சந்திரகிரகணத்தின் போது என்ன நிகழ்கிறது, அந்த சமயத்தில் ஏன் உணவு உண்ணக் கூடாது என்பதை பற்றி சத்குரு அளித்த விளக்கம் இங்கே…
சத்குரு
======
ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரையுள்ள 28 நாட்களில், சந்திரன், முழு நிலவிலிருந்து தேய்ந்து, அமாவசையாகி, மீண்டும் மெதுமெதுவாய் வளர்ந்து பௌர்ணமி நிலவாகும் வரை, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அளவில், வடிவில் இருக்கும்.
அந்த 28 முகங்களையும் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது, சுமார் மூன்றே மணி நேரத்தில், நாம் பார்த்துவிட முடியும். அதாவது, ஒரு மாத காலத்தில் நடப்பது எல்லாம் சில மணி நேரத்தில் சூட்சுமமாக நடக்கிறது. சக்திரீதியாகப் பார்த்தால், ஒரு மாத காலத்தை நாம் வெறும் 3 மணி நேரத்தில் கடந்து விடுகிறோம்.
இந்த அடிப்படையில் தான் பூமி, சந்திர கிரகணத்தை, நிலவின் முழு சுற்று என்று தவறாக எடுத்துக் கொள்கிறது.
கிரகணத்திற்கு முன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாய் இருப்பது, கிரகணத்திற்குப் பின் விஷம்போல் ஆகிவிடும்.
இதன் தாக்கம் உலகின் அனைத்துப் பொருட்களின் மீதும் இருக்கும். அதிலும், தன் இயற்கையான இயல்பில் இருந்து மாறியிருக்கும் பொருட்கள், அதிவிரைவாக சிதைய ஆரம்பித்து விடும். கிரகண நேரத்தில் பழங்களிலும், காய்களிலும் அதிக மாற்றம் இல்லாவிட்டாலும், சமைத்த உணவு கிரகணத்திற்கு முன்பும் பின்பும் மிக வித்தியாசமாக இருக்கிறது.
கிரகணத்திற்கு முன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாய் இருப்பது, கிரகணத்திற்குப் பின் விஷம்போல் ஆகிவிடும்.
விஷம் என்றால்… அந்த உணவை உண்டால் இறந்திடுவோமா? இது அவ்வாறல்ல. விஷம் வெவ்வேறு தீவிரத்தில் வேலை செய்யும். அடிப்படையாகப் பார்த்தால், விஷம் என்பது உங்கள் விழிப்புணர்வைக் குறைப்பது. அது சிறிதளவே உங்கள் விழிப்புணர்வைக் குறைத்தது என்றால், நீங்கள் மந்தமாக இருப்பீர்கள். இன்னும் அதிகமாகக் குறைத்தால், தூக்கத்தில் ஆழ்வீர்கள். அதுவே மொத்தமாய் உங்கள் விழிப்புணர்வை எடுத்துவிட்டது என்றால், நீங்கள் இறந்தே விடுவீர்கள். மந்தம், தூக்கம், மரணம்…
இவை அடுத்தடுத்த படிநிலைகள் தானே! அதனால், கிரகணத்தின்போது, மற்ற நாட்களைவிட சமைத்த உணவு சக்தி அளவில், அதிவிரைவாக சிதைவுறும். இது உணவிற்கு மட்டுமல்ல, உங்கள் உடலிற்கும், உலகில் உள்ள ஒவ்வொன்றிற்குமே இது நடக்கிறது.
அதிலும், அந்த உணவு உங்கள் உடலில் இருந்தால், இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். தோராயமாக 2 மணிநேரம் அந்த உணவு உடலில் இருந்தால், உங்கள் சக்தி கிட்டத்தட்ட 28 நாட்கள் மூப்படைகிறது. அதாவது சக்தியளவில் உங்கள் வாழ்வில் 27 நாட்கள் சூட்சுமமாகக் குறைகிறது.
இது வெறும் உணவு பற்றியல்ல. இது உங்களைப் பற்றியும் தான்.
அப்படியென்றால், கிரகணத்தின்போது, பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உண்ணலாமா? கூடாது. அவற்றை உண்டவுடனேயே உங்கள் செரிமானம் செயல்படத் துவங்குவதால், அது பாதி சமைத்த உணவுபோல் ஆகிடும்.
அதனால், சமைத்த உணவின் நிலைதான் அதற்கும் ஏற்படும். இது வெறும் உணவு பற்றியல்ல. இது உங்களைப் பற்றியும் தான். உங்களின் இயல்பான நிலையை விட்டு நீங்கள் எந்த அளவிற்கு விலகி இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு இதன் தாக்கம் உங்கள் மீது அதிகமாக இருக்கும். உங்கள் இயல்பான நிலையிலேயே நீங்கள் இருந்தால், இந்தச் சக்தி உங்களின் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தமுடியாது.
