Tuesday, January 3, 2017

மனோசக்தி

சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை மருத்துவமனையில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்காமல் “உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு சுகவீனம்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.

ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ “பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை” என்றாள்.

பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. ’வீடியோ கேம்’களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமி களைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது.

இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார் கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காண்பிக்கவும் செய்தார் கள்.

கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையமுடியும். அதற்கு சில பயிற்சிகள் தேவைப் படுகின்றது. இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதிப்படுத்தவேண்டும். பின் நம் மனத்திரையில் நம் இலக்கை நாம் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடவேண்டும். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வறண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.

அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேர்க்கவேண்டும். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வோமோ அதை உணரவேண்டும். அந்த தருணத்தில் நமக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பார்க்கவேண்டும். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் நம் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நாம் எதிர்பார்த்திராத திறமைகள் நமக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நாம் கண்டிப்பாக அடைய முடியும். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்.

நமது எண்ணங்களே நமது ஆழ்மன உணர்வை நிர்ணயிக்கின்றன. ஆழ்மனமே நம்மை வழி நடத்துகிறது. எனவே நமது எண்ணம் தூய்மையாய் இருப்பது, மனதிற்கு நல்லது! உடம்பிற்கு நல்லது!
சூழ்ந்திருக்கும் சுற்றத்துக்கும் நட்புக்கும் நல்லது.

No comments:

Post a Comment