Tuesday, September 6, 2016

கேள்வி - எண்ணங்களுக்கும் மறுபிறவிக்கும் என்ன சம்மந்தமிருக்க முடியும

்? மனிதன் தனது இறுதி மூச்சை விடும் பொழுது என்ன எண்ணுகிறானோ அதைப் பொருத்தே அவன் மறுபிறவி அமையும் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது . அப்படியானால் சொர்க்கம், நரகம் என்கிறார்களே அது என்ன? மேலும் ஒருவர் கடைசி நேரத்தில் நல்ல எண்ணங்களை எண்ணி மறுபிறவியே இல்லாமல் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறதல்லவா?

இராம் மனோகர் - அஸ்திவாரத்திற்கும் கட்டிடத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்பது போல இருக்கிறது உங்கள் கேள்வி !!! நானா சொல்கிறேன் ?!?!! பகவத் கீதை, கைவல்யம் போன்ற பல நூல்கள் எண்ணத்தின் மூலமே மனிதனின் மறுபிறவி தீர்மானிக்கப்படுகிறது என்று உறுதியாகச் சொல்கின்றன. மனிதனுக்கு வினை இருக்கும் வரையில் பிறவி உண்டு என்பது அவற்றின் கோட்பாடு. வினைக்கு மூலக் காரணம் எது ? எண்ணம்தானே ? இந்திரியங்கள் மூலம் செய்தால் மட்டும்தான் வினையா ? ஒரு எண்ணத்தை நாம் எண்ணும் பொழுதே சூக்கும நிலையில் அது ஒரு வினையாகி விடுகிறது. எண்ணத்திற்கு ஏற்றார் போல்தான் வாழ்க்கை மாறி அமைந்து வருகிறது. நாம் நினைக்கிறோம் இந்த ஸ்தூல உடலோடு பிறந்தது முதல் இறந்தது வரை வாழ்வதுதான் ஒரு பிறவி என்று. ஆனால், அது அப்படியல்ல. தத்துவார்த்தமாகச் சிந்தித்துப் பார்த்தால், ஒரு எண்ணத்தை நாம் எண்ணும் பொழுதே அந்த எண்ணமயமான புதிய பிறவி மனத்தகத்து அமைந்து விடுகின்றது. இப்படி ஒரு நாளில் நாம் எடுக்கும் பிறவிகள் எத்தனை என்று யாராலும் கணக்கிட்டுச் சொல்லி விட முடியாது.

என்ன ஏற்றுக் கொள்ள முடியவில்லையா ? நமக்கு இருப்பது ஒரு உயிர். ஆனால், நம் உடலிலோ ஆயிரமாயிரம் செல்கள் தினமும், பிறக்கின்றன, இறக்கின்றன. நமது உடலில் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்திலிருந்து ஒரு மில்லி லிட்டரை எடுத்துப் பார்த்தால் அதில் ஏறத்தாழ ஐந்து மில்லியன் சிகப்பு அணுக்கள் இருக்கின்றன. ஒரு சிகப்பு அணு 120 நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என்று விஞ்ஞானம் சொல்கிறது. அதற்குப் பிறகு அது இறந்து விடுகிறது. அதற்கு பதில் வேறு சிகப்பு அணு புதிதாகத் தோன்றுகிறது. இது போலவே வெள்ளையணுக்களும். இப்படி நமக்குள்ளே தினமும் பல்வேறு ஜீவ மரணப் போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. அது போலத்தான் ஒவ்வொரு எண்ணத்தின் மூலமாகவும் நாம் புதுப் புது பிறவியை எடுத்துக் கொண்டேயிருக்கிறோம். ஜீவன் உடலை உகுக்கின்ற வேளையில் அது வரையில் அது ஆழ்ந்து எண்ணிய எண்ணங்கள் எல்லாம் ஒன்று கூடி மனதிற்கு ஒரு வடிவைத் தருகின்றன. மேம்போக்கான எண்ணங்களெல்லாம் கடலில் அலை கரைவது போல் காணாமல் போய் விடுகின்றன. ஆழ்ந்த எண்ணங்களுக்கு ஏற்பதான் புதிய சரீரம் வந்தமையும் என்பது கோட்பாடு.

இனி சாகும் பொழுது நாம் விரும்புகிற எண்ணத்தை எண்ணிக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது நடக்காது. நாம் நெடுங்காலம் எண்ணிய எண்ணங்களே முன்னால் வந்து நிற்கும். எனவே அதற்கேற்ற பிறவிதான் அமையும். எனவேதான் வாழும் பொழுதே எண்ணங்களை ஆராய்ந்து ஒழுங்குபடுத்திக் கொள், நல்லதையே நினை, நல்லதையே எண்ணு என்று சொல்கிறார்கள். வினைக்கு ஏற்ப சூக்கும சரீரத்தில் வேறு ஒரு நிலையில் ஜீவன் இருப்பதுண்டு. அந்த நிலை இன்பகரமானதாக இருந்தால் அது சொர்க்கம் எனப்படுகிறது. துன்பகரமாக இருந்தால் நரகம் எனப்படுகிறது. இத்தகைய சொர்க்கம், நரகம் இரண்டும் நம் கனவு நிலைக்கு ஒப்பானவை. கனவு நிலையில் நாம் எப்படி ஸ்தூர சரிரத்தின் துணையின்றி இன்ப துன்பங்களை நுகர்கின்றோமோ, அது போலவே இதுவும். அந்நிலையில் ஜீவன் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்கள் வினைப்பயனே.

எப்படி கனவு கலைந்ததும் நாம் விழித்துக் கொள்கிறோமோ, அது போலவே வினை முடிவுறுங்கால் அந்த சூக்கும வாழ்வை முடித்துக் கொண்டு ஜீவன் மறுபடியும் ஒரு புதிய சரீரத்தை எடுத்துக் கொள்கிறது. எனவே பல சாஸ்திரங்களும் சொல்கிற பிரகாரம் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கின்ற பொழுது எண்ணங்களின் மூலமே மனிதன் தனது வாழ்வை ஒயாது மாற்றிக் கொண்டே போகிறான் என்பது தெளிவாகிறது. அப்படி மாறி அமைகின்ற நிலையையே மறுபிறவி என்று சொல்கிறார்கள். எண்ணங்களற்ற பெரு நிலைதான் முக்தி எனப்படுகிறது.

RAJAJI JS

No comments:

Post a Comment