Friday, September 30, 2016

கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?*


சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.
அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரணம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.
இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.
தொழிலாளர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதிடென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுப்பது.
இதை கற்றுத்தறவந்தவர், இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.
அவர் சொன்னதாவது:
முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.
உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..
_மை ஐஸ் ஆர் ரிலாக்ஸிங்
_மை நோஸ் ஆர் ரிலாக்ஸிங்
_மை மௌத் இஸ் ரெலாக்ஸிங்
_மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸிங்
என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.
இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.
பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருத்தையும் கேட்டார்.
என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.
ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.
நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.
மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.
நானும் சொல்லத் துவங்கினேன்.
*கந்தர் சஷ்டி கவசம்* சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.
*கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க!*
*விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க!*
*நாசிகளிரண்டும் நல்வேல் காக்க!*
*பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க!*
*கன்னமிரண்டும் கருணைவேல் காக்க!*
*என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!* .
என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.
இப்படி மூளையின் தனி கவனத்திற்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.
கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.
இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?
கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் சரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.
இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான நன்மைகள் உள்ளன.
ஆனால் ஆராயாமலே தற்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.
ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”.
இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.
அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!
*காக்க காக்க கனகவேல் காக்க!*
*நோக்க நோக்க நொடியில் நோக்க!*
*இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்*

No comments:

Post a Comment