Thursday, May 26, 2016

மூலாதாரம் சகல நாடிகளையும் முடிச்சிட்டு வைத்திருக்கும் இடமாகும

மூலாதாரம் சகல நாடிகளையும் முடிச்சிட்டு வைத்திருக்கும் இடமாகும்.இங்கிருந்தே சுழுமுனை நாடி மேல் நோக்கி ஆக்ஞை வரை செல்கிறது. இந்த ஆக்ஞை இரு புருவ மத்திக்கும் உள்ளே இருக்கிறது. இதற்கு மேலே உள்ளது மீதானம். இதனை விந்துத்தானம் என்றும் கூறுவார்கள். அதற்கும் மேலே பிரமரந்திரத்தானம். மூராதாரத்திலிருந்து ஓவ்வொரு ஆதாரமாக கடந்து குண்டலினியானது சகஸ்ராரத்தை அடைந்து அங்கு வெளிப்படும் சிவத்தினை காண்பார்கள் யோக சாதகர்கள். ஓவ்வோரு ஆதாரத்தை கடப்பதுவும் ஓவ்வோரு உலகத்தை கடப்பது போலத்தான் இருக்கும். இதையே ஏழு லோகங்கள் என்று கூறுவார்கள். இதில் துணைச்சக்கரங்களையும் சேர்த்து ஈரேழு பதினாழு லோகங்கள் என்பதுவும் உண்டு. ஒவ்வோரு சக்கரங்களிலும் அடங்கியுள்ள தத்துவங்களைக் கருத்தில் கொண்டு இருநூற்றி இருபத்திநான்கு புவனங்கள் என்றும் சொல்வார்கள்.
நாசி நுனி, நாக்கு நுனி, உள் மேவாய்க்கட்டை, நாக்கின் நடுவிடம், நாக்கின் அடியிடம் இந்த இடங்களில் மனதை நிறுத்தி சம்யமம் செய்தால் சந்தேகம் நீங்கும், பயம் தொலையும், விவேகம் விளையும், சித்தம் திடப்படும் என்று யோகநூல்கள் கூறுகின்றன. இரு புருவமத்திக்கு உள்ளே புருவநடுஸ்தான்தை விந்துஸ்தானம் என்றும், நெற்றிக்கண் , திருச்சிற்றம்பலம் என்றும் யோகியர்கள் கூறுவார்கள். அதுவே ஆன்மா(விந்து) என்பார்கள். எனவே அந்த இடத்தில் மனதை வைத்து தியான யோகத்தில் அமர்ந்தால் ஆத்மதரிசனம் கிட்டும் என்பார்கள். 

உறங்கும் போதுகூட இருகால்களையும் நீட்டி, இடதுகையை தலைக்கு வைத்து,இடதுபுறமாக படுத்துக்கொண்டு வாசியை மெதுவாக இழுத்துவிட்டுக் கொண்டே புருவ மத்தியில் மனதை வைத்துக் கொண்டு படுத்து உறங்க பழகிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். யோகிகள் இதை ''சிவயோக நித்திரை'' (தூங்காமல் தூங்கும் நிலை) என்பர்.
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிக்கண் டிடவோடிப்
பண்ணாமல் நிற்பது பார்க்கலுமாமே. திருமந்திரம் - 587.
லலாடஸ்தானமென்னும் நெற்றிக் கண்ணில் மின்னல் போலத் தோன்றும் ஒளியைக் குறைவின்றி பார்த்து, அதனோடு உணர்வு ஒன்றி இருப்பின் பிற முயற்சிகள் யாதும் செய்யாமலேயே அந்த ஒளியாகிய ஜோதிமயமான சிவதரிசனத்தில் திளைத்திருக்கலாம் என்று கூறுகிறார்.
உடலை உணர்கின்ற மனிதர்கள் உயிரை உணர்வதில்லை, அப்படியே உயிரை உணர்ந்த ஒருசிலரும் மூலமான சிவனை உணர்வதில்லை, அந்த சிவனை அறிந்திட்ட சிலரும் புருவமத்தியில் தியானித்தால் ஆக்ஞையில் சிவனைக் காணலாம் என்பதை அறியாமல் உள்ளனர்.
இதையே '' ஒரு பொழுதுன்னார் உடலோடுயிரை
ஒரு பொழுதுன்னார் உயிருட்சிவனை
ஒரு பொழுதுன்னார் சிவனுறை சிந்தையை
ஒரு பொழுதுன்னார் சந்திரப்பூவே. திருமந்திரம் - 588
என்கிறார்.

மணத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினை செல்ல எருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே. திருமந்திரம் - 589.
எண்ணாயிரத் தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனை கண்டறிவா ரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே. திருமந்திரம் - 590.
கோபமென்னும் நெருப்பை தவிர்த்து மேல்மாடமாகிய ஆக்ஞா ஸ்தானத்தில் ஏற்ற வேண்டிய தியான விளக்கை ஏற்றிய பிறகு கீழ் நிலையிலுள்ள மற்ற விளக்குகளும் அனைந்து போகாதபடிக்கு எல்லாவற்றிலுந் திரியை ஒருசேரத் தூண்டிவைத்தால் ஆக்ஞா ஸ்தானத்தில் ஒளிரும் விளக்கது சிவஜோதி விளக்கே. மேற்கூறியவாறு தியானம் செய்பவர்களுக்கு, பல்லாயிரம் ஆண்டு தவம் இருந்தர்க்கு காணக்கிடைக்காத சிவன், கண்ணாடியில் தெரியும் காட்சி போலதெளிவாகப் புலப்படுவார். அதாவது உயிருக்குள் உயிராய் இருக்கும் நிலை புலப்படும்.

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கு அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தான்இல்லை
தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆகலாம். திருமந்திரம் - 591
கண்களிரண்டையும் புருவமத்தியில் வைத்து தியானித்தால், தேகம் வாடாது, உடல் அழியாது, பிராணன் இயங்காது, உலக உணர்வு அற்றுப் போகும், மலங்கள் நீங்கி சிவனாகவே ஆகலாம்.
பிராணயாமம் செய்து புருவமத்தியில்(நாசி நுனியில்) தியானம் செய்து, மேல் நோக்கி செல்லும் நாடிகள் இடை, பிங்கலை மூலம் அசைவற்று இருப்பவர்களுக்கு மரண பயம் கிடையாது. இதையே...
நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட்டு
உயர்விழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரறா நாடியே தூங்க வல்லார்க்கு
பயனிது காயம் பயம் இல்லைதானே. திருமந்திரம் - 592. என்கிறார்.

ஆக்ஞா என்றால் அளவில்லாத சக்தி, ஆளுமை, கட்டுப் படுத்தும், தலைமை, அதிகாரமுள்ள எனப் பல பொருள் கொள்ளப் படுகிறது. இது ஒரு 6 வது உயர் நிலைச் சக்கரம். இந்தச் சக்கரம் வலுவடைந்தால் உடல், மனம், ஆன்மா மூன்றும் தூய்மையடைந்துவிடும். தேஜஸ் உண்டாகும். வசீகரம் ஏற்படும். எல்லாம் ஒன்றாகத் தோன்றும். அன்பு பெருகும். தீர்க்க தரிசனம் ஏற்படும். கூடுவிட்டு கூடுபாயும் சித்தி கைகூடும். பிற ஐந்து ஆதாரங்களைக் கடந்தவர்கள் மீண்டும் கீழ்நிலைக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒருமுறை ஆறாவது ஆதாரத்தில் நுழைந்தவர் மூண்டும் கீழ்நிலை ஆதாரங்களின் ஆதிக்கத்திற்கு செல்வதில்லை. இது இடைகலை, பிங்கலை நாடிகளுக்கு அப்பாற்பட்டு நேரடியாக சுழுமுனையோடு தொடர்பு கொணடுள்ளது. இந்த ஆதாரம் முழுமையாகச் செயல்படும் ஞானிகளின் உடலும், மனமும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அவர்களையே பரமஹம்சர் என்பார்கள். அவர்கள் நினைத்த காரியமெல்லாம் சித்தியாகும். விஞ்ஞான ரீதியாக நம் மூளையிலுள்ள பீனியல் சுரப்பி இந்த ஆக்ஞாவோடு தொடர்புகொண்டுள்ளது. பீனியல் சுரப்பி ஒளியினால் தூண்டப்படும் தன்மையுடையது. ஆறாவது ஆதாரம் வலுப்பெற்ற ஞானியர்க்கு தலையைச்சுற்றி ஒளிவட்டம் தோன்றும். இந்த ஒளி பீனியல் சுரப்பியைத் தூண்டி அதன் செயல்பாடுகளை வலிமைப்படுத்தும். 6 வது மற்றும் 7வது ஆதாரங்கள் ஓம் என்ற மந்திரத்தால் வலுப்பெறும். முழுமையாக வலுப்பெற்றவர்களுக்கு உச்சாடனம் தேவையில்லை. சதாகாலமும் அவர்கள் உடலில் இந்த மந்திரம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.ஒரு சிலரைத் தவிர, 35 வயதுக்கு மேல்தான் இந்த ஆதாரம் வலுப்பெறும். விசுத்தியில் தூய்மையடந்து ஆன்மா, கர்ம வினைகள் அகன்று ஆக்ஞாவில் நுழைந்தவுடன் பரமாத்மா எனும் கடலில் கரையத் துவங்கும்.

No comments:

Post a Comment