நண்பர் - எதனோடும் கூடாமல், யாரோடும் சாராமல் எங்காவது போய் ஏகாந்தமாய் வாழ வேண்டும் என்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருக்கிறது. இதனால், என்னைச் சுற்றி வாழ்பவர்களோடு என்னால் இணக்கமாக இயங்க முடிவதில்லை. முரண்பாடுகள் முட்டி மோதிக் கொண்டு மனதை ரணகளமாக்கி விடுகின்றன. அமைதியே இல்லை.
இராம் மனோகர் - எதையும் சாராமல், எங்கேயும் போய் வாழ முடியாது. இந்த பிரபஞ்ச வாழ்க்கை என்பதே சார்பு வாழ்க்கைதான். சார்புத் தன்மைதான் அதன் இயக்கத்திற்கு அடிப்படையாக விளங்குகிறது. ஆனால், இந்த சார்பு நிலையின் ஆணி வேராக விளங்கும் ஆற்றலுக்கு கொள்ளும் நிலை,தள்ளும் நிலை என்ற இரண்டு தன்மைகள் இருக்கின்றன என்பதை நாம் உணர்வதேயில்லை. இதை விஞ்8ஞானம் காந்த ஆற்றல் என்று சொல்லும். இந்த இரண்டு நிலைகளையும் மனதில் உணர்ந்து செயல்படும் பொழுது துன்பங்கள் எழாது. ஆனால், நாம் என்ன செய்கிறோம் என்றால், கொள்வதில் காட்டும் ஆர்வத்தை தள்ளுவதில் காட்டுவதில்லை. இதை நம் முன்னோர்கள் விளக்கும் பொழுது பட்டும் படாமலும், தொட்டும், தொடாமலும், தாமரை இலைத் தண்ணீர் போல என்றெல்லாம் சொல்லி விளக்குவார்கள்.
இங்கே எதையும் சாராமல் யாரும் வாழ முடியாது. எதையாவது ஒன்றைச் சார்ந்துதான் உயிர் வாழ முடியும். நீங்கள் அனுபவிக்கும் எல்லா இன்ப துன்பங்களுக்கும் நீங்கள் மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. உதாரணமாக பருவ மழை பெய்வதில்லை. இதனால் விவசாயம் பாதிப்பு அடைகிறது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை வாசி உயர்கிறது. பூமி வெப்பமடைகிறது. இதனால் உலகமே அழியும் அபாயம் கூட இருக்கிறது என்கிறார்கள். இதற்கு யார் காரணம் ? இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. காடுகள் அழிந்து நகரங்களாக, மனிதன் வாழும் இடமாக மாறி விட்டதாலும், மரங்கள் கோடிக்கணக்கில் வெட்டப் பட்டதாலும் மழை பெய்வதில்லை என்கிறார்கள். மேலும் வாகனப் பெருக்கம், குளிர் சாதனப் பெட்டிகளில் இருந்து வெளியாகும் வாயு, நிலத்தடி நீர் வற்றிப் போதல் போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இதற்கெல்லாம் நீங்கள் மட்டுமா காரணம் ? நாம் சார்ந்துள்ள இந்த மொத்த சமுதாய அமைப்புமே காரணமாக இருக்கிறது. இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. வேறு யாரோ செய்யும் தவறுக்கு நீங்கள் துன்பமடையக் கூடும். ஏனெனில் நாம் சமுதாயம் சார்ந்த சார்பு வாழ்க்கை வாழ்கிறோம். அது மட்டுமல்ல, உலகில் காணும் அனைத்துமே ஒன்றை ஒன்று ஏதோ ஒரு விதத்தில் சார்ந்துதான் இருக்கின்றன. இந்த சார்பு நிலையின் விளைவைத்தான் மாயை என்கிறார்கள்.
நான் சொல்வதை விடுங்கள், மிகப் பெரிய விஞ்ஞானி ஐன்ஸ்டின் Theory Of Relativity என்ற தனது ஆராய்ச்சி முடிவில் சார்பு நிலை பற்றி மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். இந்த பிரபஞ்சமெங்கும் காணும் யாவும் ஒன்றை ஒன்று சார்ந்த, தொடர்புடையவைகளாகவே இருக்கின்றன என்கிறார்.
இதைத்தான் நம் முன்னோர்கள் ஞானத்தால் உணர்ந்து அதை மாயை என்றார்கள். சார்பு நிலையானது நமது அறிவை மயக்கி விடுவதால் அது பொருட்களின் இருப்புக்கு ஏற்ற விதத்தில் மாறுபடுகிறது. நாம் ஒரு பொருளாகவோ, பொருளோடோ அல்லது பொருளுக்கு அப்பாலோ இருந்து கொண்டு நிலைமைத் தன்மையற்ற இடம், காலம், காரணகாரியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, ஏற்றதாழ்வு, போன்ற அனைத்தையும் விழுங்கியபடி சுழன்றடிக்கும் இந்தக் காலச் சக்கரம் என்பதே இந்த சார்பு நிலையால் நாம் உருவாக்கிக் கொள்ளும் மாயத் தோற்றமே. இந்த பூமியைப் பொருத்த வரை சார்பு நிலை இல்லாத ஒன்று இல்லவே இல்லை.
