Monday, October 3, 2016

பற்று பந்தம் வினை


==============

பதி இறைவன் அதாவது பரமாத்மா. பசு உயிர்கள் அதாவது ஜீவாத்மா. பற்றுகள் அதனால் விளையும் பந்தங்கள் அதன் நிமித்தம் விளையும் வினைகள் இவைகளாலான பாசத்தால்(கயிற்றால்) கட்டப்பட்டிருக்கும் பசுவே ஜீவாத்மா. இந்த பாசபந்தங்களே நம்மை பரமாத்மாவிடம் சேரவிடாதபடிக்குத் தடையாக நிற்கின்றன. மேலும் இவை சுகம், துக்கம் என்ற உணர்வுகளை உண்டாக்கி, அதன் நிமித்தம் நன்மை, தீமை எனும் இரு வினைகள் உண்டாக காரணமாக அமைகின்றன. ஆக இந்த பற்று, பந்தம், வினை இவைகளையே எமனின் பாசக்கயிறாக உருவகப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது. பாசக்கயிறில் பட்டவர்களுக்கு மறுபிறவி உண்டு. பற்றறுந்த ஞானிகள் வசம் எமன் வர அஞ்சுவான் என்று சொல்வதுவும் இதனால்தான். பற்றறுந்த ஞானிகள் முக்தியடைவதால் அவர்கள் வசம் எமன் வருவதில்லை என்பது சூக்குமம்.

பற்று எதனால் வருகிறது ?
கீதை சொல்வதென்னவென்றால், ''மனிதன் புறப் பொருளைப் பற்றி சிந்திக்கும் போது அவற்றின் மீது பற்று வருகிறது. பிறகு அந்தப் பொருளை வசப்படுத்த வேண்டும் என்ற ஆசை வருகிறது. அந்த ஆசை நிறைவேறாத போது, அதற்குத் தடையாக உள்ளவர்கள் மேல் கோபம் வருகிறது. ஒருவேளை அந்தப் பொருள் வசப்பட்டு விட்டால் அதை வேறு யாருக்கும் தரக் கூடாது என்கிற சுயநலம் வருகிறது. கோபம் வரும் போது நினைவில் குழப்பம் ஏற்பட்டு, புத்தியின் நிலை தடுமாறி பகுத்தறிவே நாசமாகிறது. இதுவே வினைகளுக்குக் காரணமாக அமைகிறது.

இதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லையா ?
ஏன் இல்லை ? இருக்கிறது. ஆனால் அதற்கு நாம் ஒரு பொருளின் மீது பற்றோ அல்லது அதை அடைய வேண்டும் என்ற ஆசையோ இல்லாமலும், அப்படியே அடைந்து விட்டாலும் அதை யாருக்கும் கொடுக்காமல், யாரும் அபகரிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
அது எப்படி முடியும் ? என்று பலர் கேட்கிறார்கள். அவர்கள் சொல்வதென்னவென்றால் நமக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதற்காக நாம் பொருளீட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது என்கிற போது நீங்கள் சொல்வது போல வாழமுடியாதல்லவா ? என்கிறார்கள்.

உண்மைதான். இதையே நாம் அடிப்படைத் தேவைகள் என்கிறோம். இந்த உலகில் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் சுகமாய் வாழ இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமே. அதில் சந்தேகமே இல்லை. நம் அடிப்படைத் தேவைகள் என்பது சொற்பமே. ஆனால், நாமோ அந்த அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடைந்தாலும் மன நிறைவு அடையாமல் கற்பனையான அளவற்ற ஆசைகளையும், நிறைவேறாத கனவுகளையும், அவை நிறைவேற வேண்டும் என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்திக் கொள்கிறோம். இறுதியில் ஏமாற்றமடைவதுடன். ஆசைவயப்பட்ட மனிதனாகவே வாழ்ந்து இறந்து போகிறோம். இவ்வாறான ஆசைகள் ஒருநாளும் நிறைவேறாது. ஏனென்றால் ஒரு ஆசை நிறைவேறினாலும் அடுத்த க்ஷணமே அடுத்த ஆசை முளைத்து விடுகிறது.

இப்படிப்பட்ட அடிப்படைத் தேவைகளைத் தாண்டிய அளவற்ற ஆசைகள் முழுவதும் நிறைவேற வாய்ப்பே இல்லை. அப்படி ஓரிரு ஆசைகள் நிறைவேறும் போது மேலும் மேலும் என்று ஆசைகள் விரிந்து கொண்டே போய் பேராசையாகி விடுகிறது. ஆசையுள்ள மனமும் ஓட்டைப் பாத்திரமும் ஒன்றே. அது நிறைவடைவது என்பது நடக்காத காரியம். உலகம் தோன்றிய காலம் முதல் இந்த ஆசைகளால் மனித குலம் துன்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்ற மூன்று ஆசைகளாலும் மனிதன் பிறப்பெனும் வலையில் வீழும் மீனாகி விடுகிறான்.

எனவே நம்மில் நாம் திருப்தி உள்ளவர்களாக ஆகாத வரை ஆசைகள் எழுந்து கொண்டே இருக்கும். நமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு நம்மில் நாம் திருப்தி உள்ளவர்களாக வாழும் போது கோபம், பொறாமை, வெறுப்பு, வன்முறை போன்ற தீய உணர்வுகளை அழித்து விடலாம். எனவே நம்மிடம் இல்லாத ஒன்றிற்காகவோ, தேவைகளுக்கு அதிகமாகவோ ஆசைப்படுவதை விடுத்து, நம்மை விட கஷ்டப்படுபவர்களைப் பார்த்து ஆறுதல் அடைந்து, அவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்து மனநிறைவு கொண்டு திருப்தியோடு வாழ்வோமேயானால், நாம் எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வாழ்ந்து மேன்மையடையலாம். தன்னைத் தானே கட்டுப்படுத்த வல்லவர்களுக்கே தன்னை அறிவது என்பது கூடும். அதாவது உணர்ச்சிகளின் கிளர்ச்சிகளை அடக்கி விடும் போது தன்னை மறக்கிறான். தன்னை மறந்து, உணர்வுகளைக் கடந்தவன் ஆத்மாவை அறிகிறான்.

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment