கண்ணை மூடி அமர்ந்து கொண்டு எண்ணங்களோடு போராடிக் கொண்டிருப்பதையும் நாம் தியானம் என்று கொள்கிறோம். அது தியானமாகாது. தியானத்தற்கான முன்னோட்டம் அல்லது முயற்சி என்று சொல்லிக் கொள்ளலாம். முதலில் மனம் பரிபக்குவமடைய வேண்டும். பரிபக்குவம் என்று சொன்னால் அது எண்ணங்களைத் தவிர்ப்பதல்ல. அப்படி முற்றிலுமாக யாராலும் எண்ணங்களை தவிர்க்கவோ, ஒழிக்கவோ முடியாது. புறவுலக வாழ்வோடு இணைந்திருக்கிற நாம் உடனடியாக அதைத் துண்டித்து விட முடியாது. படிப்படியாகவே பக்குவத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். அப்படித்தான் பெறவும் முடியும். எது நல்லது கெட்டது என்பதைத் தீர ஆராய்ந்து தீயவற்றை விலக்கி நல்ல செயல்களை, எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறான நம் உள்முகமான முயற்சியும், இயம, நியம பயிற்சிகளும் சேர்ந்துதான் மனப்பரிபாகத்தை ஏற்படுத்தும். இப்போது தீய எண்ணங்கள் மற்றும் செயல்களில் இருந்து நாம் விடுபட்டு நல்ல எண்ணங்களையும், செயல்களையும் உடையவர்களாக மாறி விடுகிறோம்.
இதனால் நாம் அடையும் மிகப் பெரிய மாற்றம் என்னவெனில், சத்துவ குணம் நம்மிடம் மேலோங்கி விடுகிறது. ஒருவரிடம் சத்துவகுணம் மேலோங்கி வருகிற அளவு அவர் யோக சாதனங்கள் புரிய தயாராகி வருகிறார் என்பதை கண்டு கொள்ள முடியும். அதன் பிறகு உடலை பலப்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. நீண்ட நேரம் தியானத்தில் அமர்வதற்கும், நோய் என்கிற தடை ஏற்படாமல் இருக்கவும் ஆசனம் தேவைப்படுகிறது.இது வரை நாம் நம் எண்ணங்களையும், செயல்களையும், உடலையும் சரி செய்து கொண்டோம். இனிதான் நாம் மனதை வசப்படுத்த வேண்டிய கட்டத்திற்கு வருகிறோம். அதற்கு பிராணனை வசப்படுத்த வேண்டும். ஏனெனில் பிராணனின் பற்றாக் குறையே நம் மனதின் பலவீனமான சலன நிலைக்குக் காரணமாக அமைகிறது. எனவே பிராணாயாமத்தை தவறாது செய்து வர வேண்டும். அப்போது பிராணனின் திணிவு பெற்ற நிலை நமக்கு மனோதிடத்தைத் தருகிறது.
இங்குதான் புலனடக்கம் என்கிற பிரத்தாயாகாரம் வருகிறது. புலனடக்கம் என்று சொல்லழகுக்காகச்சொல்லப்படுகிறதேஅன்றி புலன் ஒடுக்கம் என்பதுதான் சரி. அதாவது ஆமை ஒடுங்குவது போல் ஒடுங்குவது. தேவைப்படும் போது தேவைப்படும் காரியங்களை புலன் வழியாகப் புரிந்து விட்டு மீண்டும் ஒடுங்கிக் கொள்வது. அடங்குவது என்றால் அது செயலற்ற நிலையாகும். அது இறுதி நிலை. எனவேதான் வள்ளுவப் பெருந்தகை ஒருமையில் ஆமை போல் ஐந்தடக்கில் என்கிறார். அடக்கம் என்பதை ஒடுக்கம் என்று கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒடுங்குவதும் விரிவதும்தான் பரமாத்தாவின் இயல்பு. அதுவே நம் இயல்பும் கூட. ஆனால் நாம் ஒடுங்குவதேயில்லை. எனவே, சத்துவகுணம் மேலோங்கியவர்களுக்கே பிரத்தியாகாரம் வசப்படும் என்றுணர்க. இதன் பிறகே மனதை குவிப்பது என்ற தாரணைப் பயிற்சி வருகிறது. நான் முன்பு சொன்னது போல, ஒடுங்காமல் கண்டபடி ஓடும் மனதை ஒடுக்கிப் பழகியவர்கள் அதை ஒரு புள்ளியில் குவித்துப் பழக வேண்டும். பழக்கம் காரணமாக மனம் நழுவி நழுவி ஓடும். சலித்து விடாமல் விடாமுயற்சியுடன் குவித்து வரவர வெற்றி ஏற்படும். அந்த வெற்றியின் பரிசுதான். தியானம்.
