இராம் மனோகர் - ஆரம்பமும், முடிவும் இல்லாத எல்லையற்ற பரம்பொருள் என்பது பொருள். இந்த உலகில் எல்லையற்றது எது ? சற்று சிந்திப்போம். உனக்கு சலிப்பே ஏற்படாத ஒரு விஷயம் எது என்று என்னிடம் யாராவது கேட்டால், நான் யோசிக்காமல் சொல்வேன் 'ஆகாயம்'' என்று. ஆம் !! ஆகாயத்தை, எல்லையே இல்லாத அந்த பிரம்மாண்டத்தை ரசிப்பதில் இனம் புரியாத ஆனந்தம் ஏற்படுவதாக நான் உணர்கிறேன். பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இரவு நேரத்தில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு, பரந்து விரிந்த அந்த ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. மேகமே இல்லாத அமாவாசை இரவில் மல்லாந்து படுத்துக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பதில் ஒரு அலாதியான சுகம் எனக்கு. இருண்ட வானம், பூக்களை நாலா பக்கமும் தூவி விட்டது போலச் சிதறிக் கிடக்கும் நட்சத்திங்கள் இடைவிடாமல் கண் சிமிட்டி வா வா என்று அழைத்துக் கொண்டே இருப்பது போலத் தோன்றும். இவற்றிற்கிடையே சற்றும் மினு மினுக்காமல் ஒளிரும் கோள்கள். இவற்றை எல்லாம் எத்தனை தடவை பார்த்தாலும் அந்த ஆகாயத்தின் பிரம்மாண்டம், அதனால் ஏற்படும் பிரமிப்பு மட்டும் குறைவதேயில்லை.
நமக்கு மேலேயும் ஆகாயம், நமக்கு கீழேயும் ஆகாயம், திரும்பும் திசைகளெங்கும் ஆகாயம். கோடிக் கணக்கான நட்சத்திரங்களுக்கு அப்பாலும் ஆகாயம்தான். ஆகாயம் ஆகாயம் ஆகாயம்தான். பற்றுவதற்கு எதுவும் இல்லாத ஆகாயம். அதற்கு ஆரம்பம் எது ? முடிவு எது ? யாராலும் விடை காண முடியாது. ஆனால், நாம் பார்ப்பது என்னவோ, வானத்தில் பிரபஞ்ச வெளியின் ஒரு சிறு பகுதியை மட்டும்தான். நாம் இருக்கும் பூமியும் மற்ற கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கும் பால் வெளி மண்டலம் என்பது எல்லையற்ற ஆகாயத்தில் ஒரு சிறு தூசியைப் போன்றது. இது போல இன்னும் எத்தனை எத்தனையோ அற்புதங்கள் காண முடியாத நிலையில், தூரத்தில் பரந்து, விரிந்து கிடக்கின்றன. அவற்றில் காணப்படுகின்ற பொருட்கள் அனைத்திலும் மூலக் கூறுகள், அணுக்கள், பல்வேறு துகள்கள் யாவும் தனக்குத் தானே சுழல்வதும், கர்ணமடிப்பதும், மோதுவதும், மோதுவது போல நெருங்கி வந்து, பின்பு மோதாமல் விலகிச் செல்வதுமாக விளாயாடிக் கொண்டிருக்கின்றன. இந்த அற்புதமான, அதிசயமான திருவிளையாடல்களைப் பற்றி விஞ்ஞானத்திற்கு இன்னும் ஒரு தெளிவான முடிவு கிடைக்கவில்லை.
நமது சூரியனைப் போலப் பல மடங்குப் பெரிய, நெருப்பைக் கக்குகிற விண்மீகள் இருக்கின்றன என்று இப்பொழுது விஞ்ஞானிகளும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இது இத்தோடு முடிந்து விடுவதில்லை. மேலும் மேலும் பல அற்புதமான, அதிசமான தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. நமது ஆகாய கங்கை எனப்படும் பால்வெளி மண்டலத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவே இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும். அதற்குப் பிறகும் அது முடிந்து விடுமா என்ன ? முடியாது. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி போல, புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள். நான் ஏற்கனவே சொன்னது போல, மிகச் சிறிய இந்த பகுதியை ஆராய்ந்த போதே மனிதன் இவ்வளவு அபரிதமான விஞ்ஞான முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறான் என்றால், இந்த பிரபஞ்சம் தாண்டி, பால்வெளி மண்டலத்தைத் தாண்டிப் போனால் மனிதனின் நிலைமை எப்படி இருக்கும் ?
இதையெல்லாம் மெய்ஞானத்தால் உணர்ந்த நம் முன்னோர்கள், ஆகாயம்தான் அனைத்திற்கும் மூலம். அந்த ஆகாயத்தில் இருந்துதான் அனைத்தும் தோன்றின. எனவே ஆகாயமாகிய வெட்ட வெளியே சிவனாகிய இறைவன். அவரது தலை உச்சியாகிய ஆரம்பத்தையும், காலடியாகிய முடிவையும் யாராலும் காண முடியாது என்று சொன்னார்கள்.
No comments:
Post a Comment