Sunday, February 14, 2016

திக்குவாய்க்குத் தீர்வு என்ன?

திக்குவாய்க்குத் தீர்வு என்ன?

மருத்துவர் கு. சிவராமன்

#எனக்கு 28 வயது. எனக்குத் திக்குவாய் பிரச்சினை இருக்கிறது. வழக்கமாக எனக்குத் திக்குவதில்லை என்றாலும், புதியவர்களிடம் பேசும்போதும், பொது நிகழ்ச்சிகளிலும், சிலர் கூடியிருக்கும்போதும் இப்படி நிகழ்கிறது. என் பெயரைச் சொல்லக்கூடத் தடுமாறுகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக எனக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. இதன் காரணமாக எனது வேலையில் ஜொலிக்க முடியாமல் இருக்கிறேன். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வழி கூறுங்கள்.

@உங்களுக்குத் தேவை மருந்து அல்ல, மன உந்துதல். இன்னும் இச்சிரமத்துக்கான சரியான நோய்க் காரணம் தெரியவில்லை. குழந்தைப் பருவத்தில் பேச்சாற்றல் வளர்ச்சிக்கும் மொழி அறிவு வளத்துக்கும் இடையில் ஏற்படும் சமநிலை தவறுவதால் இது ஏற்படுகிறதா என்று இன்னும் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், பலருக்கும் பேச்சில் திக்குதல் அடிமனதில் பயத்தை ஒட்டிய வெளிப்பாடாகத்தான் பெரும்பாலும் தொடங்கும். பின்னர் மூளை அதற்குப் பழகி, நிரந்தர வருத்தமாகிப் போகும்.

உலகை வெற்றி கொள்ளும் ஆற்றல் என்னிடம் வந்துவிட்டது என்ற திடமான நம்பிக்கைதான் உங்களுக்கு முதலில் அவசியம். பின்னர் தொடர்ச்சியான பேச்சுப் பயிற்சி மிக மிக அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்ல காற்றோட்டமான விசாலமான திறந்த வெளியில் (மொட்டை மாடி போல்) நல்ல பாடலைச் சத்தமாகப் பாட முயற்சியுங்கள். மனதுக்குப் பிடித்த நீண்ட வாக்கியங்களைக் கொண்ட சொற்றொடரை / கவிதையை உற்சாகமான குரலில் படியுங்கள்.

சித்த மருத்துவத்தில், கோழிமுட்டையைக் கொண்டு செய்யப்படும் அண்டத் தைலத்தை நாக்கில் தடவி, பின்னர்ப் பேச்சுப் பயிற்சி செய்யச் சொல்வார்கள். அதை முயற்சியுங்கள். கூடவே மனதை ஒரு நிலைப்படுத்தி, தன்னம்பிக்கையை வளர்க்கும் பிராணாயாமப் பயிற்சியையும் சேர்த்துச் செய்வது உங்களுக்குக் கூடுதல் பலனளிக்கும்.

#எனக்கு 65 வயது. எனக்கு நீண்ட நாட்களாக வாய்ப்புண், வயிற்றுப்புண் இருக்கிறது. PAN 40 மாத்திரையைத் தினமும் எடுத்துக்கொள்கிறேன். ஆனாலும் புண் குறையவில்லை. மிளகாய் அல்லது மிளகாய்த் தூள் சேர்க்கும் எந்தப் பொருளையும் துளிகூடச் சாப்பிடமுடியவில்லை. இதற்கு என்ன செய்வது?

@ வாய்ப்புண், வயிற்றுப் புண்ணுக்கு வெறும் மருந்து போதாது. உணவும் வாழ்வும் சீர்படுத்தப்பட வேண்டும். அப்போது மட்டுமே இந்த நோய் திரும்பாது. உணவில் மணத்தக்காளி கீரையும், பாசிப் பருப்பும், தேங்காய்ப் பாலும் சேர்த்த குழம்பைச் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வாருங்கள். இட்லிக்குப் பிரண்டை துவையலும், சோற்றுக்குச் சுரைக்காய்/வெள்ளைப் பூசணி கூட்டும் தொட்டுச் சாப்பிடுங்கள்.

காலை 11 மணி அளவில் மோர் 2 குவளை அருந்துங்கள். மாலையில் கனிந்த வாழைப்பழம் சாப்பிடுங்கள். இரவில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த திரிபலா பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வாருங்கள். சீதளி பிராணாயாமப் பயிற்சி செய்யுங்கள்.

பரபரப்பான மனம் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதைக் கட்டுப்படுத்த 15 நிமிட தியானப் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கு உள்ள பிரச்சினைக்கு முடிந்தவரை மிளகாய், மிளகாய் வற்றலைத் தவிர்ப்பதுதான் நல்லது. பதிலாக, காரச் சுவைக்குக் கொஞ்சமாக மிளகைப் பயன்படுத்துங்கள். உங்கள் அருகாமையில் உள்ள சித்த மருத்துவரை அணுகி, குன்ம நோய்க்கான மருத்துவத்தை முறையாக மேற்கொள்ளுங்கள். ஓரிரு மாதத்தில் நிச்சயம் குணம் பெறலாம்.

#என் வயது 37. எனது இடது கண்ணில் பிரச்சினை இருக்கிறது. திடீரென்று ஒரு நாள் காலை பார்வை மங்கலாகிவிட்டது. கண் மருத்துவரிடம் பரிசோதித்தபோது, சி.எஸ்.ஆர். பிரச்சினை என்று தெரிய வந்தது. அதற்கு மல்டி வைட்டமின் மாத்திரைகளும், nevenac drops-ம் பரிந்துரைத்தார். ஆனால், இன்று வரை பார்வை மங்கலாகவே இருக்கிறது, கருவிழியின் நடுப் பகுதியில் புகையடித்தது போல் இருக்கிறது. இதற்குத் தீர்வுகாண வழிகாட்டுங்கள்.

@ Chronic serous retinopathy எனும் CSR கண் நோய் பெரும்பாலும் தானாகச் சரியாகக்கூடிய கண் நோயே. 4-6 மாதங்களுக்குள் நிச்சயம் சரியாகும். அதிகக் கவலை தேவையில்லை. கண் நரம்புத் திரையான ரெட்டினாவுக்குள் கண் கோளத் திரவம் கசிந்து ஏற்படும் பிரச்சினை இது. நீங்கள் ஸ்டீராய்டு மருந்தை எடுத்துக்கொள்பவரா? அப்படி இருந்தால் மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி அதை நிறுத்துங்கள்.

அதிக மனஅழுத்தமும் இதற்குக் காரணம் எனப்படுகிறது. கண் மருத்துவரின் அறிவுரையைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். பொன்னாங்கண்ணிக் கீரை, கடலில் கிடைக்கும் முத்தில் செய்யப்படும் பற்பம் ஆகிய இரண்டும் சித்த மருத்துவத்தில் கண் காக்கும் உள்மருந்துகள். கண்ணுக்கான பித்த ஆற்றலைச் சீராக்கும் இவை Chronic serous retinopathy க்குப் பயனளிக்குமா என்று ஆய்வு நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் உணவாகக் கீரையையும், உங்கள் அருகாமை சித்த மருத்துவரிடம் ஆலோசித்து மருந்தாக முத்துப் பற்பத்தையும் பெற்றுச் சாப்பிடுங்கள். விரைவில் நலம் பெறுவீர்கள்.
http://tamil.thehindu.com

RAJAJI JS.  14 02 2016

No comments:

Post a Comment