Wednesday, February 3, 2016

பாரம்பர்ய சமையல் ` லொக்... லொக்’, `ஹச்... ஹச்’சுக்கு `குட்பை' சொல்லுங்கள

பாரம்பர்ய சமையல் `
லொக்... லொக்’, `ஹச்... ஹச்’சுக்கு `குட்பை' சொல்லுங்கள்!

#கஷாயம்

தேவையானவை: மிளகு - 10, இஞ்சி (அலசி, தோல் சீவியது) - சிறிதளவு, பனங்கல்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன், சித்தரத்தை - சிறிதளவு, துளசி (அலசி ஆய்ந்தது) - 2 கைப்பிடி அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அடிகனமான பாத்திரத்தில் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும், ஒரு டம்ளர் நீராக சுண்ட வேண்டும், வடிகட்டி இளம் சூடாக பருகலாம்.
இந்தக் கஷாயம் மழை, குளிர் காலத்தில் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

#தூதுவேளை துவையல்

தேவையானவை: தூதுவேளை - ஒரு கப், புதினா- அரை கப், முழு உளுத்தம்பருப்பு - கால் கப், சின்ன வெங்காயம் 8, காய்ந்த மிளகாய் - 4, புளி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உரித்த சின்ன வெங்காயம், முழு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், புளி சேர்த்து வதக்கி, பின்னர்  தூதுவேளை, புதினா சேர்த்து மேலும் வதக்கி எடுத்து ஆறவிடவும். இதனுடன் உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்த துவையலில் சேர்க்கவும்.
இருமல், இரைப்பு, சளி தொந்தர வுக்கு தூதுவேளை சிறந்த நிவாரணி.

#ஹெர்பல் டீ

தேவையானவை: கிராம்பு - 6, மிளகு - 5, தேன் - தேவையான அளவு, டீத்தூள் - ஒரு டீஸ்பூன், ஓமவல்லி இலை - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், துளசி - ஒரு கைப்பிடி அளவு.
செய்முறை: கிராம்பு, மிளகை பொடி செய்துகொள்ளவும். ஒரு கப் நீரில் இந்த பொடியைச் சேர்த்து, இதனுடன் டீத்தூள், ஓமவல்லி இலை, சீரகம், துளசி சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி, தேன் கலந்து பருகவும்.
இந்த ஹெர்பல் டீ உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.

#மிளகு ரசம்

தேவையானவை: தக்காளி - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், புளி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: புளியை நீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சேர்த்து வறுத்து, ஆறவிட்டு, மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் புளிக்கரைசலை விட்டு... நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, வறுத்து அரைத்த விழுதை சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும். தாளிக்கும் பொருட்களை சிறிதளவு எண்ணெயில் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
மிளகு, ஜீரண சக்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது. ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

No comments:

Post a Comment