Thursday, December 1, 2016

மனித உடலில் நரம்பு மண்டல அமைப்பு


==============================
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.
மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.
காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.
மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.
அதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.
தன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல் களில் அடங்கும்.
பொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.
இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.
நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.
நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.
இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment