=====================
சங்ககாலத் தமிழன், வாழும் இடத்தின் சூழலைப்பொறுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தான் நிலப்பரப்புகளை. சுற்றுலா செல்ல வேண்டுமானால் நம் நினைவில் முதலில் வந்து நிழலாடுவது குறிஞ்சிப் பகுதிகளான மலை வாசஸ்தலங்கள்தான். மலைகள் என்றவுடன் கொடைக்கானல், உதகமண்டலம் என இதுபோன்ற இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்று இல்லை. மதுரை, கோவை செல்லும் பாதையை மாற்றி நாமக்கல், சேலம் பாதையில் கொல்லிமலை நோக்கியும் செல்லலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலையை மட்டும் வெண்மேகங்கள் உரசிச் செல்லவில்லை. கிழக்குத் தொடர்ச்சி மலையையும் கிட்ட வந்து தொட்டுப் பார்க்கிறது இயற்கை எழில். நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மூலிகை மலையான கொல்லிமலை. பூமிப்பந்தின் இயற்கைச் சங்கிலியை தன் விருப்பம்போல் இழுத்து வளைக்கும் மனிதனின் மாசுகள் அதிகம் தீண்டாத மருந்து மலையாகவே இன்று வரை திகழ்கிறது கொல்லிமலை.
எப்பொழுதுமே மலை பயணத்தில் நம் எல்லோருக்குமே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று ஏற்படும். கொல்லிமலையின் மலைப் பாதையை அடைவதற்கு 15 கி.மீ. முன்பாகவே மலையின் முழு வடிவம் நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. எனக்கு அந்த மலையின் முழு வடிவத்தைக் காணும்போது ஒரு மனிதன் நேராகப் படுத்திருந்தது போன்று இருந்தது. ஒரு மனிதனின் முகம் முழுமையாகத் தெரிந்தது. கற்பனைக்குக் கால்க் கட்டு போடமுடியாதல்லவா?
கொல்லிமலையின் அடிவாரம் காரவல்லி என்ற ஊரில் தொடங்குகிறது அருமையான மலைப் பயணம். தமிழகத்தின் பிற மலை வாசஸ்தலங்களைச் சென்றடைவதை விட சற்று கடினமானது வால்பாறையும், கொல்லிமலையும். சுமார் 26 கி.மீ. மலைப் பாதையை 72 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து கொல்லிமலையை அடையலாம். அதன் பிறகு திருப்பதி போல ஓர் அழகிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஊர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது கொல்லிமலை.
கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பச்சைமலை, கல்வராயன் மலை என இவற்றின் வரிசையில் அமைந்துள்ளது கொல்லிமலை. மனிதர்களின் அடர்த்தி அதிகம் இல்லாத மலையாக உள்ளது; சித்தர்கள் வாழும் இடமாகவும் விளங்குகிறது. இங்கே வாழ்ந்த சித்தராகக் கருதப்படுபவர் கோரக்கர் சித்தர். சாம்பலில் அவதரித்த சித்தர் என்றே இவரைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
ஒரு சமயம், சிவபிரான் கடற்கரையோரம் பார்வதி தேவிக்கு தாரக மந்திரத்தை ஓதிக்கொண்டிருந்த வேளையில், உமாதேவி சற்றே கண்ணயர்ந்தார். அதே நேரத்தில் சிவன் ஓதிய மந்திரத்தை ஒரு மீன்குஞ்சு கேட்டதன் பலனாக மனித வடிவம் பெற்றது. முக்கண்ணன் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டார். அந்த மச்சேந்திரனே சிறந்த சித்தராக மாறி உலகம் முழுதும் ஞானத்தைப் பரப்புமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே மிகக் கடுமையாக தவம் புரிந்து மேன்மையான சித்தரானார்.
பிறரிடமிருந்து தானம் பெற்று உணவு உண்பதே சித்தர்களின் வழக்கமாக இருந்தது. அப்படி ஒருநாள், இவருக்கு அன்னதானம் அளித்த ஒரு பெண்ணின் மனத்துயர் துடைக்க நினைத்தார் மச்சேந்திரர். தனக்குக் குழந்தை இல்லாத குறையை அந்தப் பெண்மணி இவரிடம் கூற, மச்சேந்திரர் கொஞ்சம் திறுநீறு கொடுத்து, ""இதனை நீ உட்கொள்ள குழந்தை பேறு அடைவாய்'' எனக் கூறிச் சென்றார். மச்சேந்திரரை நம்பாத அப்பெண்மணி அவர் கொடுத்த திருநீற்றை அடுப்பில் போட்டு
விட்டாள்.
சில ஆண்டுகள் சென்ற பிறகு அதே இல்லத்திற்கு வந்த மச்சேந்திரர், அந்த பெண்மணியிடம் அவரது மகனைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். முன்பு தான் செய்த காரியத்தின் முழு விவரத்தையும் அப்பெண்மணி கூற அந்த அடுப்பின் அருகில் தன்னை அழைத்துச் செல்லுமாறு மச்சேந்திரர் கூறினார்.
அந்த பெருஞ்சித்தர் அடுப்பின் பக்கம் சென்று "கோரக்கா' என உரக்கக் கூப்பிட்டார். அடுப்பு சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல்கொண்டு இருக்க வேண்டிய வளர்ச்சியோடு எழுந்து வந்தது. அந்த கோதார அடுப்பு சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால் கோரக்கர் என்று பெயரிட்டு தனது சீடனாக ஏற்றுக்கொண்டார் மச்சேந்திரர்.
