வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!
இன்றைய சிந்தனை:
டிசம்பர் 29 :
ஐம்புலனால் அறிய முடியாதது அரூபம் :
"சத்து சித்து ஆனந்தம் அனைத்து மாகி
சர்வ வியாபகமாயும் நிறைந்து உள்ள
அத்துவித ஆதிபராசக்தி தன்னை
ஐயுணர்வில் எதைக் கொண்டும் அறியப் போகா
தத்துவங்கள் அனைத்திற்கும் மூலமான
தலையாய நம் சக்தி அரூப மன்றோ?
வித்து நிலையை அறிந்து அறிவை ஒன்ற
விவேகயூகம் உயர்ந்து அதே தானாகும்."
சத்து என்பது பூரணமான பேராதார நிலை (Potential Energy) அதன் எழுச்சி நிலையான அணு முதல் அண்டங்கள் பிண்டங்கள் அனைத்தும் தோற்றம், இயக்கம், மாற்றம் என்ற இயக்கத்தில் உளதால் சித்து எனப்படும். பரிணாம சிறப்பின் உச்சமாகிய உணரும், அறியும் நிலையாகிய அறிவு ஆனந்தம் எனப்படும்.
இம்மூன்று நிலைகளை அடைந்தும் ஆதி நிலையாய் குறைவுபடாமல் பேதப்படாமல் பூரணமாக நிறைந்து எல்லையற்றிருக்கும் அரூப சக்தியைக் கண், காது, மூக்கு, நாக்கு, ஸ்பரிசம் இவற்றில் எதைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில் நாமாக நமது மூலமாக இருக்கும் அந்தச் சக்தி அரூபமாக இருப்பதால், உடலியக்கத்திற்கும், அறிவியக்கத்திற்கும் மூலமான விந்துவின் நிலையை அறிந்து, அவ்விடத்தே அறிவை நிறுத்திப் பழகி வரும் தவத்தால் ஏற்படும் ஓர்மை நிலையில் அறிவே அதுவாகி - ஆதியாகி விடும். இதை யூக உணர்வினால் மட்டும் அறிந்துகொள்ள முடியாது.
ஆகாயத்தில் நாம் பார்க்கும் போது கண்களுக்குப் புலனாவது வெட்டவெளி அல்ல. அது அணுவெளி. அணுக்கள் மீது சூரியன் முதலிய கிரகங்களின் ஒளிக்கதிர் படுவதால் ஏற்படும் பிரதிபலிப்பு ஒளி நமக்குத் தோற்றமாக வெளிச்சமாகப் புலனாகிறது. சுத்த வெளி இருள், அகண்டம், எனும் நிலையில் அரூபமானது.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
No comments:
Post a Comment