மன்னிப்பே சுகத்தின் வழி!
உலகின் தீமைகள் ஒரு எதிர்மறை எண்ணத்தில் தான் தோன்றுகின்றன. அதற்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம். ஆனால் தீமைகள் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமற்ற சிந்தனையில் தான் உருவாகின்றன. ஒரு மனதில் வரும் ஒரே எண்ணம்தான் விதை. அது வெளியில் சொல்லாய்ச் செயலாய் மாறுகையில் பலரைப் பாதிக்கிறது. பின் அது சங்கிலித் தொடராகிச் சரித்திரமாய் மாறுகிறது. ஆரம்ப எண்ணம் மட்டும் மட்டுப்பட்டிருந்தால் பல எதிர்வினைகள் நிகழாமல் மட்டுப்பட்டிருக்கும்.
உறவுச் சிக்கல்கள்
வெறுப்பு, நிராகரிப்பு, அச்சம், சந்தேகம், ஆத்திரம், பொறாமை என ஏதோ ஒரு எதிர்மறை உணர்வுடன் தான் முதல் எண்ணம் பிறக்கிறது. உங்கள் உணர்வு எதிர்மறையாக இருந்தால் எண்ணம் நிச்சயம் எதிர்மறையாகத்தான் இருக்கும். கடுங்கோபத்திலோ அல்லது துக்கத்திலோ நேர்மறை எண்ணங்கள் வர முடியுமா என்ன?
ஒருவர் உணர்வும் சிந்தனையும் இன்னொருவரைத் தீவிரமாகப் பாதிக்கிறது. இதனால்தான் நம் உறவுகள் நம் உணர்வுகளைப் பல சமயம் தீர்மானிக்கின்றன. உறவுகளில் காயங்களும் விரிசல்களும் பிளவுகளும் நிகழ்வதற்கும் ஆயிரம் நிகழ்ச்சிகளைக் காரணமாகச் சொல்லலாம். ஆனால், அத்தனைக்கும் மூலக் காரணம் சில ஆதார எதிர்மறை உணர்வுகளும் எண்ணங்களும்தான்.
இன்றைய சந்ததியினரிடம் உறவுச் சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், உறவினர்கள், பணியிடத் தோழர்கள் என அனைவரிடமும் கருத்து வேறுபாடுகளும் ஒவ்வாமைகளும் பெருகி வருகின்றன.
குடும்ப வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது. மனிதர்களின் எண்ணிக்கையை விட அறைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. நாமே சுவர்களை எழுப்பிக்கொண்டு நாமே தனிமையில் வாடுவதாகப் புலம்புகிறோம். எல்லா மனிதர்களின் மேலும் புகார் பட்டியல் இருக்கிறது. நீங்கள் யாருடனும் நிம்மதியாய், அமைதியாய் இல்லை என்பது உண்மை என்றால் ஒன்று தான் நிஜம். நீங்கள் உங்களிடம் மனதளவில் நிம்மதியாய், அமைதியாய் இல்லை!
உறவுகள் யாரையும் தனியாகக் குற்றம் சொல்ல முடியாது. உங்களைப் போலவே உங்கள் எதிராளியும் அமைதி கெட்டுப்போய்ப் புகார் பட்டியலோடு சுற்றிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் பல நேரங்களில் நிஜம். யாரோடு பிரச்சினையோ அவரிடம் பேசினால் அவர் தரப்பு நியாயங்களைப் புட்டு புட்டு வைப்பார். யாராவது அதை முதலில் தனியாகக் கேட்டிருந்தால் உங்களைத் தான் குற்றவாளியாகப் பார்ப்பார்கள்.
உறவுகளைப் புரிந்து கொள்ளப் பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் திறன் வேண்டும். இதை ஆங்கிலத்தில் எம்பதி என்பார்கள். அலோபதி, ஹோமியோபதியை விட உங்கள் உறவைக் காப்பது இந்த எம்பதியாகத் தான் இருக்கும்!
உறவுச் சிக்கல் வரும் நேரத்தில் அடுத்தவர் நிலையில் நம்மை நிறுத்திப் பார்ப்பது தான் புரிதலை ஏற்படுத்தும். இது சுலபமல்ல. ஆனால் சற்று முயன்றால் சாத்தியப்படும்.
