வாழ்க்கைத் தத்துவம்!

குருவிற்கு வயது அதிகமாகிவிட்டது.எழுந்து நடக்க முடியாத நிலை.படுக்கையில் அன்ன ஆகாரம் இன்றி அவர் இருக்கும் நிலையறிந்த அவரது சீடர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
குரு சமாதி அடைந்து விட்டால், பிறவியின் நோக்கத்தை யார் நமக்கு உணர்த்துவது?
பிறவிக்கடல் நீந்த யார் துணை புரிவது? இப்படிக், குழப்பமான நிலையிற் சீடர்கள் தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினர்.
சீடர்களின் மன நிலையைப் புரிந்துகொண்ட குரு, அனைவரையும் தனதருகில் அழைத்தார். அப்போது அவரது பிரதான சீடர்களில் ஒருவன் “குருவே! எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும்,“வாழ்க்கையின் தத்துவம் என்ன?" என்று கேட்டான்.
"உங்கள் அனைவருக்கும் வாழ்கையின் தத்துவத்தை விளக்க இருக்கிறேன், சீடர்களே வாழ்கையின் தத்துவம்
இதுதான்" என்று கூறித் தனது 'பொக்கை வாயைத்' திறந்து காட்டினார்.அனைவரும் குருவின் வாயைப் பார்த்த பின்னர் அவரது படுக்கையைச் சுற்றி அமர்ந்தனர்.
சீடர்களிற் சிலர் “குருவிற்கு பைத்தியம்தான் பிடித்துவிட்டது. எதையோ கேட்டால் எதையோ காட்டுகிறாரே” என்று முணுமுணுத்தனர்.
ஆனால், கேள்வி கேட்ட சீடனுக்கோ ஒன்றுமே புரியவில்லை.
குருவின் வாய்க்குள் அப்படி என்ன வாழ்க்கைத் தத்துவம் அடங்கியிருக்கிறது என்று குழம்பிப் போனான். மெதுவாகக் குருவை அணுகி அவரிடம் “குருவே! எனக்கு ஒன்றுமே புரிய வில்லையே, அப்படி என்னதான் தங்கள் வாயில் இருக்கிறது”? என்றுக் கேட்டான்.
அதற்கு அவர் “என் வாய்க்குள் என்ன தெரிந்தது?"என்று வினவினார். அவனோ “நாக்கு மட்டும்தான் தெரிந்தது” என்று கூறினான்.
'பல் இருந்ததா?' என்று கேட்டார். அவனோ 'இல்லை' என்றான். அதற்கு அவர், "அதுதான் வாழ்க்கையின் தத்துவம். பல் வன்மையானது. அழிந்து போனது. நாக்கு மென்மையானது அழிந்து போகவில்லை. இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறது" என்று கூறி “வன்மையானது அழியும்,மென்மையானது வாழும். இதுதான் வாழ்க்கையின் தத்துவம்” என்று விளக்கிக் கூறினார்.
ஒரு கவிஞன் வாழ்க்கைத் தத்துவம் பற்றி எழுதுகிறான்,
"விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று...
வாழ்க்கையும் அப்படிதான்...
முடியும் வரை தெரிவதில்லை...
வாழ்வது எப்படி என்று...."
ஆனால் வேதாத்திரி மகரிஷி தெள்ளத் தெளிவாய் வாழ்க்கைத் தத்துவம் பற்றி விவரிக்கிறார்:
"வாழ்க்கையை விளங்கிக் கொண்டு, காரணத்தையும் உணர்ந்து கொண்டு நடத்தினால் அது வெள்ளத்திற் படகு விடுவதை ஒக்கும். மாறாக அவ்விளக்கம் இல்லாமல் நடத்தினால் அது வெள்ளத்தில் அகப்பட்ட துரும்பின் நிலை போலாகும்.
வாழ்க்கையோ, இயற்கை, சமுதாயம், தான் என்ற மூன்றின் இணைப்பில் நடைபெறுகிறது. இவற்றில் சமுதாயம் என்ற தத்துவத்தை ஆராய்வதே நாம் இப்போது எடுத்துக் கொண்டுள்ள வாழ்க்கைத் தத்துவ ஆராய்ச்சியாகும்.
வாழ்க்கை வெற்றிமிக்கதாக அமைய வேண்டுமாயின், நாம் இயற்கையையும், சமுதாயத்தையும் உணர்ந்து, மதித்து வாழ வேண்டும். அதோடு எந்தக் காரியத்துக்காக இந்தப் பிறவியை எடுத்து வந்தோமோ, அந்த நோக்கத்திற்கு ஒத்ததாக அதாவது பிறவித் தொடரை முடித்துக் கொண்டு வீடுபேறு எய்த வேண்டும் என்ற அந்த உயரிய நோக்கத்திற்கு ஒத்ததாக வாழும்முறை அமைய வேண்டும். அப்போது தான் துன்பத்தைத் தோற்றுவித்துக் கொள்ளாமலும் வாழலாம். தவறுதலாக நாம் தோற்றுவித்துக் கொள்ளும் துன்பத்திலிருந்தும் மீண்டு கொள்ளலாம். பிறரால் தோற்றக்கூடிய துன்பங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம். எனவே, வாழ்க்கையின் தத்துவத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் பெற்று அதன்படியே வாழ்ந்து வரவேண்டும்"என்கிறார்.
No comments:
Post a Comment