நிலவின் சுழற்சி மனிதனின் அமைப்பிலே – உடலிலே, மனதிலே, சக்தி நிலையிலே அதிக தாக்கம் செலுத்தக் கூடியது. இது நம் தாய்மார்களின் மாதாந்திர சுழற்சி நிகழ்வதிலேயே வெளிப்படையாகத் தெரிகிறது. நான் குறிப்பிட்டு தாய்மார்கள் என்று சொல்லக் காரணம், அவர்கள் நிலவின் சுழற்சியோடு ஒன்றியிருந்ததால் தான் நாம் பிறந்தோம்.
அவர்களின் உடல், நிலவின் சுழற்சியோடு ஒன்றி இருந்திருக்காவிட்டால், நாம் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படிப்பட்ட சம்பந்தம் நிலவும்போது, இந்த முழு சுழற்சியும், 2 அல்லது 3 மணிநேரத்தில் நடந்து முடியும் சமயத்தில், நம் தாயின் உடல்களில் சிறிதளவு குழப்பம் ஏற்படும். இது ஆண்களின் உடலிலும் நடக்கும், ஏனெனில் அவர்களின் உடலிலும் தாயின் பங்களிப்பு உள்ளது.
உடலில் வெளிப்படையாய் இல்லாவிட்டாலும், வேறு வழிகளில் தாயின் பங்களிப்பு அவர்களுள் இருக்கிறது தானே!
உடல் இப்படிப்பட்ட குழப்பத்தில் உழலும்போது, அதில் உணவின்றி காலியாக வைத்திருப்பது (அ) அதை ஓரளவிற்கு விழிப்புணர்வோடு வைத்திருப்பது நல்லது. விழிப்புணர்வோடு இருப்பதற்கு ஒரு எளிய வழி, உணவருந்தாமல் இருப்பது.
உணவருந்தவில்லை எனில், குறைந்தபட்சம் அந்த ஒன்றைப் பற்றிய கவனமேனும் உங்களுக்கு இருக்கும். வயிறு காலியாக இருந்தால், விழிப்புணர்வோடு இருப்பது எளிதாகவே நடக்கும். அப்போது, உங்கள் உடலை, உங்கள் உடலில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதை தெளிவாய், எளிதாய் கவனிக்க முடியும்.
கிரகண முக்கியத்துவம்:
நிலவின் ஒரு சுழற்சி, மனிதனிற்கு எப்படி முக்கியமாகிறது? மனிதனின் பிறப்பிலும் வாழ்விலும் சூரிய மண்டலத்தின் ஒன்பது கிரகங்களும் தாக்கம் உண்டு செய்கின்றன.
அதில் மிக முக்கியம், சூரியன், சந்திரன் மற்றும் இந்த பூமி. ஒரு மனிதனின் சக்திநிலை 1008 முழுநிலவுகளை சந்தித்ததென்றால், அதாவது ஒரு மனிதர் தோராயமாக 84 ஆண்டுகள் வாழ்கிறார் என்றால், அவரது சக்திநிலை ஓரளவிற்கு முதிர்ச்சி அடைகிறது. அந்நிலையில், எவ்வித ஆன்மீக செயல்முறைகளை கடைபிடிக்காவிட்டாலும், அவர் எளிதாக மலர்ந்திட முடியும்.
அவர் முக்தி அடைந்திடுவார் என்று சொல்ல முடியாது, ஆனால் அவர் மீண்டும் பிறப்பெடுக்காமல் இருப்பதற்கு சாத்தியம் நிறையவே இருக்கிறது.
சந்திர கிரகண சமயத்தில் நிலவு வேகமாக இருக்கிறது. அதன் 28 முகங்களையும் சில மணி நேரங்களிலேயே நாம் பார்க்க முடியும். ஒரு மாத காலத்தில் நடப்பது எல்லாம் சில மணி நேரத்தில் சூட்சுமமாக நடக்கிறது. இதனால் நம் வாழ்க்கையும் வேகமாக முன்னோக்கி செல்கிறது. அடிப்படையில் ஆன்மீகம் என்றாலும் அதுதான். நம் வாழ்கையை வேகமாக முன்னெடுத்துச் செல்வது.
நீங்கள் நடந்து பயணம் போகும் போது, வழியில் மாம்பழங்கள் பார்த்தால் பறித்து உண்ணலாம். நெல்லிக்காய் இருந்தால் அவற்றையும் ருசிக்கலாம். பயணத்தை இன்ப சுற்றுலாவாக அனுபவிக்கலாம். ஆனால் இதுவே விமானத்தில் பயணம் செய்தால், வழியில் நீங்கள் மாம்பழங்கள் பறிக்கப் போவதில்லை. பத்தாயிரம் ஏக்கர் மாம்பழத் தோட்டம் இருந்தாலும், அவற்றைப் பார்க்கக் கூட மாட்டீர்கள்.
காரணம், குறிப்பிட்ட உயரத்தில், மிக வேகமாக பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். வேகமாக முன்னே செல்லும்போது, நாம் ஒன்றும் மாம்பழங்களுக்கு எதிராக இல்லை… உயரம், வேகம் காரணமாக நம்மால் அவற்றைப் பறிக்க முடிவதில்லை, அவ்வளவுதான். அதுபோல் இந்த நேரத்தில், நம் வாழ்வும் விரைவாக முன்னோக்கிச் செல்கிறது.
No comments:
Post a Comment