வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!
இன்றைய சிந்தனை :
டிசம்பர் 16 :
ஆறாவது அறிவு :
தெய்வமே, நானாகவும் இருக்கிறது என்பதை அறிவதே ஆறாவது அறிவின் நோக்கம். ஐந்தாம் அறிவுக்கப்பால் அறிவு இறைநிலை நோக்கி எழுகிறது. அதன் வேகத்தைத் தடுத்து, அதன் நோக்கத்தைத் திருப்பிப் புலனுணர்ச்சியில் விடும்போது தான் முரண்பாடுகள் விளைகின்றன. இன்றைய உலகத்தின் சிக்கல்கள், குழப்பங்கள், துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் அறிவிற்குத் தன் லட்சியப் பூர்த்தி கிடைக்காத நிலை தான். அந்த வேகம் புலனுணர்வில் செயல்படும் போது துன்பங்களின் அளவும், எண்ணிக்கையும் மிகுகின்றன.
ஆறாவது அறிவால் பிரம்மம் தன்னைத்தானே அறிந்து கொள்கிறது. வேலை முடிந்து பரிணாமம் பூர்த்தியடைகிறது. பிரம்மம் தன்னைத்தானே அறிந்து கொள்வது தான் பரிணாமத்தின் நோக்கம். அந்நோக்கம் நிறைவுறும் வரை மனிதர்களுக்கு அமைதியில்லை. அத்தகு மனிதர்களைக் கொண்டிருக்கும் சமுதாயத்திற்கும், உலகத்திற்கும் அமைதியில்லை. கடலில் இருந்த நீர் கடலுக்குத் திரும்பப் போய்ச் சேரும் வரை நீருக்கு அமைதியில்லை. இடையில் மேகமாக இருக்கிறது. மழையாக அருவியாக... ஆறாக, நதியாக இருக்கிறது. ஆனால் கடலை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. கடலை அடைந்தால் தான் அதற்கு ஓய்வும், அமைதியும்.
அப்படி, பிரம்மமே அணுவாகி, பஞ்சபூதமாகி, ஜீவனாகி, மனிதனாகி இருக்கிறது. இவையெல்லாம் இடைநிலை தான். இனி, மனிதனின் ஆறாவது அறிவு மேலோங்கப் பெற்று அவன் தன்னிலையை - தான்பிரம்மம் என்ற நிலையை அடைந்தாக வேண்டும். அதுவரை மனிதனுக்கு அமைதி கிட்டாது.
உடல் தோற்றமாக இருக்கிறது. உயிர் ஆற்றலாக இருக்கிறது. மனம் உணர்வாக இருக்கிறது. மனம் தான் நான் என்றாலோ மனம் என்று ஒன்று தனியாக இல்லையே! உயிர்தானே மனமென மறுபெயர் பெற்றிருக்கிறது? உயிரோ அணுக்கூட்டம், அணுவோ பிரம்மத்தின் இயக்கநிலை. எனவே நாம் பிரம்மம் என்பது தெளிவாகிறது.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. message Dec 16
No comments:
Post a Comment