#ஃப்ரூட் சாலட்
தேவையானவை: அன்னாசி, ஆப்பிள், பப்பாளி - தேவையான அளவு, தேன் - 4 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 துளிகள், பாதாம் - 10.
செய்முறை: அன்னாசி, ஆப்பிள், பப்பாளியைச் சதுரமாக நறுக்கிக்கொள்ள வேண்டும். இதில், தேன் ஊற்றிக் கலக்கி, எலுமிச்சைச் சாறு கலந்து, பாதாம் தூவிச் சாப்பிடலாம்.
பலன்கள்: நார்சத்து, நீர்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கலை விரட்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பாதாம், தேன் சேர்வதால் ஆன்டிஆக்ஸிடன்ட் கிடைக்கிறது. இதயம் ஆரோக்கியமாகும். நல்ல கொழுப்பு உடலில் சேரும்.
#பூசணி சாலட்
தேவையானவை: சதுரங்களாக நறுக்கிய வெள்ளைப் பூசணி - 1 கப், நிலக்கடலை - 1 கைப்பிடி, நறுக்கிய பச்சைமிளகாய் - 2, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு, கொத்தமல்லி - தேவையான அளவு.
செய்முறை: நிலக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். சதுரமாக வெட்டிய வெள்ளைப் பூசணித் துண்டுகளோடு, நிலக்கடலையைப் போட்டுக் கலக்க வேண்டும். அதில் பச்சைமிளகாய், உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லியைக் கலந்துச் சாப்பிடலாம்.
பலன்கள்: வைட்டமின் பி1, பி3, சி நிறைந்துள்ளன. 90 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும். வேர்க்கடலை சேர்வதால், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கும். சிறுநீரகப் பிரச்னை, பெப்டிக் அல்சர் இருப்பவர்கள் இந்த சாலட்டை சாப்பிடுவது நல்லது.
#கேரட் ஜூஸ்
தேவையானவை: கேரட் - 2, தேங்காய்ப்பால் - அரை கிளாஸ், தேன் - சுவைக்கு ஏற்ப.
செய்முறை: கேரட்டின் மேல் தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். அதில், தேங்காய்ப்பாலைக் கலந்து, தேன் சேர்த்துக் குடிக்கலாம்.
பலன்கள்: கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ளலாம். பார்வைத்திறனுக்கு நல்லது. கேரட்டில் வைட்டமின் சி இருப்பதால் சருமம் அழகாகும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. இளமையைத் தக்கவைக்கும். தேங்காய்ப் பால் வயிற்றுப்புண், வாய்ப் புண்களை ஆற்றும்.
#ஹாட் சாக்லேட்
தேவையானவை: பால் - ஒரு கப், கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், ஹாட் சாக்லேட் பவுடர் - 1 டீஸ்பூன், நாட்டு சர்க்கரை - 2 டீஸ்பூன்.
செய்முறை: நன்கு காய்ச்சிய பாலில் கோகோ பவுடர் மற்றும் ஹாட் சாக்லேட் பவுடர் (சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்) கலந்து, நாட்டு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.
பலன்கள்: கோகோவில் பாலிபினால் அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோயை எதிர்க்கக்கூடியது. அளவாகச் சாப்பிட்டால் சருமம், இதயத்துக்கு நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்டு கசப்புச் சுவையைத் தரும். எனினும், இவை சத்துக்கள் நிறைந்தவை. நாட்டுச்சர்க்கரை, பாலுடன் சேர்வதால் கசப்பு நீங்கி, சுவையாக இருக்கும். வாரம் ஓரிருமுறை குடித்து வருவது நல்லது.
#அன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ்
தேவையானவை: அன்னாசிப்பழம் - 6 துண்டுகள், தேங்காய்ப்பால் - அரை கிளாஸ், தேன் - சுவைக்கு ஏற்ப.
செய்முறை: அன்னாசியைச் சிறு சிறு துண்டுகளாக்கி, சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, இதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.
பலன்கள்: பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகளுக்கு இதைக் குடிக்கக் கொடுக்கலாம். சத்துக்கள் நிரம்பியது. வயிறும் நிறையும். தொண்டை வலி, கரகரப்பு நீங்கும். பெரியவர்கள் குடித்துவர தொப்பை கரையும்.
RAJAJI JS. 14.02.2016
No comments:
Post a Comment