உடல்பலமாகவும், மனம் சாந்தமாகவும், குருவின் வார்த்தைகளில் நம்பிக்கையும், உணவு, உறக்கம் போன்றவற்றில் நிதானமும், இந்த சம்ஸார பந்தத்தின் நிலையற்ற தன்மையை உணர்ந்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்களே யோக சாதனங்களைச் செய்யத் தகுதி உள்ளவர்கள்.
''அஹங்காரம் பலம் தர்பம் காமம் குரோதம் பரிக்ரஹம்
விமுச்ய நிர்மன; நாந்தோ ப்ரஹ்ம பூயாய கல்பதே ''
என்கிறார் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் கீதையில். அதாவது அஹங்காரம், மிருக பலம்,மூர்க்கம்,இச்சை, கோபம், பேராசை இவைகளைக் களைந்த தன்னலமற்றவனும் அமைதியானவனுமாகிய மனிதனே பரம்பொருளை அடையத் தக்கவன் என்கிறார். மேலே காணும் இத்தீய குணங்கள் எல்லோரிடத்தும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விட்டு விலகியவனே மெய்ப் பொருளை அறிந்து, உணர்ந்து, அடைய முடியும். அதிக சிற்றின்ப இச்சையில் திளைத்துக் கிடப்பவர்களும்,ஆணவம், கர்வம் உடையவர்களும், பொய், கபடம், துரோகம் போன்ற செயல்களைச் செய்பவரும், குரு, சாது, ஞானிகளை அவமதிப்பவர்களும், குதர்க்கமான மனப் போக்கு உடையவர்களும் என்னதான் முயன்றாலும் யோகத்தின் பலனை அடைய முடியாது. ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளைச் செய்து ஒழுக்கம், பரோபகாரம், குருவுக்குப் பிரியமாக நடந்து கொள்வது, அஹிம்சை, வாய்மை, கொடை, சகிப்புத்தன்மை,பேதமற்ற மனநிலை, சுயநலமின்மை, அடக்கம், பெற்றோரை பேணுதல் போன்ற நல்ல குணங்களை விருத்தி செய்து வருவீர்களேயானால் தீய குணங்கள் யாவும் விலகி நல்ல குணம் மேலோங்கும்.
நம் பிறப்பின் நோக்கமே தெய்வீக வாழ்க்கை வாழ்ந்து பூரணத்தை அடைய வேண்டும் என்பதுதான். அது என்ன தெய்விக வாழ்க்கை ? உயர்ந்த இலட்சியத்தையும், உன்னதமான உணர்வுகளையும் ஒட்டி, திட்டமிட்டு வாழும் வாழ்க்கையே தெய்வீகமான வாழ்க்கை. மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்டதன் காரணம், அவன் ஆறு அறிவின் துணையால் ஆறு நிலைகளைக் கடந்து ஏழாம் நிலையான தியான நிலையை எட்ட வேண்டும் என்பதற்காகத்தான். அப்படி ஏழாம் நிலையை எட்டிப் பிடித்து நிலைத்தவனே எட்டா நிலையான எட்டாம் நிலையை அடைய முடியும்.
Thursday, May 19, 2016
கண்ணை மூடி அமர்ந்து கொண்டு எண்ணங்களோடு போராடிக்
Subscribe to:
Post Comments (Atom)
Great sir
ReplyDelete