யோக சாதனத்தைப் பொறுத்தவரை இயமம், நியமம், ஆசனம் இதெல்லாம் புற விஷயங்களில் உடல் மற்றும் மனதில் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்காகக் கடைபிடிக்கப்படுபவை. பிராணாயாமம்தான்மிக முக்கியமான கட்டத்திற்குள் நம்மை வழிநடத்துவது. சில கதைகளில் திருப்பு முனை என்பார்களே அது போல. சாதாரணமாக பிராணாயாமம் என்றால் மூச்சைக் கட்டுப்படுத்துவது என்று சொல்வதுதான் வழக்கமாக இருக்கிறது. உண்மையில் பிராணாயாமம் என்றால் பிராணனைக் கட்டுப்படுத்துவது என்றுதான் பொருள். பிராணாயாமத்தில்வெற்றி பெற சுவாசமும் ஒரு சாதனம் அவ்வளவுதான். விஞ்ஞானம் இந்த உலகில் காணும் யாவும் தனிமங்களால் உருவாகி இருக்கின்றன என்று சொல்கிறது. இவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பலவகைப் பொருட்களாக, உயிர்களாக உருவாகியிருக்கின்றன என்று சொல்கிறது.
நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தனிமங்களெல்லாம்தோன்றுவதற்கு முன்பும், பிறகு அவை தோன்றுவதற்கு காரணமாகவும் இருந்தது இரண்டு வஸ்துக்களே என்கிறார்கள். முதலாவது ஆகாசம். அதிலிருந்தே எல்லாம் உருவாகி இருக்கின்றன. அது எங்கும் நீக்கமற நிரம்பி இருக்கிற நிறை பொருளாக இருக்கிறது. கூட்டிச் சேர்க்கப்பட்டிருப்பவைகள், உருவமெடுத்திருப்பவைகள் அனைத்தும் ஆகாசத்தில் இருந்து உண்டானவைகளே. வாயுவாகவும், நீராகவும், சூரியனாகவும், சந்திரனாகவும், நட்சத்திரங்களாகவும், உயிர்களாகவும், உடல்களாகவும், தாவரங்களாகவும்,காண்பன, நுகர்வன யாவுமே ஆகாசத்தில் இருந்து வந்தவைகளே. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஆகாசத்தில் இருந்து வந்தவைகளே. எனினும் ஆகாசத்தை நாம் நேரில் புலப்படுத்த முடியாது. அது மிகவும் சூட்சுமமாக இருப்பதால் அது புலனாவதில்லை. அதையே விண் என்பார்கள். விண்ணைப் பற்றிய ஞானமே விஞ்ஞானம் வேறொன்றுமில்லை.அதே விண் ஸ்தூலமாக வடிவெடுக்கும் போதுதான் நமக்கு புலப்படுகிறது.
சிருஷ்டிக்கு முன்னால் இருந்தது விண்ணாகிய ஆகாசம். பிரளயத்தின் போது ஜடப் பொருள்கள், திரவப் பொருள்கள், வாயுக்கள் எல்லாம் ஒடுங்கி மீண்டும் ஆகாசம் என்கிற நிலைக்குப் போய் விடுகின்றன. பிறகு மீண்டும் சிருஷ்டி ஆகாசத்தில் இருந்து விரிகிறது. இப்போது அந்த இரண்டாவது வஸ்துவுக்கு வருவோம். அதாவது விண்ணாகிய ஆகாசம் எந்த சக்தியினால் இந்தப் பிரபஞ்சமாக உருவாகிறதோ, அந்த சக்திக்குப் பெயர்தான் பிராணன். ''இப்போது புலப்படுகிறதா பிராணாயாமத்தின்மகத்துவம்''. எல்லையில் அடங்காது இந்த அண்டம் எங்கும் வியாபகமாய் விளங்குகின்ற விண்ணாகிய ஆகாசத்தைப் போல, அகண்டமாய் எங்கும் வியாபகமாய் நிறைந்து இந்த அண்ட பேரண்டங்களை எல்லாம் இயக்குகின்ற சக்திக்குப் பெயர்தான் பிராணன். சிருஷ்டிக்கு முன்பும், பிரளயத்திலும் ஆகாசம் நிலைத்திருப்பதுபோல சிருஷ்டியின் துவக்கத்திலும்,பிரளய காலத்திலும் இந்த அண்டத்திலுள்ள சக்திகள் அனைத்தும் ஒடுங்கி பிராணன் என்னும் மூல நிலையை எட்டுகின்றன.
