Thursday, May 5, 2016

மனம் எவ்வாறு செயல்படுகிறத

ு?
மனதிற்குள் என்ன நிகழ்கிறது?
நாம் ஒரு பொருளை பாா்க்கும் போது
என்ன நிகழ்கிறது?
பிரபஞ்சம் என்பது என்ன?
இதை தெளிவாக புாிஞ்சு கொண்டால்
நாம் தெளிவு பெற்று விடுவோம்.
நாம் இவற்றிற்கெல்லாம் வெறும் சாட்சி
என்பது நன்றாக புரிந்து விடும்.
******************************************

இவைபற்றி தெரிந்து கொள்வோம்.

இகற்கு விரிவான விளக்கம் தேவைப்படுகிறது.

சித்தம் என்றால் என்ன,
விருத்திகள் என்றால் என்ன என்பதை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

எனக்குக் கண்கள் உள்ளன.
ஆனால் காண்பவை அவை அல்ல.

அதற்குரிய மையத்தை மூளையிலிருந்து அகற்றி விடுங்கள் கண்கள் திறந்திருக்கும்,
பொருட்களின் பிம்பங்கள் விழித்திரையில் விழவும் செய்யும். ஆனாலும் கண்கள் காணாது.
எனவே கண்கள் காட்சிப்பொறிகள் அல்ல.

அவை வெறும் இரண்டாந்தரக் கருவிகளே.

காட்சிப் பொறி மூளையிலுள்ள ஒரு நரம்பு மையத்தில் உள்ளது. பார்ப்பத்தற்குக் கண்கள் மட்டுமே போதாது.

சிலவேளைகளில் மனிதன் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குகிறான்.

ஒளி இருக்கிறது,
படம் இருக்கிறது.

ஆனால் மூன்றாவதாக ஒன்று தேவைப்படுகிறது.

அதுதான் மனம்.

மனம் பார்வைக்கான பொறியுடன் இணைய வேண்டும்.

கண் புறக்கருவி;

மூளை மையமும் அதனுடன் செயல்புரிய மனமும் தேவைப்படுகின்றன,.

ஓசையுடன் ஒரு வண்டி தெரு வழியே செல்கிறது.

நீங்கள் ஓசையைக் கேட்பதில்லை. ஏன்?

உங்கள் மனம் கேட்கும் பொறியுடன் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை.

முதலில் கருவி,

இரண்டாவது புலன்,

மூன்றாவது, மனம் இந்த இரண்டுடனும் இணைதல்.

மனம் பொருளின் பதிவை உள்ளே எடுத்துச் சென்று, இன்னதென்று தீர்மானிக்கின்ற புத்தியிடம் கொடுக்கிறது.

புத்தியிலிருந்து எதிர்ச் செயல் வெளிப்படுகிறது.

இந்த எதிர்ச் செயலுடன் கூடவே நான் உணர்வும் வெளிப்படுகிறது.

பின்னர் செயல் மற்றும் எதிர்ச் செயலின் சேர்க்கை, உண்மை ஆன்மாவாகிய புருஷனிடம் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சேர்க்கையின் வழியாக ஆன்மா பொருளை உணர்கிறது.

இந்திரியங்கள், மனம், புத்தி, நான் உணர்வு-இவற்றின் தொகுதியே அந்தக்கரணம். இவை சித்தத்தின் வேறுபட்ட செயல்பாடுகள் மட்டுமே. சித்தத்தில் உள்ள எண்ண அலை விருத்தி(நேரடிப் பொருள்: சுழி) என்று அழைக்கப்படுகிறது.

எண்ணம் என்றால் என்ன? ஈர்ப்பு, சக்தி, விலக்கு சக்தி போன்ற ஓர் ஆற்றலே எண்ணம். இயற்கையின் எல்லையற்ற ஆற்றல் சேமிப்புக் கிடங்கிலிருந்து சிலவற்றைச் சித்தம் எடுத்து, தனக்குரியதாக்கி, எண்ணமாக வெளியே அனுப்புகிறது. உணவின் மூலமாக நமக்குச் சக்தி கிடைக்கிறது. உணவிலிருந்தே உடலின் இயக்கத்திற்கான சக்தி கிடைக்கிறது. மற்ற நுண் சக்திகளைச் சித்தம் எண்ணமாக வெளியே அனுப்புகிறது. இதிலிருந்து மனம் உணர்வுப் பொருளல்ல என்பது தெரிகிறது. இருப்பினும் உணர்வுடையதுபோல் தோன்றுகிறது.

ஏன்?

ஏனெனில் உணர்வுப் பொருளான ஆன்மா அதன் பின்னால் உள்ளது உணர்வுப் பொருள் நீங்கள் மட்டுமே. மனம் என்பது புறவுலகை அறிந்துகொள்வதற்கான ஒரு கருவி, அவ்வளவு தான்.

நீரில் ஒரு கல்லை எறிந்தால், அதற்கு எதிர்ச் செயலாக நீர் அலை வடிவில் எறியப்படுகிறது.

அதுபோல், அறியப்பட முடியாத பொருளிலிருந்து வரும் சமிஜ்ஞை, மனத்தைத் தாக்குகிறது, மனம் புத்தகத்தின் வடிவை எதிர்ச் செயலாகத் தருகிறது. உண்மையில் பிரபஞ்சம் என்பது மனத்தில் எதிர்ச் செயலை உண்டாக்குகின்ற ஒரு நிமித்தம் மட்டுமே, புத்தக வடிவமோ, யானை வடிவமோ, மனித வடிவமோ புறத்தில் இல்லை. நாம் அறிவதெல்லாம் புறப் பொருட்களினால் மனத்தில் உண்டாகும் பிரதிச் செயலை மட்டுமே.

உதாரணத்திற்கு முத்துச் சிப்பியை எடுத்துக்கொள்ளுங்கள்.

முத்து எவ்வாறு உண்டாகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

நுண்ணுயிரி ஒன்று சிப்பியின் ஓட்டிற்குள் புகுந்து உறுத்தலை உண்டாக்குகிறது. உடனே சிப்பி அதைச் சுற்றி ஒரு திரவத்தைச் சொரிந்து அந்த நுண்ணுயிரியை மூடுகிறது. இந்தத் திரவமே முத்து ஆகிறது. நமது சொந்தப் பூச்சே நாம் அறிகின்ற இந்தப் பிரபஞ்சம், உள்ளே உள்ள நுண்ணுயிரி உண்மையான பிரபஞ்சம். சாதாரண மனிதன் இதைப் புரிந்துகொள்வதில்லை. ஏனெனில் புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது திரவத்தால் பூசி விடுவதால் அந்தப் பூச்சையே காண்கிறான். விருத்திகள் என்றால் என்ன என்பது இப்போது நமக்குத் தெரிகிறது.

உண்மை மனிதன் மனத்திற்குப் பின்னால் இருக்கிறான்.

மனம் அவன் வசத்தில் உள்ள ஒரு கருவி. அவனது உணர்வே மனத்தின் வழியாக ஊடுருவி வெளிப்படுகிறது. நீங்கள் பின்னால் நிற்கும்போதுதான் மனம் உணர்வு மயமாகிறது.

உணர்வுப் பொருளாகிய நீங்கள் மனத்தைக் கைவிட்டீர்களானால் அது சிதறி மறைகிறது.

சித்தம் என்றால் என்ன என்பது நமக்குத் தெரிகிறது.

அது மனத்தின் மூலப்பொருள். புறக் காரணங்கள் தூண்டுவதால் அதில் எழும் அலைகளும் சுழிகளுமே விருத்திகள்.

இந்த விருத்திகளே நமது பிரபஞ்சம்.

ஒரு குளத்தின் மேற்பரப்பை அலைகள் மூடியிருந்தால் அடியை நாம் காண்பதில்லை. அலைகள் அடங்கி, நீர்ப்பரப்பு அமைதியுற்றால் மட்டுமே அடிப்பகுதியைச் சிறிதாவது காண முடியும். நீர், சேறு கலந்ததாக இருந்தாலோ கலங்கியிருந்தாலோ அடியைக் காண முடியாது. நீர் தெளிந்து அலையற்று இருந்தால்தான் அடிப்பகுதியைக் காண முடியும். குளத்தின் அடியே உண்மையான நமது சொந்த ஆன்மா, குளமே சித்தம், அலைகளே விருத்திகள்.

