===
கருவில் இருக்கும் குழந்தையின் வடிவம் ஓம்.
"ஓம்' என்னும் பிரணவ மந்திரத்திற்குள்ளே தான் இந்த அண்டமே அடங்குகிறது! வையத்திலுள்ளோரை வழிநடத்தி வாழ்வாங்கு வாழச் செய்வது இந்தப் பிரணவ மந்திரமே. கடவுள் முதல் கடைசிக் குடிமகன் வரை ஓங்கி ஒலிக்கும் வலிமை வாய்ந்த- மிக எளிமையான மந்திரம் "ஓம்'. இந்து மதத்தின் இரு கண்களாக விளங்கும் சைவம், வைணவம் இரண்டுமே போற்றிடும் சக்தி வாய்ந்த பிரபஞ்ச மந்திரமாக இது திகழ்கிறது.
இந்த மந்திரத்தில் உயிர் இருப்பதால் இதைப் "பிரணவம்' என்கிறோம். பிரணவம், பிராணன் என்பதற்கெல்லாம் "உயிர்' என்பதே பொருள்.
"ஓம்' என்பதன் பொருள் என்ன? அதன் தத்துவம் என்ன? அதன் நிலைப்பாடு என்ன? எந்தெந்த தெய்வங்களை வேண்ட இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்? இதனைச் சொல்வதால் அடையும் நன்மைகள் என்ன? யார் யாரெல்லாம் இந்த மந்திரத்தைச் சொல்லலாம்?
"ஓம்' என்பது "அ'கார "உ'கார "ம'கார எழுத்துகளின் சங்கமம். "ஓ' என்பது தமிழில் உயிர் நெடில்; "ம்' என்பது மெய் எழுத்து.
உயிரும் மெய்யும் (உயிர் + உடல்) சேர்ந்தால் ஒரு உயிருள்ள உடல் உருவாகின்றது. உயிர் இல்லாத உடல் பிணம்; மெய் (உடல்) இல்லாத உயிர் (ஆன்மா) ஆவி.
"ஓம்' என்பது உயிரும் உடலும் இரண்டறக் கலந்த உயிருள்ள உடல் போன்றது. அதாவது முழுமையானது; பரிபூரணமானது. பூரணம் என்றால் பூஜ்ஜியம் என்பதையே குறிக்கும். பூஜ்ஜியம் என்றால் ஒன்றுமே இல்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் பூஜ்ஜியம் இல்லா விட்டால் எதுவுமே இல்லை. இந்தப் பிரபஞ்சமே பூஜ்ஜியம்தானே! "ஓம்' என்பது உயிராகி உடலை இயக்குவது! துடிப்புடன் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.
"ஓம் பூர்ண மதஹ் பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமே வா வசிஷ்யதே'.
"அங்கிருப்பதும் பூரணம்; இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகி யுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் மிஞ்சி நிற்பதும் பூரணமே' என்பது மேற்சொன்ன சுலோகத்தின் பொருள். பூரணத்தைப் பிரித்தால்கூட அதுவும் பூரணமாகவே இருக்கும். ஆக பரம்பொருள் பூரணமானது; அதன் ஒரு சிறு பகுதியும் பூரணமே.
ஒரு காந்தக் கட்டியை நூலில் கட்டித் தொங்கவிட்டால் அது வட, தென் துருவங்களை நோக்கியே நிற்கும். உலகின் எந்தப் பகுதியிலும், எந்த வேளையிலும் அது அதே நிலையில்தான் நிற்கும். நாம் அதை திசை மாற்றித் திருப்பி விட்டால்கூட அது பழைய நிலைக்கே திரும்பிவிடும். அதே காந்தக் கட்டியைப் பல துண்டுகளாக உடைத்தாலும், ஒவ்வொரு துண்டும் உடைப்பதற்கு முன்பிருந்த காந்தக்கட்டியின் தன்மையை ஒத்திருக்கும். வடிவம்தான் சிறிதாகுமே தவிர குணத்தில் வேறுபடாது.
