Saturday, September 17, 2016

எண்ணங்களை கட்டுப்படுத்த

நண்பர் - தியானம் செய்ய வேண்டும் என்று கண்களை மூடி அமர்ந்த சற்று நேரத்திலெல்லாம் மனதில் பலப்ப எண்ணங்கள் தோன்றி மனம் எங்கெங்கோ போய் விடுகின்றது. எண்ணங்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. நான் என்ன செய்வது ?

இராம் மனோகர் - ஆரம்ப நிலைகளிலேயே தியானம் என்பது உட்கார்ந்து மட்டும் செய்யக் கூடியது என்ற தவறான கருத்துதான் இதற்குக் காரணம். உட்கார்ந்து தியானம் செய்வதற்கு முன் நாம் நம் மனதை பக்குவப்படுத்த வேண்டியது மிகமிக அவசியமாக இருக்கிறது. அட்டாங்க யோகத்தில் ஆறு படித்தரங்களைக் கடந்த பிறகுதான் தியானம் வருகிறது. ஏன் அவ்வாறு அமைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு அடர்ந்த காட்டிற்குள் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்திக் கொண்டே பாதையை அமைத்துக் கொண்டு செல்கிறோம். போகிற வழித்தடங்களிலெல்லாம் அடையாளத்தை குறித்து வைத்து விட்டு செல்கிறோம். காரியம் முடிந்தவுடன் எந்த வழியில் வந்தோமோ, அதே வழியில் அந்த அடையாளங்களைப் பின்பற்றி மீண்டு வருகிறோம். அப்படித்தான் வர வேண்டும். இல்லையென்றால் காட்டிற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அது போலத்தான் நம் மனமும் இருக்கிறது. எண்ணங்களால் ஆன அடர்ந்த கானகம்தான் நம் மனமும்.

இந்த எண்ணங்களெல்லாம் பலவிதமான செயல்களாக கிளைவிட்டு, பரந்து, விரிந்து கிடக்கிறது. அந்த செயல்களை ஒவ்வொன்றாக ஒடுக்கிக் கொண்டே வந்தால்தான் நாம் புறப்பட்ட இடத்திற்கு போய் சேர முடியும். ஆனால், நாம் அவ்வாறு செய்யாமல் தடாலடியாகக் காட்டிற்குள் நுழைந்து மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் உழன்று கொண்டிருக்கிறோம். இதற்குத்தான் கண்ணன் கர்மத்தில் கவனம் வை, பலனைப் பற்றி முதலிலேயே கவனம் கொள்ளாதே என்று சொன்னார். புததர் தன் சீடர்களுக்கு தியானம் கற்றுக் கொடுக்க இதே யுக்தியைத்தான் கையாண்டார். அதாவது காயானுபாசனா, வேதனானுபாசனா, சித்தானுபாசனா, தம்மானுபாசனா நான்கு விழிப்புணர்வு நிலைகளை போதித்தார். அது எவ்வாறு எனில், முதலில் மூச்சை கவனிக்க வேண்டும். அப்படி மூச்சை கவனிக்கும் பொழுதே மனதில் எழும் உணர்வுகள், உடலில் தோன்றும் வலி போன்ற உணர்ச்சிகள் இவற்றைக் கவனிக்க வேண்டும்.

மேலும் நிற்றல், நடத்தல், அமர்தல், கிடத்தல் நான்கு நிலைகளின் நிமித்தம் உடலில் ஏற்படும் அசைவுகளைக் கவனிக்க வேண்டும். உச்சி, முதல் பாதம் வரை தோலால் மூடப்பட்டிருக்கும் நமது உடலின் உறுப்புகளை ஒவ்வொன்றாக கவனிக்க வேண்டும். இந்த உடலில் ஐம்புலன்களாக விளங்கும் பஞ்ச பூதங்களை கவனிக்க வேண்டும். இப்படிப் புற விஷயங்களை கவனிப்பதின் மூலம் ஏற்படும் மனதின் நுட்பமான நிலையில்தான் உள்ளுணர்வுகளை கவனிக்க முடியும் என்பது கோட்பாடு. இதெல்லாம் எதற்காக என்றால், அலைத்து கொண்டேயிருக்கும் மனதிற்கு ஒரு குறிப்பிட்ட பணியைக் கொடுத்து விட்டோம் என்றால், பிற விஷயங்களில் அது அலைவது தடுக்கப்படும் என்பதற்காகத்தான். யோக சூத்திரத்தில் இதை பிரத்தியாகாரம், தாரணை என்று சொல்வார்கள். தாவிக் கொண்டே இருக்கும் மனம் எனும் குரங்கை ஒரு நிலையில் நிறுத்தவதற்குத்தான் இத்தகைய பயிற்சிகள் சொல்லப்பட்டன.

எனவே நீங்கள் உட்கார்ந்து தியானம் செய்வது தவறில்லை. ஆனால், மனதை ஒரு நிலைப்படுத்த இது போன்ற பயிற்சிகளையும் கைகொள்ளுவது அவசியமாகிறது. நடக்கும், பொழுதும், உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், கிடக்கும் பொழுதும், பல் துலக்கும் பொழுதும், குளிக்கும் பொழுதும், எந்த ஒரு செயலைச் செய்தாலும் ஒரு நேரத்தில் ஒரு செயல், அதிலே மட்டும்தான் கவனம் என்ற நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு கட்டமாக, முழு மனதுடன், உணர்வு பூர்வமாகச் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உதாரணமாக நாம் ஒரு சொல்லை விரைவாக வாசித்து விடுவோம். ஆனால், ஒரு குழந்தை அதே சொல்லை எழுத்து கூட்டி உச்சரித்துதான் பொருள் கொள்ளும். அது போலவே நாமும் ஒவ்வொரு செயலையும் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பிரித்து, அதை உணர்ந்து செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு மனம் ஒரு நிலை அடையும்.

விரைவாக தியான அனுபூதியை அடைய வேண்டும் என்ற ஆசைதான் இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணம். புறப் பொருட்களின் மீது கொள்ளும் ஆசை எப்படி நமக்கு துன்பத்தை விளைவாகத் தருகிறதோ, அது போலவே தியானத்தில் கொள்ளும் இந்த அவசரமும் நமக்குத் துன்பத்தையே ஏற்படுத்தும். ஆனால், மேற் கூறிய பயிற்சிகளோடு கூடி தியானத்தைக் கடைபிடித்து வந்தால், சுறுசுறுப்பு அதிகரிக்கும், நினைவாற்றல் கூடும், சக்திகள் மேம்படும், உணவும், தூக்கமும் குறையும், மனமும் எளிதில் ஒரு நிலைப்படும். எனவே தியானத்தில் ஆர்வமுள்ளவர்கள் அல்லது மனம் அடங்கவில்லை என்று சொல்பவர்கள் இதை கவனித்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தினால் விரைவில் பலனை அடையலாம். வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment