Tuesday, September 6, 2016

கேள்வி - எனக்கு பிராணாயாமம் செய்வதால் நெஞ்சில் வலி ஏற்படுகிறது

. மூச்சை கவனித்தால் போதும் என்று நீங்கள் ஒரு பதிவில் சொல்லியிருந்ததாக ஞாபகம். அது மட்டும் போதுமா ? அதனால் முழு பலனும் கிடைக்குமா ? நான் எனன செய்வது ?

இராம் மனோகர் - நம் முன்னோர்களில் கோடாணு கோடி பேர் ப்ராணாயாமம் செய்யாமலேயே 100 ஆண்டுகளுக்கு மேல் ஆரோக்யமாக, நல்வாழ்வு வாழ்ந்து நிறைவடைந்திருக்கிறார்கள். ப்ராணாயாமம் என்பது ஹடயோகிகளின் ஒரு முக்கியமான பயிற்சியாகவே கருதப்பட்டு வந்தது. சாதாரணமாக நாம் மூச்சு விடும் பொழுது 8 அங்குலம் இழுத்து 12 அங்குலம் வெளியே விடுவதால் ஏற்படும் இழப்பு மூன்றில் ஒரு பங்காகும். அந்த விரையத்தைத் தவிர்ப்பதற்காக பிராணாயாமம் தரப்பட்டது. பொதுவாக நாம் அனைவருமே நம்முடைய அன்றாட அலுவல்களுக்கிடையில் மூச்சை கவனிப்பது இல்லை. மூச்சு விடுகிறோம் என்பதையே மறந்துதான் போகிறோம். அதே நேரத்தில் நீங்கள் மூச்சை கவனித்து நல்ல ஆழமாக சுவாசிக்கப் பழகிக் கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு ப்ராணாயாமம் தேவையே இல்லை. மூச்சைப் பற்றி பேசாத ஞானிகள் யாருமே இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் மூச்சு எனும் நூலில்தான் நம் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

நம் மனதிற்கும் மூச்சிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனமிறக்கும் நிலை அல்லது மனதற்ற நிலை என்று சொல்கிறார்களே !! அது என்ன தெரியுமா ? மூச்சை உள்ளே இழுத்து விட்டு பின் வெளியே விடுகிறோமல்லவா ? இந்த இரண்டு செயல்களுக்கும் இடைப்பட்ட நேரம்தான் மனதற்ற நிலை ஏற்படுகிறது. அந்த இடைப்பட்ட நேரத்தை அதிகப்படுத்துவன் யாராக இருந்தாலும், எந்த செயலைச் செய்பவனாக இருந்தாலும் அவன் யோகிதான். அதாவது நம் அனைவருக்குமே மனதற்ற நிலை என்பது ஒவ்வொரு சுவாசத்திலும் நடைபெறுகின்றது. உள்ளே செல்கிற சுவாசக் காற்றானது உடனே வெளியே வருவதில்லை. சற்று அசைவற்ற நிலையை பெற்று பிறகுதான் வெளியே வருகிறது. அது போலவே சுவாசத்தை வெளியே விட்டுவிட்ட பிறகு உடனேயே அது உள்ளே இழுக்கப்படுவதில்லை. அதற்கும் சில நொடிகள் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த கால அவகாசம்தான் மனதற்ற நிலையாகும்.

இதனாலாதான் நம் யோக முறைகளில் குறிப்பிட்ட கால அளவு இழுத்து, குறிப்பிட்ட கால அளவு உள்ளே வைத்திருந்து, பின் குறிப்பிட்ட கால அளவு வெளியே விடச் சொல்கிறார்கள். இதில் உள்ளே கும்பகம் பண்ணி வைத்திருக்கும் கால அளவு அதிகமாக இருக்க வேண்டும் என்று சொல்வது இதற்காகத்தான். இந்த இடைவெளியின் கால அளவை சாதாரண நிலையில் நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. மூச்சை கவனித்து வர வர, பயிற்சியில் முன்னேறும் அளவிற்குதான் இதை உணர முடியும். முதலில் இந்த பயிற்சியின் பலன் ஸ்தூல உடலுக்குதான் கிடைக்கிறது. அதற்குப் பிறகுதான் அது சூக்குமம் மற்றும் அது கடந்த நிலைகளில் வேலை செய்யத் துவங்குகிறது. எனவே பொறுமையுடனும், விடா முயற்சியுடனும் மூச்சை கவனித்து, ஆழ்ந்து சுவாசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்து வந்தாலே நம் உடலுக்கு நிரந்தர ஆரோக்யம் கிடைத்து விடும். இந்தப் பயிற்சியினால் நம் உடலில் பஞ்சபூதங்களின் அளவு தேவைக்கேற்ப சரி செய்யப்படுகிறது.

மனம் எனும் மத யானையை அடக்குவதற்கு மூச்சை கவனித்து ஆழ்ந்து சுவாசிக்கும் பயிற்சி அங்குசமாகும் என்று சொன்னால் அது மிகையல்ல. இந்தப் பயிற்சியினால் மூளையில் கரியில வாயுவின் தேக்கம் தடுக்கப்படுகிறது. இடது மற்றும் வலது சுவாசங்கள் தலா பன்னிரண்டு மணி நேரம் நடக்கும் பொழுதும், மூளையின் இரண்டு கோளங்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. உடல் முழுவதும் தேங்கியுள்ள நச்சுக் கழிவுகள், அமிலக் கழிவுகள் முழுவதும் வெளியேறி விடுகின்றன., உடல் என்ற பருப் பொருளும், மனம் எனும் சூக்கும்ப் பொருளும் இணைக்கப்படுகின்றன. இதனால் மனம் தூய்மைப்படுத்தப்படுகிறது. எனவே தாங்கள் ப்ராணாயாமம்தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களது அன்றாட பணிகளுக்கு இடையிலும் இடைவிடாது மூச்சை கவனிக்கப் பழகிக் கொண்டாலே போதும். உடல் மற்றும் மனம் செம்மைப்படுத்தப்படும். இதற்கு ஆரம்பத்தில் மந்திரங்களை உபயோகப்படுத்தலாம்.

ஓம் என்று மனதில் உச்சரித்துக் கொண்டு ஆழமாக உள்ளிழுங்கள். நமசிவாய என்றோ, நமோ நாறாயணா என்றோ மனதில் உச்சரித்துக் கொண்டு வெளியே விடுங்கள். உதாரணமாக இரண்டு மந்திரங்களைச் சொல்லியிருக்கிறேன். அவரவர் இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை உச்சரிக்கலாம். இதனால் மூச்சும் சீராகும், மந்திர அதிர்வுகளின் பலனும் கிடைக்கும். நன்றி. வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment