1. பெற்றோர் உயிருடன் இருக்கும் போது அவர்கள் சொற்படி நடத்தல்;
2. பெற்றோர் இறந்து விட்டால் வருடா வருடம் சிராத்தம் செய்து நன்கு அன்னதானம் செய்தல்;
3. கயையில் பிண்டம் கொடுத்தல்;
ஆகிய இம்மூன்றையும் செய்தால்தான் ஒரு மகனுக்கு மகன் என்ற தன்மையே வருகிறது.
மிகவும் புண்ணியம் செய்து பெறப்பட்ட இந்த மனித ஜென்மா சிறக்க மேற்கண்ட கர்ம கார்யங்கள் சிரத்தையுடன் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு செய்யப்படும் சிராத்தம் பிறகு பித்ரு லோகத்திலோ அல்லது வேறொரு ஜன்மாவிலோ புகுந்து விட்ட பெற்றோர்க்குப் பலனை அளிப்பதுடன் மகனுக்கும் புண்ணியத்தைத் தருகிறது.
அன்னை, பிதா, குரு இவர்கள் மூவரும் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள்.
காதுகளை ஹிம்சிக்காமல் குரு ஞானம் என்னும் அமுதினைப் பொழிவதால் அவர் தாயாகவும் தந்தையாகவும் கருதப்பட வேண்டும். ஒருவன் ஒருபோதும் அவருக்குக் கெடுதல் எண்ணக் கூடாது.
குருவானவர் மாணவர்களை மிகவும் மகிழ்ச்சியுடன் நடத்திச் செல்ல வேண்டும்.
பெரியவர்களை எப்போதும் நமஸ்காரம் செய்து போற்றுபவனின் ஆயுள், அறிவு, கீர்த்தி, பலம் நான்கும் விசேஷமாக அதிகமாகும் என வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பெரியவர்களின் மதிப்பு இவ்வளவு என்பதால் பிள்ளைகள் அவர்களைத் தங்களுடன் வைத்துப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். முதியோர் இல்லம் என்ற ஒன்றைக் கட்டி அங்கு கொண்டு போய் வயதானவர்களைத் தள்ளிவிடுவது என்பதெல்லாம் வெளிநாடுகளில் வேண்டுமானால் காணப்படலாம். ஆனால் நம் பாரத தேசத்திற்கு இப்படியெல்லாம் வழக்கமில்லை. ஆகையால் வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை வைத்து அதன்படி நடந்தால் நமக்கு இம்மையில் மட்டுமன்றி மறுமையில் கூட சுகமுண்டு.
தானம் செய்பவனுக்கு தானம் பெறுபவனிடமிருந்து ப்ரதி உபகாரம் ஏதும் ஏற்படாவிட்டாலும் அந்த ப்ரதி உபகாரத்தைச் செய்பவன் இறைவனாக இருக்கிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது.
இறைவன் இந்த உபகாரத்தை நமக்கு இந்தப் பிறவியிலேயே செய்துவிட வேண்டும் என்பதில்லை. அடுத்த பிறவியில் கூடச் செய்யலாம்.
பிறர்க்கு உதவி செய்வது புண்ணியத்தைத் தரும். ஒருவனுக்கு புண்ணியத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் தான் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவாவது மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஈடுபட வேண்டும்.
நட்பு என்னும் விஷயத்தில் நல்லவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் (சத் சங்கம்). தீயவர்களுடன் நட்பு கொண்டால் துன்பமே ஏற்படும்.
எப்போதும் நல்ல வழியையே பின்பற்றி வந்தால் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் ச்ரேயஸ் அடையலாம்.
No comments:
Post a Comment