உலக வாழ்வின் இயல்பு நிலை!
உலகில் எந்தப் பொருட்களை எல்லாம் கொண்டு நாம் மகிழ்ந்து இருந்தோமோ, அந்த பொருட்களை விட்டும் ஒருநாள் நாம் பிரிந்துவிடுவது நிச்சயமான ஒன்றாக இருக்கின்றது.
ஞானமுள்ளவன், திராட்சையிலே மது இருப்பதை கண்டுகொள்வதை போன்று இறைவிசுவாசிகள், உலகின் நகர்வில் மறுமையின் வரவை கண்டு கொள்கிறார்கள்.
இந்த உலக வாழ்வையே சத்தியம் என்றும், நிச்சயம் என்றும், நினைக்கின்ற மனிதனுக்கு மறுவுலக வாழ்வு என்பது கனவாகவே தோன்றுகின்றது.
உலகம் நம்முடனே இருப்பது போன்று பாசாங்கு செய்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டும் நகர்ந்து செல்கிறது. இறுதியில் மரணம் வரும் தருணம் உலகம் நம்மை விட்டும் விலகி விடுகின்றது. அதுவரை நாம் நிலையானது என்று கருதிக் கொண்டிருந்த உலக சுகங்கள் யாவும் நம்மைவிட்டும் பிரிந்து போய்விடுகின்றன.
உலகம் நிலையானது இல்லை என்பதை நன்கு தெரிந்திருந்தும், கசாப்புகாரரை நம்பி அவன் பின்னால் ஆடு செல்வதை போன்று, நம்மில் பலர் உலகத்தை நம்பி அதன் பின்னால் சென்று கொண்டிருக்கின்றோம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(உலகில்) மனிதர்கள் உறக்கத்தில் இருக்கின்றார்கள். மரணத்தின் போது விழித்துக் கொள்வார்கள்’.
கனவு நிறைந்த தூக்கத்தில் இருந்து நாம் விழித்துக்கொள்ளும் போது தான் தெரிந்து கொள்கிறோம், ‘தூக்கத்தில் இவ்வளவு நேரம் நாம் கண்டது எல்லாம் நிஜமல்ல, கனவு’ என்று. அது போன்றே மரணம் என்ற விழிப்பு நிலை ஏற்படும் போது மனிதன் உண்மையான உலகை கண்டு கொள்வான். அப்போது உலக வாழ்வு என்பது நீண்டதொரு கனவு போன்று ஆகிவிடுகின்றது.
இவ்வுலகின் இயல்பு நிலை குறித்து விளக்கம் தருவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களில் சிலரை ஊருக்கு வெளியே இருந்த ஒரு குப்பை மேட்டின் பக்கம் அழைத்துச் சென்றார்கள்.
‘நண்பர்களே! அக்குப்பை மேட்டில் கிடக்கின்ற மனித மண்டை ஓட்டை பாருங்கள். அது ஒரு காலத்தில் உங்களைப் போன்றே ஒரு மனிதனாக ஆசைகளை சுமந்த வண்ணம் இருந்தது. இப்போது சதையும் தோலும் இல்லாத எலும்பாகி விட்டது. விரைவில் அது மண்ணோடு மண்ணாகி மக்கிப் போய்விடும்’. ‘இதோ, அந்த மலத்தைப் பாருங்கள். அது ஒரு நேரத்தில் மனமும் சுவையும் மிக்க மனித உணவாக இருந்தது. இப்போது அருவருக்கத்தக்க ஒன்றாகி மக்கள் அதைக் கண்டு முகம் சுளித்து ஓடும் படியாகிவிட்டது’.
கிழிந்து கிடக்கும் கந்தல் துணிகளை பாருங்கள். அது ஒரு காலத்தில் மனிதனின் ஆடம்பரம் மிக்க ஆடையாக இருந்தது. இப்போது கந்தலாக காட்சி தருகின்றது. அங்கு கிடக்கும் மிருகங்களின் எலும்புகளை பாருங்கள். அவை எல்லாம் ஒரு நேரத்தில் மனிதர்கள் சவாரி செய்யும் அழகுமிகு வாகனங்களாக இருந்தவை என்பதை நினைத்துப் பாருங்கள், இதுதான் உலகம்.
