Saturday, February 20, 2016

ஜென் துறவியின் கதை.

ஓஷோ சொன்ன கதை: நிலவைக் கொடுத்திருப்பேன் !!

இது ஒரு ஜென் துறவியின் கதை. நள்ளிரவில் ஒரு திருடன் அவர் குடிசைக்கு வந்தான். அங்கே திருடுவதற்கு ஒன்றுமேயில்லை. எழுந்து பார்த்த ஜென் குரு, அத்திருடன் குறித்து சிந்திக்கத் தொடங்கினார். அவன் அந்தக் குடிசைக்குத் திருட வருவதற்கு முன்பு நான்கைந்து மைல்களாவது பயணம் செய்திருப்பான். அவனுக்கு ஒன்றுமே இக்குடிசையில் கிடைக்கவில்லை. அவன் கும்மிருட்டு சூழ வெறுங்கையுடன் வீடு திரும்பும்போது என்ன நினைப்பான் என்றெல்லாம் அந்த ஜென் குரு வருந்தத் தொடங்கினார்.

ஜென் குருவிடம் ஒரே ஒரு போர்வையும் தலையணையும் இருந்தன. அவர் அந்தப் போர்வையை திருடன் எடுத்துச் செல்லட்டுமென்று நினைத்து அதைத் தூக்கி மூலையில் விட்டெறிந்தார். தனது துவராடையைக் கழற்றி அதைத் திருடன் இருக்கும் திசையில் போட்டார். ஆனால் திருடனால் இருட்டில் எதையும் கண்டறிய முடியவில்லை. கடைசியாக அந்தத் திருடனிடம் பேசிய குரு, “இந்தத் துவராடையை எனது பரிசாக ஏற்றுக்கொள்” என்றார்.

திருடனுக்கு ஒரே ஆச்சரியம். அவனுக்குச் சங்கடமும்கூட; வேறு வழியின்றி அவர் கொடுத்த துவராடையை எடுத்துக்கொண்டு குடிசையை விட்டு வெளியேறினான்.

ஜென் குரு குடிசையை விட்டு வெளியே வந்தார். அத்திருடனின் வருகையைக் கவிதையாக எழுதினார். நிலவினடியில் நிர்வாணமாக அமர்ந்தார். அதுவரை நிலவொளியின் அழகை அப்படி அவர் அனுபவித்ததேயில்லை. என்னால் முடிந்திருந்தால் அந்தத் திருடனுக்கு நிலவையே கொடுத்திருப்பேன் என்பதுதான் அவர் எழுதிய கவிதை.

வாழ்க்கை எப்போதும் நம் அருகிலேயே உள்ளது. எத்தனை ஆனந்தமாக அனுபவிக்க இயலுமோ அத்தனை அதிகமாக மற்றவருக்குத் தரவும் முடியும். எதற்கும் சார்ந்திருப்பது என்ற எண்ணமே நம்மை ஏழ்மையாகவும் இரங்கத் தக்கவராகவும் மாற்றுகிறது.

எதையும் பற்றியிராத வாழ்க்கைதான் உலகைத் தொடாமல் உலகிலேயே பயணிக்கிறது. தாமரை தண்ணீரில் இருக்கிறது. ஆனால் தண்ணீரைத் தொடுவதேயில்லை.

RAJAJI JS. 20 02 2016

No comments:

Post a Comment