மலட்டுத் தன்மைக்கு மாற்று மருந்து !!!
#ஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதத்தில் என்னென்ன மருந்துகள் உள்ளன?
ஆண் மலட்டுத் தன்மை என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல், இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை. இது பல நோய்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளன. இவை த்ரயோ உபஸ்தம்பங்கள் என்று ஆயுர்வேதப் பெரியோர்களால் கூறப்படுகின்றன.
1. உணவு - இது பித்தத்தை நிலைநிறுத்தும் செயல்.
2. உறக்கம் - இது கபத்தை நிலைநிறுத்தும் செயல்.
3. அப்பிரம்மச்சரியம் - முறைப்படுத்தப்பட்ட இல்வாழ்க்கை. இது வாதத்தை நிலைநிறுத்தும் செயல்.
இந்த மூன்று விஷயங்களும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றன. இல்வாழ்க்கை குறைபாடுகள் எனும்போது ஆண்மையின்மை, விறைப்புத்தன்மை இன்மை, இச்சையின்மை, விந்து முந்துதல் என்று பல நுண்பிரிவுகள் உள்ளன. ஒருவனுக்கு இல்வாழ்க்கை குறைபாடுகள் உடல் நோய்களாலோ, மனக் குறைபாடுகளாலோ அல்லது இரண்டின் காரணமாகவோ ஏற்படலாம்.
என்ன காரணம்?
இன்றைய சூழ்நிலையில் வாழும் முறை, தவறான உணவுப் பழக்கம், படபடப்பு, பயம், மனஅழற்சி, கிலேசங்கள் ஆகியவை ஆண்மைக் குறைவுக்குக் காரணமாகின்றன. தாம்பத்திய உறவில் முழுமையாக ஈடுபட முடியாமல் போகும்போது, அது மேலும் மனத்துயரத்தை ஏற்படுத்துகிறது.
விறைப்புத்தன்மை இல்லாமை என்பது 'மேட்ரஸ்தப்ததா' என ஆயுர்வேதத்தில் அழைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு விந்து வெளியே வராமல் சிறுநீர்ப்பைக்கு உள்ளே சென்றுவிடும். இதற்கு Retrograde ejaculation என்று பெயர். இதை ஆயுர்வேதத்தில் சுக்ரஜ உதாவர்த்தம் என்று அழைப்பர். ஒருவருடைய தாம்பத்திய உறவு மனதும், உடலும், நரம்பு மண்டலமும், ஹார்மோன்களின் இயக்கமும் சேர்ந்தது. காம இச்சை (Sex drive) எண்ணங்களாலும், வார்த்தைகளாலும், தொடு உணர்வாலும், பார்வைகளாலும் தூண்டப்படும். அதன் பின் உணர்ச்சித் தூண்டல் ஏற்படும். மூளைக்கும் தண்டுவடத்துக்கும் ஆண் உறுப்பின் ரத்தக் குழாயில் ஓடுகிற சுத்த ரத்தத்துக்கும் சம்பந்தம் உண்டு.
ஆண் உறுப்பில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தம் நன்றாக ஓட வேண்டும். இவ்வாறு ஓடும்போது அங்கு இருக்கும் தசைகள் இறுகி, ஆண் உறுப்பில் அழுத்தம் அதிகமாகி விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும். விந்து வெளியேறும் உச்ச நிலையை அடைந்த பிறகு, விறைப்புத் தன்மை ஏற்படாது. 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏற்படலாம்.
காம இச்சை குறைவதற்கு மன சோகம், மனப் படபடப்பு, மனைவியின் மீது ஈர்ப்பு இல்லாமை, சில மருந்துகள், டெஸ்டோஸ்டீரோன் (testosterone) எனும் ஆண் ஹார்மோன் குறைதல் போன்றவை எல்லாம் காரணமாகின்றன. வயது அதிகரிக்கும்போது, இது குறையலாம். காம இச்சைகளைத் தடுப்பதன் மூலமும் விறைப்புத்தன்மை குறையலாம்.
மனசோகத்துக்குச் சாப்பிடும் மருந்துகளால் இது உருவாகலாம். மைதுனத்தில் சுகம் கண்டு, தாம்பத்திய உறவில் சுகம் அற்றுப் போகிறவர்களும் உண்டு. மனம் சார்ந்த சிகிச்சைகளாகிய ஸத்வாஜய சிகிச்சை, மனதுக்கு பலம் ஊட்டும் சிகிச்சைகள் இதற்கு பலன் அளிக்கும்.
பரிசோதனைகள்
விறைப்புத்தன்மை இல்லாமையை Erectile dysfunction என்றும், Impotency என்றும் அழைப்பார்கள். விறைப்புத்தன்மை இருந்தால்தான் தாம்பத்திய உறவும், குழந்தைப் பேறும் சாத்தியம். இதற்கு ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை போன்றவற்றைச் செய்வார்கள். ஆண் உறுப்பில் சில மருந்துகளை செலுத்திக் குறைபாட்டைக் கண்டுபிடிப்பார்கள். மனைவியிடம் கோபம் இருந்தாலோ, மனப்பதற்றம் இருந்தாலோ, சோக நிலையில் இருந்தாலோ, கர்ப்பம் ஏற்பட்டுவிடும் என்ற பயம் இருந்தாலோ, குற்ற உணர்வு இருந்தாலோ, அறியாமை இருந்தாலோ தாம்பத்திய உறவு பாதிக்கப்படலாம்.
எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் விறைப்புத்தன்மை சற்று குறையும், அது ஒரு பிரச்சினையல்ல. அது தொடர்ந்து இருந்தால்தான் பிரச்சினை. ஒரு சிலருக்கு ஆண் உறுப்பில் நாளடைவில் கொழுப்புப் படிமானம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் குறைகிறது. நீரிழிவு, கொழுப்பு அதிகரித்தல், ரத்தக் கொதிப்பு ஆகியவற்றால் இப்படி ஏற்படலாம்.
தண்டுவடத்தில் அடிபட்டவர்களுக்கும், புராஸ்டேட் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும், புற்றுநோய்க்குக் கதிரியக்க சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கும், Multiple sclerosis உள்ளவர்களுக்கும், பக்கவாத நோய் வந்தவர்களுக்கும், சிகரெட் பிடிப்பவர்களுக்கும் இந்நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இதய நோயாளிகளுக்கு, மற்ற கடினமான வேலைகளுடன் ஒப்பிடும்போது உடலுறவு கொள்ளுதல் பெரிய தீங்கை விளைவிப்பது இல்லை. ஓய்வாக இருக்கும் ஒரு மனிதனுக்கு மாரடைப்பு வரும் சதவிகிதத்தைவிட, உடலுறவு வைத்துக்கொள்ளும்போது மாரடைப்பு வரும் சதவிகிதம் சற்று அதிகம்தான். ஆனால், அனுபவத்தில் இது குறைவு. இருந்தாலும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயத் துடிப்பு மாறுபட்ட நிலையில் உள்ளவர்கள், வால்வு பிரச்சினை உள்ளவர்கள், மருத்துவர்கள் ஆலோசனை பெற்ற பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடுவது நல்லது.
நோயின் தன்மை சற்று மென்மையாக இருந்தால் இல்வாழ்க்கையில் ஈடுபடுவதில் தவறில்லை. அவ்வப்போது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அத்துடன் ve cardio myopathy நோய் உள்ளவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது. இந்த மாதிரி நோய் உள்ளவர்களுக்குக் காலில் நாடித் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் பார்க்க வேண்டியது அவசியம்.
சிகிச்சைகள்
ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களில் ஓர் அங்கம் வாஜீகரணம் எனப்படும். வாத்ஸ்யாயனரின் காம சூத்ரம், திருக்குறளின் காமத்துப்பால் ஆகியவற்றை எல்லாம் பார்க்கும்போது, மலட்டுத்தன்மை சார்ந்த சிகிச்சையைக் கூச்சப்படாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதேநேரம் இந்த சிகிச்சை சார்ந்து முறையற்ற ஆலோசனைகள், போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம். அனுபவமுள்ள, அறிவியல்பூர்வமான ஆயுர்வேத மருத்துவர், சித்த மருத்துவர், நவீன மருத்துவரையே அணுக வேண்டும். மனப்பதற்றம் உடைய ஆண்களுக்கு சீக்கிரத்தில் விந்து முந்திவிடும். இது இருவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும். இதற்கு ஆயுர்வேத முறையில் தகுந்த சிகிச்சை அளிக்க முடியும்.
ஒரு மனிதனுக்கு உடலில் ஏழு தாதுக்கள் உள்ளன. ஏழாவது தாது சுக்ர தாதுவாகும். இந்த சுக்ர தாது குழந்தை பிறப்புக்குக் காரணமாக இருக்கிறது. இது ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
அன்ன ரஸம், சுக்ர தாதுவாக மாறுகிறது. இந்த சுக்ர தாது உடலுக்கு வலுவையும் தருகிறது. இந்த சுக்ர தாதுவைப் பலப்படுத்த நல்ல உணவு வகைகளை உண்ணுதல், வாரந்தோறும் எண்ணெய் குளித்தல், தினமும் நடைப்பயிற்சி, யோகா, 20 நிமிடம் தியானம், மனப் பதற்றத்தை தவிர்த்தல் போன்ற அம்சங்களுடன், சில சிறப்பான மருந்துகளையும் உட்கொள்ளலாம்.
எளிய மருத்துவம்
# அமுக்குரா கிழங்கு சூரணம் 10 கிராம் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட வேண்டும்.
# அமுக்குரா கிழங்கு, நிலப்பனை கிழங்கு, சதாவரி, சாலாப்மிசிரி, முருங்கை விதை, பூனைக்காலி விதை, தாமரை விதை, அதிமதுரம், நெல்லி வற்றல், முருங்கைப் பிசின், நீர்முள்ளி விதை, மதனகாமப்பூ, திராட்சை, எள், தேற்றான்கொட்டை, அத்திப் பழம், பூமி சர்க்கரை கிழங்கு, பருத்திக் கொட்டை, பிஸ்தா, அக்ரோட் பருப்பு, வெள்ளரி விதை, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பூசணி விதை, பசும் பால் போன்றவை ஆண்மையை அதிகரிக்கும்.
# ஜாதிக்காய் மனஅழுத்தத்தைப் போக்கும், பாலுணர்வைத் தூண்டும். ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ சாப்பிடலாம். இதை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து, இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் 4 கிராம் சூரணத்தை காய்ச்சிக் குடிக்கலாம். இது நரம்புத் தளர்ச்சியை போக்கும்.
# மாதுளம் பூவைப் பசும் பாலில் வேகவைத்து, சிறிது தேன் கலந்து அருந்தினால் சுக்ர பலம் பெறும்.
# முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
# வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிடலாம்.
# அத்திப்பழம் தினமும் சாப்பிட்டுவரலாம்.
# கருஞ்சீரக எண்ணெயை ஆணுறுப்பில் தடவி வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
# ஓரிதழ் தாமரையை பொடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டுவர, நல்ல பலன் கிடைக்கும்.
-டாக்டர் எல். மகாதேவன்
http://tamil.thehindu.com/
No comments:
Post a Comment