அதற்கு முதலில் சில பாலபாடங்கள் அவசியம்.
பார்வைக் கோணம்
எந்த விஷயத்திலும் ஒருவர் மட்டும் சரி, மற்றொருவர் தான் தவறு என்ற நிலையிலிருந்து விலகி வர வேண்டும். இருவரும் சரியாகவோ அல்லது இருவரும் தவறாகவோ கூட இருக்கலாம். அதனால் குற்றத்தை யார் மீது திணிக்கலாம் என்ற பார்வையை விடுத்து நடுநிலைக்கு வாருங்கள்.
எங்கிருந்து பார்க்கிறோமோ அங்கிருந்து உண்மைகள் மாறும். நமக்குப் பகத் சிங் விடுதலை வீரர். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தீவிரவாதி. அதே போல நாம் தீவிரவாதி என்று கருதுபவர்களை வேறுபலர் விடுதலை வீரர்களாகக் கொண்டாடுவார்கள். இது பார்வைக் கோணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.
பிறரைக் குற்றம் சொல்லுமுன் அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்று கற்பனை செய்து பார்ப்பது இந்த எம்பதியை வளர்க்கும்.
லஞ்சம் பற்றிப் புலம்புபவர்கள் ‘அவ்வளவு பெரும் பணம் உங்களைத் தேடி வந்தால் கண்டிப்பாக மாட்டேன் என்று சொல்வீர்களா?’ என்று யோசியுங்கள். அரசு இலவசங்கள் பற்றிக் குறை சொல்பவர்கள், ‘ உங்கள் ரேஷன் கார்டில் இலவசமாகக் கார் கிடைத்தால் என்ன செய்வீர்கள்’ என்று யோசியுங்கள். ‘அந்த ஆள் கேரக்டர் சரியில்லை’ என்று குற்றம் சொல்லுமுன் அந்த வாய்ப்பும் வசதியும் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள்.
இது பிறர் குற்றங்களை நியாயப்படுத்தும் செயலில்லை. பிறர் சூழலைப் புரிந்து கொள்ளும் முயற்சி. அவ்வளவு தான்.
எல்லா மனிதர்களும் தங்களுக்கு அந்த நேரத்தில் சரி என்று படும் விஷயங்களைச் செய்கிறார்கள். அந்த நேர அறிவுக்குத் தக்க முடிவுகள் எடுக்கிறார்கள்.
விழிப்புணர்வு வினீத்:
...தொடர்ச்சி
எது சிந்தனை?
நம்மில் அநேகருக்கு எது சிந்தனை என்று தெரிவதில்லை. மனதில் இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களே சிந்தனை என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிலருக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால் அதை மனதில் இடையறாது நினைத்து நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதை சிந்தனை என தவறாக நினைக்கிறார்கள்.
இது போலவே இன்னும் சிலர் இனி நடக்கப்போகிற ஒரு நல்ல நிகழ்ச்சி, மனதுக்கு பிடித்த நிகழ்வு இவைகளை நினைத்து ஆனந்தக் கற்பனையில் இருப்பார்கள். இதுவும் சிந்தனை இல்லை!
கணிதத்திற்கு விடைகாண முயலும்போது, புதிர் கணக்குகளுக்கு விடை தேடும்போது, நாம் உண்மையிலேயே சிந்திக்கிறோம். ஆகவேதான் சிந்திக்க விரும்பாத அநேகருக்கு கணக்கு என்றால் பிணக்கு ஆகத் தெரிகிறது.
பிரச்சனைகளை அலசி ஆராய்தல் (Analysing), கணக்கிடல் (Calculation), திட்டமிடல் (Plan), புதிய வழி காணல் இவைகளே சிந்தனை எனப்படும்.
ஒவ்வொரு பிரச்சனையும், ஒவ்வொரு சிக்கலும், நமது சிந்தனைக்கு வேலை கொடுக்க வந்த அருமையான தருணங்கள். உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்க பழக வேண்டும்.
இது போன்று நாம் சிந்திக்க முனையும்போது மனம் அங்கும் இங்குமாக அலைபாயும், தடம் மாறிப் போகும். ஆகவே தெளிவாக சிந்திக்க விரும்பினால் ஒரு பேப்பர், ஒரு பேனா, கொஞ்சம் மூளை இவைகளை எடுத்துக்கொண்டு, ஒரு இடத்தில் அமர்ந்து செயல்பட்டால் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்கிறார் பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிவியல், அரசியல் அறிஞர்.
