·
ஜீவன் மாயையினால் மோகம் அடைந்து கர்மாக்களைச் செய்து ஜன்மத்திற்குப் பின் ஜன்மமாகப் பெற்றுக் கொண்டே இருக்கிறான்.
இதிலிருந்து விடுபட வேண்டுமானால் அவனுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது “தன் உண்மை ஸ்வரூபத்தை அறிந்து கொள்வதே” ஆகும்.
அதை அறிந்து கொள்ளும் மார்க்கம் எது? வேதங்களில் கூறப்படும் தர்மங்களை அனுஷ்டிப்பது. தர்மங்களில் அநேக விதமுண்டு.
(1) உடலால் செய்யப்படுபவை.
(2) வாக்கால் செய்யப்படுபவை.
(3) மனத்தால் செய்யப்படுபவை.
இவை தவிர ஒவ்வொரு யுகத்திற்கும் சிறந்த தர்மங்கள் எவை என்று கூட நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
க்ருத யுகத்தில் த்யானம்
த்ரேதா யுகத்தில் யாகம் செய்தல்
த்வாபர யுகத்தில் பகவத் அர்ச்சனம்
கலி யுகத்தில் நாம ஜபம்.
இதிலிருந்து நாம் கலியுகத்தில் த்யானமோ, யாகமோ, அர்ச்சனமோ செய்தால் ‘அதர்மம்’ என்று முடிவு கட்டிவிடக் கூடாது. கலியுகத்தில் இவற்றைச் செய்யப் போதிய மனப்பக்குவமோ, ஈடுபாடோ, நேரமோ இல்லாது போக வாய்ப்புண்டு என்பதால்தான் மிக எளிதான நாம ஜபம் விதிக்கப்பட்டுள்ளது.
மாறாகக் கலியுகத்தில் த்யானமோ, யாகமோ, பகவத் அர்ச்சனமோ செய்வது மிக மிக விசேஷமானது; உத்தமமானது.
வேத அத்யயனம் ஆனவன்தான் யக்ஞங்களைச் செய்யத் தகுதியுடையவன் ஆகிறான். தகுதி உடையவர்கள் வேத அத்யயனத்தைத் தவறாது செய்ய வேண்டும்.
ஒரு குரு மூலமாகத்தான் வேத அத்யயனம் செய்யப்பட வேண்டும். தகுந்த கனபாடிகள் கிடைப்பது சிரமமாக இருந்தால் முதலில் இரு முறைகள் அவரிடம் ஸந்தைக் கற்றுக் கொண்டு விட்டால் கூடப் போதும். அப்படியும் சரிவர வார்த்தைகளை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் ரிகார்டர் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி குருவிடம் இரு முறை கற்ற வேதத்தை நன்கு பயிற்சி செய்வதில் தவறில்லை.
இவ்வாறு கற்ற வேதத்தின் பொருளை நன்கு அறிந்து, பிறகு ஏதாவது வைதீகமாகச் சொல்லப்பட்ட கர்மாக்களைச் செய்தால் அதற்கு விசேஷமான பலனுண்டு.
வேத அத்யயனம் ஆகாதவர்கள் யக்ஞம் செய்பவர்களுக்கு உதவி செய்யலாம். யக்ஞத்தை ஸ்ரத்தையுடன் உட்கார்ந்து பார்க்கலாம். முடிந்த அளவு பண உதவி செய்யலாம்.
அடுத்து பகவானை அர்ச்சனை செய்யும் விதங்கள் பல உள்ளன. க்ரமமாக ருத்ரம் போன்ற மந்த்ரங்களைச் சொல்லி அபிஷேகம் செய்யலாம். முடியாவிட்டால் ‘ஸத்யோ ஜாதம்’ என்று தொடங்கும் மந்திரங்களை மட்டுமாவது சொல்லி அபிஷேகம் செய்யலாம். அதுவும் முடியாவிட்டால் ‘நம:சிவய’ என்று கூறி புரோக்ஷணம் செய்து நான்கு புஷ்பங்களைப் போட்டால் அஃதே அர்ச்சனை ஆகி விடும்.
