மனித வாழ்க்கை நிரந்தரமற்றது. இன்ப துன்பம் நிறைந்தது. மன மகிழ்ச்சியும் உண்டு. மனக் குழப்பமும் உண்டு. நெருக்கடியான உலகுக்கு முகம் கொடுக்கும் மனிதன் பல்வேறுபட்ட விடயங்களை ஒரே நேரத்தில் விரைவாக செயல்படுத்துகின்ற போது அல்லது முனைகிற போது மனநெருக்கடி ஏற்படுகின்றது. இதனால் அவன் மன அழுத்தத்திற்கு ஆளாகி அநேக நோய்களுக்குள் சிக்கித் தவிக்கின்றான். குறிப்பாக நீரிழிவு, மாரடைப்பு, இரத்த அழுத்தம், அஸ்மா, கோபம், நித்திரையின்மை போன்றவைகளைக் குறிப்பிடலாம். விஞ்ஞான ரீதியாக இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவற்றிலிருந்து விடுபட்டு, மனச்சஞ்சலமற்று, அமைதியாக வாழ தியானம் துணை செய்யும். தியானம் ஒரு பூரண விஞ்ஞானமாகவும் தேவரகசியங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றது. ஒரு மனிதனின் தெய்வீகத்தன்மையை வெளிக்கொணரக்கூடிய அற்புத சாதனமாக தியானம் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.
“ஓம்” காரம் மிகச் சக்தி வாய்ந்த ஒலி வடிவமாகும். இதன் ஒலி அதிர்வுகள் உடலிலுள்ள கோளங்கள், கலங்கள் அனைத்துக்கும் சென்று அவற்றை சக்தி வாய்ந்ததாக மாற்றமடையச் செய்து மன சக்தியை அதிகப்படுத்துவதோடு மன அமைதியையும் மன ஒருமைப்பாட்டையும் உருவாக்கும். தியானம் சிந்திக்க உதவும்.
இதற்கு “ஓம்” பிரணவ மந்திரத்தை சுவாசத்தோடு இணைத்துச் செய்யவும். அதாவது மூச்சை உள் இழுக்கும் போது “ஓ” என்னும் உச்சரிப்பையும் சுவாசத்தை வெளிவிடும் போது “ம்” என்னும் உச்சரிப்பையும் நினைத்து அதில் மனதைச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
இதனைக் குறைந்தது பத்து நிமிடங்களாவது செய்வது சிறப்புடையதாகும். இதனை நாம் தனியாக உட்கார்ந்திருக்கும் பொழுதோ, கடற்கரை, பூந்தோட்டம் போன்றவற்றில் உலாவும் போதோ மேற்கொள்ளலாம். தொடர்ந்து செய்துவர உங்களை அறியாமலே சுவாசத்தோடு “ஓம்” காரம் இணைந்து செயல்படுவதைக் கண்டு நீங்களே அதிசயப்படுவீர்கள். மனம் அமைதியடைந்து நிச்சயம் தியான நிலை உருவாகும். கவலை, துன்பங்கள் மறையும்.
No comments:
Post a Comment