தீராத தாகம் எனக்கு இருக்கிறது. ஆனால், பணம் நிறைய செலவாகும் போலத் தெரிகிறதே ? வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் என்னைப் போன்றவர்களுக்குக் கற்றுத் தரும் குரு யார் என்று தயவுசெய்து அடையாளம் காட்டுங்கள் ஐயா....
இராம் மனோகர் - நீங்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிப்பதாகச் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. ஸமார்ட் போன் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு பேஸ்புக், வாட்ஸ் ஆப் என்று அக்கௌண்ட் இருக்கிறது. குறைந்தது மாதம் 500 ரூபாயாவது நெட்டுக்கு செலவு செய்வீர்கள் என்று தோன்றுகிறது. இதெற்கெல்லாம் பணம் செலவு செய்ய முடிந்த உங்களுக்கு வாழ்வில் உன்னதமான நிலையை அடைவதற்கு, வாழ்வின் உயர்ந்த நோக்கத்தை அடைவதற்கு செலவு செய்ய முடியாதா என்ன ? மற்ற இடங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. மனவளக் கலை மன்றத்தில் 500 ரூபாய்தான் வசூலிக்கிறார்கள். 12 நாட்கள் தினமும் ஒன்றரை மணி நேரம் கற்றுத் தருகிறார்கள். எளிய முறை உடற்பயிற்சி (யோகா), காயகல்பம், இறை நிலை விளக்கம் ஆக்கினை, துரியம், துரியாதீதம், சாந்தி போன்ற தியானப் பயிற்சிகள் என அனைத்தையும் கற்றுத் தருகிறார்கள். இவற்றை ஒருவன் ஒழுங்காகக் கடைபிடித்தாலே போதும். அறிவில் தெளிவு என்பது தனக்குத் தானே ஏற்பட்டு விடும். இப்படியிருக்க வறுமையை காரணம் காட்டுவது உங்கள் இயலாமையையே குறிக்கிறது.
வறுமை என்றால் செல்வம் இல்லாததுதான் என்று நீங்கள் கருத்தினால் அது தவறு. ஏராளமான செல்வம் இருந்தும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகிறவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்களே !!! முன்னதுக்கு செல்வமின்மை காரணம், பின்னதுக்கு அறிவின்மை காரணம். வறியவர் என்ற சொல்லுக்கு செல்வமில்லாதவர் என்றும், அறிவில்லாதவர் என்றும் இரண்டு பொருள் உண்டு. பிறப்பால் வறுமைக்கு ஆளாகித் துனபப்படுவது கொடுமைதான். நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அதை நாம் அறிவின் திறத்தால் மாற்றியமைக்க முடியும். ஆனால், எல்லா செல்வங்கள் இருந்தும் தன் அறிவின்மையால் அனைத்தையும் இழந்து போகிறவன் நிலை பரிதாபமல்லவா ? இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன ? நமக்கு வேண்டியது செல்வமில்லை. அறிவில் தெளிவுதான். அது இருந்து விட்டால் அனைத்து செலவங்களும் நம்மைத் தேடி வந்து விடும் என்பதுதான் உண்மை. வருவது மட்டுமல்ல, நம்மிடம் நீடித்து, நிலைத்து நிற்கும்.
நமக்கு உண்மையான அறிவை யார் தர முடியும் ? ஒன்று இறைவன் தர வேண்டும். இல்லையென்றால் நமக்கு நாமே அனுபவங்கள் மூலமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அருணகிரி நாதர் பாடும் பொழுது,
''கரவா கியகல் வியுளார் கடைசென்று
இரவா வகைமெய்ப் பொருள்ஈ குவையோ !!
குரவா ! குமரா ! குலிசா யுத ! குஞ்
சரவா ! சிவயோ கதயா பரனே !''
கரவாகிய கல்வியுளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிச ஆயுத குஞ்-
-சரவா சிவயோக தயாபரனே
என்கிறார். தமிழ் எப்படி விளையாடுகிறது பாருங்கள். குருவே ! என்றும் அழியாத இளமையுடையவனே ! வச்சிராயுதத்தை உடையவனே ! யானையை ஊர்தியாகக் கொண்டவனே ! சிவ யோகத்தில் திளைத்திருப்பவனே ! அதாவது மெய் ஞான குருவே, சிவ யோகத்தால் என்றும் அழியாத இளமையைப் பெற்றவனே, அதுவும் எப்படிப்பட்ட யோகம் ? வச்சிராயுதம் எனும் முதுகுத் தண்டு வழியாக சக்தியை மேலேற்றியவனே, அதுவும் எதன் மூலம் ஏறினார் ? யானை மூலம். அதாவது யானை வயிறு நிறைய காற்றை இழுத்து, தும்பிக்கை வழியாக நீளமாக விடும். அப்படிப்பட்ட வாசி யோகத்தின் மூலமாக சிவ யோகத்தில் திளைத்து மெய் ஞானத்தை பெற்றவன் முருகன் என்பது நுட்பம். அதெல்லாம் சரி முருகனிடம் என்ன வேண்டுகிறார் ? தாம் கற்ற கல்வியை அதாவது உண்மைப் பொருளை பிறருக்குப் பயன்படுமாறு எடுத்துச் சொல்லாது வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சகக் கல்வியாளர்களிடம் சென்று நான் இரந்து கேளாத வண்ணம் தேவரீர் உண்மை ஞானப்பொருளை எனக்கு ஈந்து அருள்புரிவீரோ என்று கேட்கிறார்.
எனவே, மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது என்பது மிகவும் சொற்பமே. நமக்கு நாமே கற்றுக் கொள்ள வேண்டியதுதான் நிறைய இருக்கிறது. என்னதான் ஒருவன் பட்டப் படிப்புகள் அனைத்தையும் கற்றிருந்தாலும், வாழ்க்கையைப் பற்றி கற்றுக் கொள்ள தெருவுக்குதான் வர வேண்டும். சுய அனுபவம்தான் ஒருவனை முழுமைப்படுத்தும். ஒரு கடையை திறந்து வைப்பதற்காக பிரபலமான ஆள் ஒருவரை தேடிப்படித்து அழைத்து வருகிறார்கள். ரிப்பன் வெட்டுவதோடு அவர் வேலை முடிந்து விடுகிறது. அதற்குப் பிறகு அந்தக் கடைக்காரர் தனது சொந்த அறிவின் திறத்தாலும், தன் திறமையின் மூலமாகவும்தான் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அது போலத்தான் இதுவும். தொட்டுக் காட்டுவதோடு இவர்கள் வேலை முடிந்து விடுகிறது. அதற்குப் பிறகு நாம்தான் நம் சுய முயற்சியால், தன்னம்பிக்கையோடு, தைரியமாக, விடா முயற்சியை மேற் கொண்டு மேலேற வேண்டும். ஞானம் என்பது அறிவில் தெளிவுதான். அது அனுபவத்தால்தான் ஏற்படுமையன்றி செல்வத்தால் அல்ல. நம் அனுபவமே நமக்கு சிறந்த ஆசான். மற்றவர்களுடைய அனுபவத்தை நாம் ஒரு விளக்கைப் போலவோ, கைத் தடியைப் போலவோ, கை காட்டி மரத்தைப் போலவோ பயன்படுத்திக் கொள்ளலாம் அவ்வளவுதான். இதற்கு செல்வம் எந்த வகையிலும் உதவப் போவதில்லை. பகுத்து அறியும் அறிவுதான் வேண்டும்.
No comments:
Post a Comment