யார் அறிவாளி?
நிறைய நூல்களை படித்தவர்கள் அறிவாளிகளா? இது சரியா?
நிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா? எவர் நல்ல தரமான உணவுகளை உண்டு, கடினமான உடல் உழைப்பு செய்கிறார்களோ அல்லது கடின உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களோ அவர்களே பலசாலிகளாக இருக்க முடியும். வெறுமனே உணவை மட்டும் உண்பதால் உடல் பலம் வந்துவிடாது. அது போலவே நிறைய வாசித்தால் அறிவாளிகள் ஆகிவிட முடியாது. யோசிக்க வேண்டும். நிறைய படித்தவர்களிடம் நிறைய தகவல்கள் இருக்கலாம். ஆனால் அறிவாளிகள் ஆக முடியுமா? படிப்பு நல்ல தகவல்களையும் நமது சிந்தனையை தூண்டவும் உதவும். அப்போதும் சிந்திக்காவிட்டால் என்ன பலன்.
படித்தது ஏன் நினைவில் இருப்பதில்லை
ஒரு மரக்கட்டைமேல் இரும்பு துண்டை போட்டால் அந்த இரும்புத் தூள் மரக்கட்டையில் ஒட்டுமா? ஒரு காந்தத் துண்டின் அருகே இரும்புத்தூள் இருந்தால்கூட அது ஓடிப் போய் ஒட்டிக்கொள்கிறது. காந்தத் துண்டின் ஈர்ப்பினால் இரும்புத்தூள் போய் ஒட்டிக்கொள்கிறது. எவரிடம் தேடுதல் நிறைய இருக்கிறதோ, எங்கே சிந்தனை இருக்கிறதோ, அவர் படிப்பது அவரிடம் இயல்பாக ஒட்டிக் கொள்கிறது. தேடுதல் இல்லாது ஆர்வம் இல்லாது படிப்பவர்கள் படிக்கும் படிப்புகள் அவர்களிடம் ஒட்டாமல் தனியாக நிற்கின்றன. அவர்கள் ஒரு பாத்திரம் (Carrier) போல இருக்கிறார்கள்.
செரிமானம் ஆகாத உணவு உடலில் ஒட்டாமல் வெளியே செல்வது போல சிந்தனை இல்லாமல் படிக்கும் படிப்பு புத்தியில் ஒட்டுவதில்லை.
தொட்டியில் இருக்கும் நீரை குடத்தில் மொண்டு அண்டாவில் கொண்டு ஊற்றிய பின் அந்தக் குடத்தில் நீர் இருப்பதில்லை அல்லவா!
அநேகரின் படிப்பு இப்படித்தான் காணப்படுகிறது. புத்தகத்தை படித்து தேர்வில் கொட்டிவிட்டு தேர்வு முடிந்ததும் மறந்து விடுகிறோம். அநேக மாணவர்களின் இன்றைய படிப்பு இப்படித்தான் ஒட்டாமல் இருக்கிறது. இன்று இந்த காலி குடம் போலவே காலியாக இருக்கிறது அநேகரின் மூளை.
கார்பரேட் நிறுவனங்கள்
மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களில் (R & D Department) புதிய வழிகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஓர் ஆராய்ச்சி பகுதி செயல்படுகின்றது. பெரிய நிறுவனங்கள் இந்த பகுதிக்கு பல கோடிகளை செலவு செய்கிறார்கள். இந்த (R & D) ஆராய்ச்சி பகுதி எந்த அளவு சிறந்து விளங்குகிறதோ அந்த அளவுக்கு அந்த கம்பெனியின் சாதனங்கள் உயர்வு பெற்று விளங்குகின்றன. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பகுதி இந்த ஆராய்ச்சி பகுதியின் கண்டுபிடிப்புகளை சார்ந்திருக்கிறது. இதுபோலவே எந்த சமுதாயம் புதிய வழிகளை சிந்திக்கிறதோ அந்த சமுதாயம் விரைவாக உயர்கிறது.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்.
நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.
நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.
எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்!
நாம் ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம்.
No comments:
Post a Comment