கொல்லிமலையைப் பற்றிப் பேசும்போது கோரக்கர் சித்தரைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.
கோரக்கர் இயற்றிய நூல்களாக தற்காலத்தில் கிடைப்பவை- சந்திரரேகை, நமநாசத்திறவுகோல், ரக்ஷமேகலை, முத்தாரம், மலைவாக்கம், கற்பம், முத்தி நெறி, அட்டகர்மம், சூத்திரம், வசார சூத்திரம், மூலிகை, தண்டகம், கற்பசூத்திரம் பிரம்மஞானம் ஆகியவை ஆகும்.
சித்தர்கள் மனிதனுக்கும் கடவுளுக்கும் பாலமாக இருப்பதாகக் கருதப்படுபவர்கள்.
பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தங்கள் சக்தியின் மூலம் பல்வேறு நோய்களை இவர்களால் குணப்படுத்த முடிந்திருக்கிறது. மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்த சித்தர்கள் அங்கு கிடைத்த மூலிகை மருந்துகளைக்கொண்டே தங்களது ஆயுளையும் நீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பல வளைவுகளைத் தாண்டிய பயணத்திற்குப் பிறகு கொல்லிமலையை அடைந்த நமக்கு, அங்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. சமதள பூமியில் பயிரிடப்படுவதைப் போலவே இந்த மலை பூமியிலுள்ள கிராமங்களில் நெல் பயிரிடப்படுகிறது.
நெல் விளைவதற்கான சீதோஷண நிலை இந்த மலையில் வருடம் முழுவதும் நிலவுகிறது. காபி, தேயிலை, மிளகு, பலா, அன்னாசிப்பழம், மலை வாழை, கொய்யா, ஏலக்காய், தேன், சர்க்கரை வள்ளிக்கிழங்கு என பலதரப்பட்ட பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.
கொல்லிமலையில் காண வேண்டிய முக்கிய இடங்கள்:
சுமார் 300 அடி உயரம் கொண்ட 1000 படிகளை உடைய, ஒன்றரை, கி.மீ. தூரம் கீழே இறங்கிச் சென்று காண வேண்டிய ஆகாயகங்கை அருவி. இதன் கடைசிப் படி வரை சென்ற பின்னர்தான் இந்த அருவியை முழுமையாகக் காண முடியும்.
ஐந்து ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் ஒன்று சேர்ந்து கொட்டுகிறது. சித்தர்கள் வாழும் குகை: இன்றும் சித்தர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை மிளிரும் இடம். தான் வரும் வழியெல்லாம் உள்ள மூலிகைகளை ஒன்றிணைத்து அவற்றில் உள்ள சக்திகளை எல்லாம் தனக்குள் கொண்டு பாறைகளில் இருந்து கொட்டும் ஸ்படிகம் போன்ற மூலிகைத் தண்ணீர் பாயும் அருவியாக விளங்குகிறது மாசிலா அருவி.
ஆகாய கங்கையைப் போல் அல்லாது மாசிலா அருவியை சென்றடைவது சற்று சுலபமாக உள்ளது.
276 பாடல் பெற்ற சிவ தலங்களுள் ஒன்றாகத் திகழும் அறபளீஸ்வரர் ஆலயம், அருள் புரியும் எட்டுகை அம்மன் ஆலயம், மாசி பெரியசாமி கோயில், மேகங்கள் சூழ்ந்த மலைத் தொடர்கள், மலை அடிவாரத்தில் உள்ள ஊர்கள், இவற்றைப் பார்வையிடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள செல்லூர் வியூ பாயிண்ட், படகு வீடு, மூலிகைப் பண்ணை, தாவரவியல் பூங்கா, சீக்குப்பார்வை வியூ பாயிண்ட், சந்தனப் பாறை, தொலைநோக்கி நிலையம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த மலை கிராமத்தை முழுதாக சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் தேவைப்படும். எல்லா விதமான கட்டணத்திலும் இங்கே தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கே வீசும் சுத்தமான காற்று, நிலவும் மிதமான தட்பவெட்பம் என விடுமுறைக் காலங்களில் சென்று தங்க பொருத்தமான சுற்றுலாத் தலம்.
கடையேழு வள்ளல்கள் பாரி, எழினி, காரி, நள்ளி, பேகன், மலையன், ஓரி ஆகியவர்களில், இந்த கொல்லிமலையை ஆண்ட வள்ளல் வல்வில் ஓரி.
மாசுபடாத காற்று, தண்ணீர், இருப்பிடம் என நோயற்ற வாழ்வுக்குத் தேவையான அத்தனையும் இங்கே இருக்கிறது. உலக வெப்பமயமாதல் போன்ற நம்மை அச்சுறுத்தும் விஷயங்களில் இருந்து சற்று தள்ளியே உள்ளது கொல்லிமலை.
லட்சம் லட்சமாக செலவழித்து வெளிநாடுகளுக்குச் சென்று அனுபவிக்கும் மகிழ்ச்சியை சில ஆயிரங்கள் மட்டுமே செலவழித்து கொல்லிமலையில் பெற்றோம்.
கோடி கொடுத்தாலும் கிடைக்காத சுத்தமான காற்றையும், கற்கண்டு போன்ற தண்ணீரையும், கண்கொள்ளாப் பசுமையையும் மூலிகை சுவாசத்தையும், சுத்தமான மனம் கொண்ட மக்களையும் மனதார கண்டு மகிழ அனைவரும் கட்டாயம் சென்று வர வேண்டிய மலை, மலைகளின் இளவரசன் கொல்லிமலை.
No comments:
Post a Comment