மேற்சொன்ன சுலோகத்தின் கருத்தை- பூர்ண சக்தியை கவியரசு கண்ணதாசன் அவருக்கே உரித்தான கவிநயத்தில்,
"பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்துகொண்டால்
அவன்தான் இறைவன்!'
என்கிறார்.
கருவிலிருக்கும் குழந்தை "ஓம்' என்ற எழுத்து வடிவத்திலேயே காணப்படும். இந்த நிலையை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் கருவிகள் வந்தபின்பே நாம் பார்க்க முடிந்தது. ஆனால் ஞானிகளும் யோகிகளும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்த உண்மையைக் கூறியிருக்கின்றனர்.
கருப்பையில் கரு வளர்வதற்குத் தேவையான அனைத்து பஞ்சபூத சக்திகளும் தொப்புள்கொடி வழியாகச் செல்லுகிறது. நமக்கு ஆரம்பத்தில் உணவு செல்லும் வாய், நாபி எனப்படும் தொப்புள் ஆகும்.
குழந்தை கருப்பையிலிருந்து வெளிவந்தபின், தொப்புளுடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடியை (மாவி) தொப்புளிலிருந்து நான்கு அல்லது ஐந்து அங்குல நீளம் விட்டு அறுத்தெடுத்து பூமியில் புதைத்துவிடுவர். பின் அக்குழந்தை வாய்வழி உணவு உண்ண ஆரம்பிக்கிறது.
தொப்புள் என்பது கரு வளர அடிப்படை உறுப்பு. மஹாவிஷ்ணுவின் தொப்புளிலிருந்து உதித்த தாமரையில் பிறந்தவரே சிருஷ்டிகர்த்தா வான பிரம்மா. சிருஷ்டிக்கும் தொப்புளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதைப் புராணங்கள் கூறுகின்றன. உயிரைப் படைப்பவன் பிரம்மன்; பின் அதை இயக்குவது பிராணன் எனப்படும் ஆன்மா.
"ஓம்' என்னும் மந்திரத்தில் "ஓ' என்பது தொப்புளிலிருந்தே உருவாகிறது. "ம்' என்பது வாயிதழ்களில் நிறைவு பெற்று, உள்ளும் புறமும் அதிர்வலைகளை எழுப்புகின்றது.
உடலுக்கு ஒன்பது வாயில்கள். கண்கள் இரண்டு, நாசிகள் இரண்டு, காதுகள் இரண்டு; வாய், ஜனனேந்திரியம், ஆசனம் ஆகியவை தலா ஒன்று. கரு வளர்ந்து குழந்தையாக உருமாறுவதற்குப் பயன்பட்ட தொப்புள் இந்த ஒன்பதில் இல்லை. குழந்தை கருப்பையிலிருந்து வெளிவந்தவுடன் அந்த வாயில் அடைபட்டுவிட்டது. ஒரு பலூனின் வாய் காற்றடைத்தபின் கட்டப்படுவது போல, தொப்புள் வழி பிராணனை நிறைத்த பின்பு அந்த துவாரம் கட்டப்பட்டுவிடுகிறது.
பிராணனைப்போல மேலும் ஒன்பது வாயுக்களும் சேர்ந்து மொத்தம் பத்து வாயுக்கள் நம் உடலில் அடைக்கப்பட்டுள்ளன. தச வாயுக்கள் அடைக்கப்பட்ட பைதான் மனிதன். "காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா' என்பதன் விளக்கமே இந்த தச வாயுக்கள் அடைக்கப்பட்டிருப்பதால் வந்தது தான். இந்தப் பத்து வாயுக்களில் பிராணன் என்ற உயிர் வாயு பிரதானமானதாகும். இதையே உயிர் மூச்சு, ஆன்மா என அழைக்கிறோம். மனித உடலில் தொப்புளைச் சுற்றி மணிப்பூரகம் என்னும் பாம்பாக மூச்சுக்காற்று சுற்றியிருக்கிறது.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment