Friday, December 16, 2016

மனதை அடக்குவது எப்படி?

மனதை அடக்குவது எப்படி?

ரமணாச்ரமத்தில் பலவிஷயங்கள் பற்றி விவாதம் நடக்கும். சிலவற்றிற்கு பகவான் பதில் சொல்லுவார். சிலவற்றிற்கு பதில் சொல்லாமல் பேசாமல் அமர்ந்திருப்பார்.

ஒருசமயம் மனிதன் தன்னுடைய மனதை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது பற்றி விவாதம் நடந்தது.

ஒரு சில பக்தர்கள் தியானம் செய்யலாம் என்றனர். சிலர் இறை நாமத்தை உச்சரித்து மனதை அடக்கலாம் என்றனர். சிலர் சாத்வீக உணவாக எடுத்துக் கொள்ளலாம் என்றனர். இப்படிப் பலரும் பலவிதமாகத் தங்கள் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். பிறகு பகவானின் கருத்தென்ன என்பதை அறிய விழைந்தனர்.

பகவான், அவர்களிடம், “நான் விருபாட்ச குகையில் தங்கி இருக்கையில் ஊருக்குள் சென்று பிட்சை எடுத்துக் கொண்டு வருவதே எங்களுக்கு உணவு! அது வெறும் அன்னம்தான். தொட்டுக் கொள்ள என்று எதுவும் இருக்காது. சில சமயம் கிடைத்த உணவு எல்லோருக்கும் போதாது. அப்பொழுது அதில் நிறைய நீர் விட்டுக் கரைத்து, கஞ்சியாக ஆக்கி அனைவரும் பகிர்ந்து கொள்வோம்! இந்தக் கஞ்சிக்குச் சிறிது உப்புச் சேர்த்தால் சுவையாக இருக்குமே என்று தோன்றும். ஆனால், நாக்கு கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையாது; இன்றைக்கு உப்பு வேண்டும் என்று கேட்டால், நாளைக்கு பருப்பு, காய்கறி என்று கேட்கத் தோன்றும். இப்படியாகத் தான் இது ஆரம்பிக்கும். இப்படி நமது தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஒரு முடிவே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆசைகளை உடனுக்குடன் முடிவு கட்டி விட வேண்டும். அலைவதும் நிலையற்றதுமான இம்மனது எதன் வசம் திரிகிறதோ அதனிடமிருந்து அம்மனதை மீட்டு ஆன்மாவின் கட்டிற்குள் கொண்டு வர வேண்டும். மனம் அடக்குதல் என்பது இதுதான். இச்சாதனைதான் துறவு வாழ்க்கைக்கு முதற்படி” என்றார்.

பக்தர்களும் உண்மை தெளிந்தனர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய!

https://ramanans.wordpress.com/

No comments:

Post a Comment