எனவே இவையனைத்தும் மாயை என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். அப்படியானால் சார்பு நிலையே இல்லாத உண்மையான, பூரணமான ஒன்றுமில்லையா ? இதுதான் தேடல். இதைத்தான் கீதையில் கண்ணன் '' எல்லாம் எங்கு சொன்று ஒடுங்குகின்றவோ, பிறகு எங்கிருந்து விரிவடைகின்றனவோ அதுவே உண்மை நிலை. அதுவே பரமாத்மா'' என்கிறார். அங்கு எந்த சார்பு நிலையும் கிடையாது. விஞ்ஞான ரீதியாகச் சொன்னால் இந்த அணுக்களெல்லாம் எங்கிருந்து வந்து இந்தப் பிரபஞ்சமாக விரிந்து நிற்கிறதோ, இனி இந்த உலகம் அழியும் பொழுது இந்த அணுக்களும், பொருட்களும் எங்கு சென்று ஒடுங்கி நிற்குமோ, அதுவே பரம அணு. அதுவே பரம்பொருள். அதுவே பரமாத்மா. அதுவே சார்பற்ற பூரணமான உண்மை நிலை. அங்கு மாயை இல்லை. அதை அடைவதுதான் முக்தி நிலை, மோட்சம், வீடுபேறு என்றெல்லாம் சொல்லி வைத்தார்கள்.
பிறவிச் சுழல் என்றும், பிறவிச் சங்கிலித் தொடர் என்றும் சொல்கிறார்களே, அது கூட இந்த சார்பு நிலையால் விளைவதுதான்.
1 - நம் அறியாமையின் சார்புத் தன்மையால் மனக்குவியல்கள் தோன்றுகின்றன.
2 - மனக்குவியல்களின் சார்புத் தன்மையால் ''தன்முனைப்பு'' தோன்றுகிறது.
3 - தன்முனைப்பின் சார்புத் தன்மையால் உடலும், மனமும் தோன்றுகின்றன.
4 - உடல் மற்றும் மனதின் சார்புத் தன்மையால் ஐம்புலன்களும், மனதின் நான்கு அந்த கரணங்களும் தோன்றுகின்றன.
5 - ஐம்புலன்கள் மற்றும் அந்தகரணங்களின் சார்புத் தன்மையால் புறப் பொருள் நுகர்ச்சி அதாவது ஒளி, ஒலி, மணம், சுவை, தொடு உணர்ச்சி, உணர்வு, உணர்ச்சி இவையெல்லாம் தோன்றுகின்றன.
6 - இந்த புறப் பொருள்களின் நுகர்ச்சியின் சார்புத் தன்மையால் புலன் உணர்ச்சிகள், மன உணர்வுகள் விரிவடைகின்றன.
7 - உணர்ச்சி மற்றும் உணர்வுகளின் சார்புத் தன்மையால் ஆசை ஏற்படுகிறது.
8 - ஆசைகளின் சார்புத் தன்மையால் பற்று வளர்கிறது.
9 - பற்றின் சார்புத் தன்மையால் மனமானது ஆசைப்பட்ட பொருளாகவே மாறும் தன்மை ஏற்படுகிறது.
10 - அந்நிலையே பிறவிக்கு காரணமாக, வித்தாக விளங்குகிறது.
இப்படித்தான் பிறவித் தொடர் அமைகிறது. இதிலிருந்து மீள்வது எவ்வாறு ? ஆறாவது நிலையைக் கடந்து ஏழாவது நிலையில் நாம் நம் உணர்வுகளை, உணர்ச்சிகளை நெறிப்படுத்தி, ஆசைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆசைகளைக் கட்டுப்படுத்தி, பற்றுகளை அறுத்தால்தான் மனமானது சார்பு நிலையிலிருந்து மெல்ல மெல்ல விடுபடும். அப்பொழுதுதான் எல்லா காரியங்களும் செம்மையாக நடக்கின்ற பொழுதும், மனம் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் அல்லது அவற்றைச் சாராமல் ஏகாந்த நிலையில் இருக்கும். இதுதான் தாமரை இலைத் தண்ணீர் துளி போன்ற நிலை. எனவே ஆசைகளை, பற்றுகளை தவிர்க்கின்ற வரை ஏகாந்தம் என்பது கானல் நீர்தான்.
No comments:
Post a Comment