இது அழவேண்டிய தருணம். யாரேனும் இம்மையின் நிலையறிந்து அழ விரும்பினால் அவர்கள் (நன்றாக) அழுது கொள்ளட்டும் என்றார்கள்.
உலகில் வந்த இடத்தில் சொந்தம் கொண்டாடி நாமும் மகிழாமல் பிறரையும் மகிழ விடாமல் நம்மை நாமே சங்கடத்தில் ஆழ்த்திக் கொள்கின்றோம் என்பதை அருள்மறை குர் ஆன் இவ்வாறு தெளிவுபடுத்துகின்றது.
‘எவரொருவர் நற்செயல் செய்வாரோ (அச்செயல்) அவருக்கே (நன்மை) ஆகும். எவர் தீமையைச் செய்வாரோ (அது) அவர் மீதே (பாதகம்) ஆகும். ‘உம்முடைய இரட்சகன் (ரப்பு) தன் அடியார்களுக்கு சிறிதளவும் அநியாயம் செய்பவனல்லன்’ (41–46).
உலகில் இறைவனிடமிருந்து எவருக்கும் எந்த சங்கடமும் ஏற்படுவதில்லை. மனிதர்கள் ஒருவரை மற்றவர் மதிக்காமல் எல்லை மீறி நடப்பதாலே சங்கடம் உண்டாகின்றது என்பதை மேல் சொன்ன வசனம் அறிவுறுத்திக் காட்டுகின்றது.
மனிதனை, இமைப்பொழுதில் இவ்வுலகை விட்டுப் பிரித்து மறுஉலகின் பக்கம் புரட்டி போட்டுவிடுகின்ற மரணத்தை மனிதன் மறந்தே உலகில் வாழ்கின்றான்.
அதனால்தான் அவன் போட்டி போட்டுக் கொண்டு செல்வத்தை வாரி குவிக்கின்றான். அதில் அவன் அனுபவிக்கப் போவது என்பது என்னவோ கொஞ்சம் தான். ஆனாலும் மனிதன் செல்வத்தின் மீது தணியாத தாகம் கொண்டவனாகவே அலைகின்றான்.
உலக வாழ்வின் இயல்புநிலை குறித்தும், எது வெற்றியின் பக்கம் மனிதனை அழைத்துச் செல்கின்றது என்பது குறித்தும் குர்ஆன் வலியுறுத்தி கூறும் செய்தி இதுதான்.
‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைக்க கூடியதே. உங்களுடைய பிரதிபலன் உங்களுக்கு வழங்கப்படுவதெல்லாம் (கியாமத் என்னும்) மறுமை நாளில் தான்’.
‘எனவே எவர் நரகை விட்டும் (தீமையை விட்டும்) தூரமாக்கப்பட்டு சொர்க்கம் புகுமாறு செய்யப்படுகிறாரோ அவர் திட்டமாக வெற்றியடைந்து விட்டார்’.
‘இவ்வுலக வாழ்வு (என்பது) ஏமாற்றும் (அற்ப) சுகப்பொருளே அன்றி (வேறு) இல்லை’ என்கிறது திருக்குர்ஆன் (3–185).
இறை விசுவாசிகளுக்கோ மரணத்தின் போது உலகில் எதனையும் இழப்பதற்கில்லை, அவர்கள் இறைவனை பொருந்திய வண்ணம் நிம்மதியுடனே இவ்வுலகை விட்டும் பிரிந்து செல்கின்றார்கள்.
அவர்களின் நிறைவான கூலியும் நிரந்தரமான நித்திய வாழ்வும் இப்பிரபஞ்சத்தை படைத்த இறைவனிடமே உள்ளது. அத்தகைய வெற்றியாளர்களின் கூட்டத்தில் நம்மையும் ஒருவராக ஆக்கிட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக! ஆமீன்.
No comments:
Post a Comment