இராம் மனோகர் - கர்மத்தை விட முடியாது. ஆனால், கர்மத்தோடான பந்தத்தை விட வேண்டும். மனம்தான் அந்த பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. கர்மம் இயற்ற வேண்டும் என்று எண்ணுவதும், அதை செயல்படுத்துவதற்காகப் புலன்களைத் தூண்டுவதும், நிகழ்ந்த செயலை தனக்குள் பதிந்து வைத்துக் கொள்வதும் மனம்தான். இந்த நிலைகளை வெளி மனதின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மனதின் மற்றொரு உயர்ந்த நிலையான அறிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொழுது கர்மத்தோடான தொடர்புகள் சிறிது சிறிதாக அறுந்து கொண்டே வரும். முற்றிலும் அறுபட வேண்டுமென்றால் மனிதன் தன் ஜீவபோதத்தை களைய வேண்டும். ஜீவபோதம் இருக்கும் வரை கர்மத்தை தவிர்க்க முடியாது. மனதினால் நிகழும் இந்த கர்மமானது புறச் சூழலுக்குத் ஏற்ப சுகம் அல்லது துக்கத்தை தருவதாக அமைகிறது. சுகம் விளையும் பொழுது நல்ல கர்ம அல்லது வினை என்றும், துக்கம் விளையும் பொழுது தீய வினை என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி அறிந்தும், அறியாமலும் நாம் செய்கின்ற வினைகள் யாவும் நம் வாழ்வில் சுகத்தையும், துக்கத்தையும் மாறி மாறி விளைவித்து வருகின்றன. எனவே இன்ப துன்பங்களுக்கு முடிவே இல்லாமல் போய் விடுகிறது. இந்நிலையை கடலோடு ஒப்பிடுவார்கள். பரந்து விரிந்த அந்தக் கடலில் அலைகள் கிளம்பி வந்து கொண்டேயிருக்கின்றன. அலைகளில் அகப்பட்டுக் கொண்ட மரக்கட்டை ஒன்று மேலே தள்ளப்படுவதும், கீழே ஆழ்த்தப்படுவதுமாக அலைக்கழிக்கப்படுகிறது. மனிதனும் அவ்வாறே இன்ப துன்ப அலைகளில் அலைக்கழிக்கப்படுகிறான். அலை எப்படி உருவாகிறது ? அலை காற்றினால் உருவாகிறது. அது போலவே மனிதனது உள்ளத்தில் எழும் எண்ணங்கள் எனும் காற்றினால்தான் இரு வினைகள் எனும் அலைகள் ஓயாது உதித்துக் கொண்டே இருக்கின்றன. எண்ணங்கள் ஒடுங்குமிடத்து மனமே ஒடுங்கி விடுகிறது. மனம் ஒடுங்கியவிடத்து எந்த கர்மங்களையும் அது ஏற்படுத்துவதுமில்லை, ஏற்றுக் கொள்வதுமில்லை.
ஆணவமாகவும், அகங்காரமாகவும், மமகாரமாகவும் இன்னும் பல விதமான வடிவங்களை எடுத்திருந்த மனம் ஒடுங்கி விட்டால் அதற்குப் பிறகு மனதினால் விளையும் இரு வினைகளில்லை. மனதற்ற இடத்து இன்ப துன்ப மயமான விரிகடல் இல்லை. எனவே மனம் ஒடுங்க, எண்ணம் ஒடுங்க வேண்டும். எண்ணம் ஒடுங்கினால் அதுதான் மனதின் ஒருமைப்பாடு அல்லது விழிப்பு நிலை எனப்படுகிறது. அந்நிலையில் வினைகள் அறிவினால் நிர்வகிக்கப்படுகின்றன. அறிவானது வினைகளை பகுத்து ஆராய்ந்து செயல்படுத்துமேயல்லாது, அந்த வினைகளுக்கு தன்னை கர்த்தாவாக எண்ணிக் கொள்வதுமில்லை, அவற்றை தன்னகத்தே ஏற்று பதிந்து வைத்துக் கொள்வதுமில்லை. இதை ஒருவர் விளக்க முற்படும் பொழுது மனதின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர்களுக்கு விளங்கவே விளங்காது. ஏதோ கொஞ்சம் அறிவு நிலை மேம்பட்டவர்களுக்கு ஓரளவு புரிந்தாலும் கூட அதைச் செயலுக்குக் கொண்டு வர அவர்களால் முடியாது. யார் மனதை ஒருநிலைப்படுத்தித் தன் அறிவின் பூரண ஆதிக்கத்திற்குள், விழிப்பு நிலையில் திகழ்கிறாரகளோ அவர்களுக்கு மட்டுமே இது புரியும், அவர்களால் மட்டுமே இதை சாதிக்க முடியும். முயற்சி இருந்தால் கர்மத்தை மட்டுமல்ல, காலத்தையே வெல்லலாம்.
No comments:
Post a Comment