#குடமிளகாய் புலாவ் !!!
தேவையானவை:
அரிசி & ஒரு கப், குடமிளகாய் & 2, பஜ்ஜி மிளகாய் & 1, வெங்காயம் & 1 (பொடியாக நறுக்கவும்), மல்லித்தழை & கால் கப், சீரகம் & கால் டீஸ்பூன், மிளகுத்தூள் & கால் டீஸ்பூன், சீஸ் துருவல் & 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை:
சாதத்தை உதிரியாக வடித்து ஆறவிடவும். தேவையான அளவு உப்பை கலந்து கொள்ளவும். குடமிளகாய், பஜ்ஜிமிளகாயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், மிளகுத்தூள் போட்டு வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பஜ்ஜி மிளகாய் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். குடமிளகாய் துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். காய்கறி கலவை ரொம்பவும் குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும். ஆறிய சாதத்தை காய்கறி கலவையுடன் சேர்த்து கிளறவும். மல்லித்தழை தூவி, சாப்பிடுவதற்கு முன்பு சீஸ் துருவலை சேர்த்து பரிமாறவும். ________________________________________
#பூண்டு&மிளகாய் சாதம் !!!
தேவையானவை:
பச்சைமிளகாய் & 6, பூண்டு பல் & 2 டேபிள்ஸ்பூன், அரிசி & ஒரு கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, வெங்காயம் & கால் கப், எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை:
சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதனிடையே, பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுதை வதங்கி கொண்டிருக்கும் காய்கறி கலவையில் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். ஆறவைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும். ________________________________________
#புதினா சாதம்
தேவையானவை:
பாஸ்மதி அரிசி & ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் & ஒரு டேபிள் ஸ்பூன், மிளகு & 2 டீஸ்பூன், கிராம்பு & 2, இஞ்சி & பூண்டு விழுது & அரை டீஸ்பூன், வெங்காயம் & 1 (நறுக்கிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய புதினா & அரை கப், பச்சைமிளகாய் & 3 (கீறிக் கொள்ளவும்), உப்பு & தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி & பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். மிளகு கிராம்பு, பச்சைமிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். புதினா இலைகளைப் போட்டு வதக்கி, ஆற வைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும். ________________________________________
#கேரட்&குடமிளகாய் சாதம் !!!
தேவையானவை:
குடமிளகாய் & 2, கேரட் & 1 (மீடியம் சைஸ்), எலுமிச்சை சாறு & ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி & ஒரு கப், மஞ்சள்தூள் & ஒரு டீஸ்பூன், தனியா & 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு -& 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 5, நெய் அல்லது எண்ணெய் & ஒரு டீஸ்பூன், மல்லித்தழை & சிறிது, உப்பு & தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை உதிரியாக வடித்து ஆறவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கேரட், குடமிளகாயைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் (காய்கறிகளை அதிக நேரம் வதக்க வேண்டாம்.. குழைந்து விடும்). தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன், வதக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, ஆற வைத்த சாதத்துடன் சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு கலந்து மல்லித்தழை தூவி பரிமாறவும். _
RAJAJI JS. 14.02.2016
No comments:
Post a Comment