==========
சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். பதினெண் சித்தர்களில் ஒருவராவார். இவர் எந்நாட்டைச் சேர்ந்தவர், எந்த காலத்தில் வாழ்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து உள்ளது. சித்தர் பாடல்கள் திரட்டில் இவருடைய பாடல்களே மிக அதிகம் என்றும் கூறப்படுகின்றது. புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்வதை விமர்சிப்பதாகவே இவரது பாடல்கள் அமைந்துள்ளன. அதற்கான காரணம் கடவுள் நம்முள் இருக்கிறான் வெளியே தேடுவது மடமை என்பதாக கூறுகின்றார். இவரது பாடல்கள் ‘சிவவாகியம்’ என அழைக்கப்படுகிறது. இவருடைய பாடல்களில் சிவ என்னும் சொல்லும் அதிகமாக உள்ளது.
இவர் சமாதியடைந்தது கும்பகோணத்தில் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. எனினும் திருப்பூர், காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் தங்கியிருந்து அங்குள்ள முருகனை வழிபட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
*நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோ டணிந்துநெற்றி மைதிலர்த மிட்டுமே
மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள்
வேசரிகளம் புரண்டவெண் ணீறாகும் மேனியே.
விளக்கம்:-
உடல் முழுவதும் திருநீற்றையும் சந்தனத்தையும் பூசிக்கொண்டு, நெற்றியில் கண்மையினால் கறுப்புத் திலகமிட்டு, ஈசன் மீது மட்டற்ற நேசமுடையவர் போல் நடித்து, அன்றாடம் பூசைகள் செய்து, மற்றவர் மதிக்க, பெரிய பக்தராக வேடம் போட்டு மோசம் பொய் புனைசுருட்டு போன்ற அத்தனை கள்ளத்தனத்தையும் செய்து வாழ்ந்து வரும் மூடர்களே! இதன் விளைவு என்ன தெரியுமா? போர்க்களத்தில் வெட்டுப்பட்டு இரண வேதனையால் புரளும் குதிரையைப் போல் உங்கள் உடம்பில் இரண வேதனைகள் உண்டாகி, விராட்டி எரிந்து சாம்பலாவதைப் போல் உங்கள் உடலும் எரிந்து சாம்பலாகும்.
*நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!
விளக்கம்:-
நாதன் உனக்கு உள்ளேயே இருக்கும் போது வெளியில் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கிறாயே... போலியான சடங்குகள் எதற்கு? உனக்குள் இருக்கும் ஜோதியைத் தேடு. அதை விடுத்து வெளியில் இறைவனைத் தேடிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. கறி சமைக்கப் பயன்படும் பாத்திரமானது வெறும் பாத்திரம் மட்டுமே. அதனால் அதன் சுவையை உணர்ந்து கூற முடியாது. அது போல உருவ வழிபாடும், பூஜை, ஆராதனைகளும் இறைவனை உணர்வதற்கான பாவனையேயன்றி அவையே இறைவனாகாது. அதன் மூலம் இறைவனை உணர்ந்து அடைய வேண்டுமே தவிர, அதுவே முழுமையானதல்ல என்கிறார் சிவவாக்கியசித்தர்.
No comments:
Post a Comment