யார் முகத்தில் முழிச்சேனோ?
"என்னைப் பார் யோகம் வரும்" என்று கழுதை கூறும் வாசகம் படித்திருப்பீர்கள். காலையில் விழித்தவுடன் யார் முகத்தில் முழித்தால் யோகம் வரும்? கழுதையா, நரியா, அல்லது கண்ணாடியில் உங்கள் முகமா? சத்குரு என்ன சொல்கிறார் பாருங்கள்...
கேள்வி: “நான் இன்று காலையில் இன்னார் முகத்தில் முதலில் விழித்தேன். அதனால்தான் எதுவும் இன்று சரியாக விளங்கவில்லை” என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போன்ற நம்பிக்கையில் ஏதாவது பொருள் இருக்கிறதா, சத்குரு?”
கிருஷ்ண தேவராயர் ஒருநாள் காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் அரண்மனை நந்தவனத்தில் உலாவச் சென்றார். பக்கத்து நாட்டு மன்னன் இவர் மேல் போர் தொடுக்க திட்டம் தீட்டியிருந்தான். எனவே மிகவும் யோசனையுடன் நந்தவனத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, தன்னைப் பார்த்துவிட்டு யாரோ அவசரமாக ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டதைப் பார்த்தார். இதைக் கவனித்த கிருஷ்ண தேவராயர், “யாரது?” என்று சத்தமாகக் கேட்டார்.
உடனே மரத்தின் மறைவிலிருந்து அரண்மனை சலவைத் தொழிலாளி தயங்கித் தயங்கி வெளிவந்தார். “ஓ, காலங்காத்தால உன் முகத்தில விழிச்சிட்டனே, இன்னிக்கு எனக்கு என்னாகப் போகுதோ,” என்று உறுமியவாறு அரண்மனைக்கு கலவரமாகத் திரும்பினார்.
அன்று காலை உணவு சாப்பிட்டவுடன் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. அன்று நடந்த முக்கியமான மந்திரிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் அவரால் சரியாகப் பங்கு கொள்ளமுடிய வில்லை.
அவருடைய கோபம் சலவைத் தொழிலாளி மேல் திரும்பிற்று. இந்த மாதிரி மோசமான முகம் நம் நாட்டிலேயே இருக்கக்கூடாது என்று சொல்லி அந்த சலவைத் தொழிலாளிக்கு மரண தண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
அந்த சலவைத் தொழிலாளி பதறிப்போய் தெனாலி இராமனிடம் நடந்ததை எல்லாம் கூறினார்.
‘இது என்ன முட்டாள்தனம்‘ என்று நினைத்து அரண்மனைக்கு சென்ற தெனாலிராமன் மன்னரைப் பார்த்தவுடனே துணியை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு சென்றார். உடனே மன்னர், “என்ன முகத்தை மூடிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு தெனாலிராமனோ, “இல்லை அபசகுனமான முகம் பார்க்க கூடாது என்றுதான் நான் முகத்தை மறைத்து கொண்டு இருக்கிறேன்” என்று சொன்னார். “இங்கே எங்கே அபசகுனமான முகம் இருக்கிறது?” என்று கேட்டார் மன்னர்.
“இல்லை, ஒரு சலவைத் தொழிலாளியைப் பார்த்ததால் உங்களுக்கு வயிற்று வலி வந்துவிட்டது. அவருக்கோ உங்கள் முகம் பார்த்ததால் உயிரே போகப்போகிறது. எது பெரிய அபசகுனமான முகம் பாருங்கள். அதனால்தான் நான் முகத்தை மறைத்துக் கொண்டு போகிறேன்,” என்று சொன்னார்.
நம் வாழ்க்கையில் நம்மால் எவற்றையெல்லாம் நன்றாக நடத்தி கொள்ளத் தெரியவில்லையோ அதற்கு எல்லாமே இன்னொருவர் மேல் பழி போட வேண்டும் என்னும் ஆசை நமக்கு இருக்கிறது. நம் முகம் மிகவும் மங்களமானதாக இருந்தால் காலையில் எழுந்தவுடன் முதன்முதலில் நம் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளலாமே.
இந்த மாதிரி முட்டாள்தனத்தை விட்டுவிட்டு, நம் வாழ்க்கையில் நடக்கின்ற நன்மை, தீமை இரண்டுக்குமே நாம் தான் முழுமையான பொறுப்பு என்பதை பார்த்துக் கொள்ளலாமே.
நமக்கு நடந்த தவறுக்கு பிறர்மேலே பழிபோட நினைப்பது மிகவும் மோசமான ஒரு மனநிலை. இந்த மனநிலை தாண்டி வந்தால்தான் ஒவ்வொரு தனிமனிதனும், சமூகமும் முன்னேற்றமாகப் போவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கும்.
No comments:
Post a Comment