மனத்திற்கு மூன்று நிலைகள் உண்டு; ஒன்று தமஸ் என்று அழைக்கப்படும். இது விலங்குகளிடமும் மூடர்களிடமும் காணப்படுவது. தீமை செய்ய மட்டுமே இது செயல்படுகிறது. இதைத் தவிர வேறு எந்த எண்ணமும் மனத்தின் இந்த நிலையில் எழுவதில்லை. அடுத்தது மனத்தின் செயல்படு நிலை. அதாவது ரஜோ குண நிலை, அதிகாரமும் இன்ப நுகர்ச்சியுமே அதன் முக்கிய நோக்கங்கள். நான் அதிகாரம் பெற்று, மற்றவர்களை அடக்கி ஆள்வேன் என்ற எண்ணம், மூன்றாவதாக, அமைதியும் சாந்தமும் நிறைந்த சர்வ நிலை உள்ளது. இங்கே அலைகள் ஓய்ந்துவிடுகின்றன. மனமாகிய குளத்தின் நீர் தெளிவாக இருக்கிறது. இது செயலற்ற நிலையல்ல, மாறாக தீவிர செயல்படு நிலையாகும். அமைதியாயிருப்பதே ஆற்றலின் மிகப் பெரிய வெளிப்பாடு, செயலில் ஈடுபடுவது எளிது. கடிவாளங்களை விட்டுவிட்டால் குதிரைகள் அவை விரும்பிய திசையில் உங்களை இழுத்துச் செல்லும். இதை எல்லோராலும் செய்ய முடியும். ஆனால் பாய்ந்தோடும் குதிரைகளை இழுத்துப் பிடித்து நிறுத்துபவனே வலிமையுடையவன். அவற்றின் போக்கில் விடுவது, அல்லது அடக்குவது, இரண்டில் எதற்கு அதிக பலம் வேண்டும்? மந்தமாக இருப்பவன் சாந்தமானவன் அல்ல மந்த நிலையையோ சோம்பலையோ தவறாக சத்வம் என்று எண்ணிவிடக் கூடாது. மனத்தின் அலைகளை அடக்கியாள்பவனே சாந்தமானவன். வலிமையின் கீழ் நிலை வெளிப்பாடே செயல். அமைதியோ அதன் உயர் நிலை வெளிப்பாடு.

சித்தம் தன்னியல்பாகிய தூய நிலைக்குத் திரும்பிச் செல்லவே எப்போதும் முயல்கிறது. ஆனால் புலன்கள் அதைப் புறத்தே இழுக்கின்றன. அதை அடக்குவது, புறத்தே செல்வதான அதன் போக்கைத் தடுப்பது. அதை உட்புறமாகத் திருப்பி உணர்வுமயமான புருஷனை நோக்கிச் செல்லும் பாதையில் செலுத்துவது இதுவே யோகத்தின் முதற்படி, ஏனெனில் இந்த வழியில்தான் சித்தம் அதற்குரிய சரியான பாதையில் போக முடியும்.

மிகத் தாழ்ந்தது முதல் மிகவுயர்ந்ததுவரை எல்லா பிராணிகளிலும் சித்தம் உள்ளது. ஆனால் மனிதனிடம் தான் அது புத்தியாக மிளிர்கிறது. சித்தம் புத்தி வடிவம் பெறாமல் இந்தப் படிகள் வழியாகச் செயல்பட்டு ஆன்மாவிற்கு முக்தியளிக்க அதனால் இயலாது. ஒரு பசுவுக்கோ நாய்க்கோ உடனடியாக முக்தி கிடைப்பது இயலாதது. ஏனெனில் அவற்றின் சித்தம் புத்தியாக மாற முடியாது.

சித்தம் கீழ்க்காணும் ஐந்து நிலைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அவை சஞ்சல நிலை (க்ஷிப்தம்), மந்த நிலை(மூடம்), பலமுக நிலை(விக்ஷிப்தம்) ஒருமுக நிலை(ஏகாக்ரம்). மூடுநிலை(நிருத்தம்) என்பன. சஞ்சல நிலையில் அது செயலில் ஈடுபடுகிறது. இன்ப துன்பங்களை வெளிப்படுத்தும் போக்குக் கொண்டதாக இருக்கிறது. மந்த நிலையில் அது மந்தமாக உள்ளது. தீமையை நாடுவதாக உள்ளது. இவற்றுள் முந்திய நிலை தேவர்களுக்கும் வானவர்களுக்கும், பிந்திய நிலை அசுரர்களுக்கும் இயல்பானது என உரையாசிரியர் கூறுகிறார். பலமுக நிலை என்பது சித்தம் ஒரு மையத்தில் தன்னை நிலைநிறுத்த முயலும் நிலையாகும். ஒருமுக நிலையில் அது ஒருமைப்பட முயல்கிறது. மூடுநிலை நம்மைச் சமாதி நிலையில் சேர்க்கிறது.

-பதஞ்சலி யோக சூத்திரம்
-விவேகானந்தர்.

No comments:

Post a Comment