புதிய சிருஷ்டி தொடங்குவதற்கு விசையும், சக்தியும் இந்தப் பிராணனிடத்திலிருந்தே வருகின்றன. பிராணன் எனும் ஆதி சக்தியே சலனத்தின் மூலம் தோற்றத்திற்கு வருகிறது. இந்த ஆதி சக்தியே ஈர்ப்பு சக்தியாக, காந்தமாக உருவாகிறது. இந்தப் பிராணன் எனும் சக்தியே மனித உடலில் செயல்களாக வடிவெடுக்கிறது.நாடிநரம்புகளில்விசையாகவும், எண்ணங்களாகவும்,சிந்தனா சக்தியாகவும் வடிவெடுத்திருப்பது பிராணனே. உயர்வான நிலையில் உள்ள எண்ணங்கள் தொடங்கி மிகக்கீழ் நிலையில் இருக்கின்ற ஜட சக்தி வரை பலதரப்பட்ட சக்திகளும் பிராணனின் வெவ்வேறு தோற்றங்களே. இப்போது பிராணன் வேறு ஆகாசம் வேறா என்று கேட்டால், பிரளய காலத்திற்குப் பிறகு சிருஷ்டிக்கு முன் சத் என்றோ அசத் என்றோ சொல்ல முடியாத ஒரு நிலை இருந்தது. அப்போது இருளினுள் இருளே சூழ்ந்திருந்தது. சலனமற்ற ஆகாயமே எங்கும் நிரம்பி நின்றது. பிராணனும் அதனுள் ஒடுங்கி இருந்தது. மீண்டும் சிருஷ்டியை முன்னிட்டு சலனம் ஏற்படுகையில் பிராணன் ஆகாசத்தில் மோதுகிறது. அதன் விளைவாக விண்ணாகிய ஆகாசம் பல பொருள்களாக வடிவங்களை எடுக்கிறது. அப்போது பிராணனும் அந்தப் பொருள்கள்ளுக்குள் விசையாக, சக்தியாகத் தோற்றத்துக்கு வருகிறது.
இத்தகைய வலிமையான பிராணனைப் பற்றி அறித்து அதை வசப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்து கையாண்டு ஆகாசத்தோடு இணைவதற்கு பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியே பிராணாயாமம். எனவே பிராணனை கட்டுபடுத்த முடிகிற ஒருவனால் இயலாத காரியம் எதுவுமில்லை. சித்திகள் யாவையும் அதன் மூலம் அடைந்திடலாம். இந்த மானிடப் பிறவியில் எதை நாம் அறிந்து கொண்டால் அனைத்தையும் அறிந்தவராவோம் என்று கேட்டால், புற விஷயங்களையும், இந்த பிரபஞ்சமெங்கும்காணும் பொருள்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தால் ஞானம் பெறுவது என்பது விரிவான ஒரு முடிவில்லாத முயற்சியாகப் போய்விடும். எனவே தோற்றத்துக்கு வந்துள்ள இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படைப் பொருள் எது என்று அறிந்து அதை கிரகித்துக் கொண்டால் ஒருவன் யாவற்றையும் கிரகித்தவனாகி விடுவான். அந்த அடிப்படைப் பொருளையே பேருயிர் என்றும், பேராற்றல் என்றும் சொன்னார்கள். இந்த அண்டமெங்கும் உள்ள ஆற்றல்கள் அனைத்திற்கும் அடிப்படை சக்தியாக விளங்குவது பிராணன் எனும் பேராற்றலே. எனவே பிராணனை உணர்ந்தவன் பேருயிராகிய விண்ணை, ஆகாசத்தை, சதாசிவத்தை உணர்ந்தவனாகிறான். எனவேதான் விண்ணாகிய ஆகாசத்தைப் பேராற்றல் களம் என்று சொன்னார்கள். எனவே பிராணனை அடக்கி வசப்படுத்த வல்லவனுக்கு மனதும் வசப்படும். மனம் வசப்பட்டு ஒடுங்குவது எங்கே ? பேருயிரிலே. அதாவது பேராற்றல் களத்திலே, விண்ணாகிய ஆகாசமெனப்படும் சதாசிவத்திலே. படிக்கப் படிக்க வெட்ட வெளி ச்சமாகப் புலப்படும்.
Thursday, May 19, 2016
யோக சாதனத்தைப் பொறுத்தவரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment