இதுதான். மேல் நோக்கி வீசப்படும் கல் மீண்டும் கீழ் நோக்கி ஈர்க்கப்பட்டு வருவது போல, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பிப் போய்க் கொண்டிருக்கின்றன. அது போல ஜீவர்கள் அனைவரும் அறிந்தோ அறியாமலோ புறப்பட்ட இடத்தை நோக்கியே பயணிக்கிறார்கள். இதில் அறிந்து முயற்சிப்பது யோகம். அறியாமல் புலன் வழியில் போகத்தில் திளைத்து பல பிறவிகளைக் கடந்து பக்குவமடைந்து போவது சாதாரண நிலை. போகம் என்கிற போது மனிதனை ஆட்படுத்துவது பற்றேயாகும். பற்றை உடையதாக இருப்பதே ஜீவனின் இயல்பாக இருக்கிறது. எனவே அந்த பற்றை அகற்றுவதற்கே இயற்கை மரணத்தின் மூலம் முயற்சிக்கிறது.இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கும் மரணத்தின் மூலமாக ஜீவாத்மாக்கள் பற்றுகளில் இருந்து பிரிக்கப்படுகின்றன. புதிய பிறவி எடுக்கும் போது பழைய பற்றுகள் புதிய சூழலுக்கு ஏற்றார் போல் மாறி விடுகின்றன. இப்படியே பிறவிகள் தோறும் ஏற்படும் மாற்றத்தின் மூலம் பக்குவப்பட்ட ஜீவன் முடிவில் பரமாத்மா சொரூபத்தை அடைகிறது. இதற்கே மரணம் என்பது கோட்பாடு.
எவ்வளவுதான் மகான்கள் தோன்றி நாம் இந்த சரீரமோ, இந்த மனமோ அல்ல, நாம் பரமாத்மா சொரூபம் என்று விளக்கினாலும், ஓரளவுதான் நம் அறிவுக்கு விளங்குறதேயன்றி, அனுபவத்திற்கு எட்டுவதில்லை. இந்த சரீர உணர்வு நம்மை விட்டு அகலாத வரை நாம் பிரம்மம் என்கிற உணர்வை நாம் அடைய முடியாது. எனவேதான் ஜீவனை பசு என்றும், தளைக்கும் பற்றுகளை பாசம் என்றும், பரமாத்மாவை பதி என்றும் உருவகப்படுத்தி சொல்வார்கள். பற்று என்கிற பாசத்தை அவிழ்த்துவிட்டால் பசு பதியிடத்தில் போய்ச் சேர்ந்து விடும். பாசமாகிய பற்றை அறுக்காதவரை எமன் பாசக் கயிற்றில் இருந்து தப்ப முடியாது. பற்றினால் மரணம் தொடர்வதால்தான் எமன் கயிற்றை பாசக்கயிறு என்கிறார்கள். உடல் உணர்வு அற்றவிடத்து ஆத்ம உணர்வு புகுந்து விடுகிறது. ஆத்ம உணர்வு மேலோங்கியவர்களைஇந்த உலக பந்தங்களும், இன்ப துன்பங்களும் தீண்டுவதில்லை. சுண்ணாம்புக் காளவாயில் வைத்தாலும், கல்லைக் கட்டி கடலில் போட்டாலும் எந்த பாதிப்பும் நேர்வதில்லை. ஏனென்றால் ஆத்ம உணர்வு மேலோங்கி நின்றதே காரணம். எனவே முக்தி என்பது உடல், உள்ளம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதேயாகும். இந்த பற்று கொண்ட மனதை ஞானாக்கினியால் தகித்து ஒன்றுமில்லாமல் ஆக்குவதே முக்திக்கான வழி. கற்பூரம் எரிந்த பிறகு எப்படி சாம்பல் கூட இல்லாமல் காற்றோடு காற்றாக கலந்து விடுகிறதோ, அது போல மனம் ஞானாக்கினியில் பொசுங்கிப் போகும் போது மனம் எங்கிருந்து வந்தது, எதில் நிலைத்திருந்தது, எதில் ஒடுங்கிப் போனது என்கிற எந்த அறிகுறியும் இல்லை. அதுவே முக்தி. அதுவே நம் நிஜ சொரூபம்.

No comments:

Post a Comment