சரி, இதுவும் கஷ்டம் என்றால் சிவ, சிவ அல்லது ஹரி ஹரி என பகவானின் திருநாமத்தை மனமுருக நினைத்தாலே போதும். அதுவே, த்யான, யாக, அர்ச்சனைப் பலனைத் தந்து விடும். ஆனால் ஒரு விஷயம்: த்யானமோ, யாகமோ, அர்ச்சனை செய்யச் சக்தியும் தகுதியும் உள்ளவர்கள் அவற்றைப் புறக்கணிக்கக் கூடாது.
த்யானம் செய்வதற்குச் சில தகுதிகள் தேவை. கடவுளின் மதிப்பிட முடியாத விசேஷ அந்தஸ்தை ஒருவன் பரிபூரணமாகப் புரிந்து கொண்டு, அவரை அடைய வேண்டும் என்னும் எண்ணத்தைத் தீவிரமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் அவனுக்கு இதர விஷயங்களின் மேல் இருக்கும் ஆசை விலகி விடும். மனம் தன் வசப்படும். வைராக்யம் ஏற்படும். த்யானம் கை கூடும்.
த்யானத்திற்காக அமர்ந்திருக்கும் ஒருவன் தன் எதிரிலே மனத்திற்குப் பிடித்த பரமேச்வரனுடைய சித்திரம் ஒன்றை வைத்துக்கொண்டு இரண்டு மூன்று நிமிடங்கள் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த உலகங்களைப் பற்றிய விஷயங்களை சற்றே மறந்தால் நமக்குள்ளே சித்திரத்தின் பிரதிபிம்பம் தெரியும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் கழிந்த பிறகு அந்த சித்திரம் உள்ளேயே இருக்கிறது. உள்ளே மாமிசம் முதலானவையெல்லாம் இல்லை. பகவான் ஹ்ருதயத்தில் இருக்கிறான் என்ற பாவம் ஏற்படும்.
பகவான் ஹ்ருதயத்தில் நாபிக்கு மேல் தாமரையில் வீற்றிருக்கிறான் என்று சிந்தனை செய்தால் அப்படியே சிறிது நேரம் நிற்கும்.
பிறகு மனம் உடனே சஞ்சலமாகிவிடலாம். ஆனால் கண்ணை மூடிக் கொள்ளும் காலத்தில் கண்ணும் அந்தர்முகமாகிவிட்டது என சிந்தனை பண்ணினால் ஒரு பிரகாசம் தோன்றும். இவ்வாறு அப்யாஸம் செய்ய செய்ய மனம் நிஷ்கலமாகி விடும்.
இறைவனை உபாஸனை செய்தால் அவன் என்றுமே நம்மை மோசம் செய்யமாட்டான். அந்த மனோபாவத்தை நாம் என்றுமே வைத்திருக்க வேண்டும்.
இந்தக் காலத்தில் புதிது புதிதாக தெய்வங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் நமக்கு வேண்டாம்.
எந்த தெய்வங்கள் நம் பரம்பரையால் வழிபடப்பட்டு வருகின்றனவோ, எந்த தெய்வங்கள் சாஸ்திரங்களுக்கு உடன்பாடாய் இருக்கின்றனவோ மேலும் எந்த தெய்வங்களுக்கு பூஜா விதானம் போன்றவை தரப்பட்டிருக்கின்றனவோ அந்த தெய்வங்களை மட்டும் நாம் ஆராதனை செய்து வருவது மூலமும் மோக்ஷ சாதனையில் முன்னேறலாம்.
நாம் நம் தர்ம சாஸ்திரங்கள் கூறுவதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
உதாரணமாக, நம் தாய், தந்தையை அவர்களது முதிய வயதில் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் மனமுவந்து செய்யும் ஆசீர்வாதம் நிச்சயமான பலனைத் தரும்.
மனம் தீவிரமாக இருக்கும் ஒருவன் “மற்றொருவன் க்ஷேமமாக இருக்க வேண்டும்” என ஸங்கல்பம் செய்தால் அஃது ஆசீர்வாதம் ஆகி விடும்.
ஆகவே நம்மால் த்யானம் செய்ய முடியாவிட்டால் பகவத் ஆராதனைகளைச் செய்ய வேண்டும். அதுவும் செய்யாவிட்டால் பகவானுடைய கட்டளைகளின்படி வர்ணாச்ரம தர்மங்களையாவது கடைப்பிடிக்க வேண்டும்.
-ஜகத்குரு ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுபதேசம்
http://ammandharsanam.com/
No comments:
Post a Comment