=========
ரங்கநாதன் பரம ஏழை. ஆனால் நிறையச் சம்பாதிக்கவேண்டும், வசதியாக வாழவேண்டும் என்கிற ஆசைமட்டும் நிறைய உண்டு!
அதற்காக, அவர் ஒரு ஜென் மாஸ்டரைத் தேடிச் சென்றார். ‘எனக்கு ஒரு பெரிய புதையல் கிடைக்கவேண்டும் என்று ஆசிர்வதியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
‘ஆசிர்வாதமெல்லாம் எதற்கு? நிஜமாகவே உனக்கு ஒரு பெரிய புதையல் கிடைக்கச் செய்கிறேன்’ என்றார் அவர். ‘நாளை காலை எட்டு மணிக்கு இதே இடத்துக்கு வா!’
ரங்கநாதன் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார். மறுநாள் காலை டாணென்று 7:55க்கு அவர் அங்கே இருந்தார்.
ஜென் மாஸ்டர் ரங்கநாதனை வரவேற்றார். ‘உங்களுடைய நிழல் உங்களுக்குத் தெரிகிறதா?’
‘ஓ, நன்றாகத் தெரிகிறது சுவாமி!’
‘அந்த நிழலின் தலைப்பகுதி உள்ள இடத்தில்தான் புதையல் இருக்கிறது. அங்கே தோண்டத் தொடங்குங்கள்.’
‘நன்றி சுவாமி!’ ரங்கநாதன் பரபரவென்று நிழலின் தலையை நோக்கி ஓடினார். இப்போது அது இன்னும் தொலைவுக்குச் சென்றது. ‘இதென்ன கலாட்டா?’ என்று விழித்தார்.
‘விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். புதையல் கிடைக்கும்’ என்றார் அந்த ஜென் மாஸ்டர். தன்னுடைய குடிலுக்குள் சென்று தியானத்தில் அமர்ந்துவிட்டார்.
ரங்கநாதன் தொடர்ந்து ஓடினார். ஆனால் நிழல் மேலும் மேலும் அதிகத் தூரம் சென்றது. அவரால் தன்னுடைய நிழலின் தலையைப் பிடிக்கவே முடியவில்லை.
மணி 10 ஆனது, பத்தரை, பதினொன்று, பதினொன்றரை, நேரம் நண்பகலை எட்டிக்கொண்டிருந்தது.
இப்போது ரங்கநாதனின் நிழல் வெகுவாகச் சுருங்கியிருந்தது. ஆனால் அப்போதும் அவரால் அதன் தலையைப் பிடிக்கமுடியவில்லை. எத்தனை வேகமாக ஓடினாலும் பலன் இல்லை.
சரியாக நண்பகல் பன்னிரண்டு மணிக்குச் சூரியன் உச்சிக்குச் சென்றான். ரங்கநாதனின் நிழல் அவருக்குள் அடங்கிவிட்டது.
ரங்கநாதன் புரிந்துகொண்டார். ‘புதையல் எனக்குள் இருக்கிறது. அதை வெளியில் தேடிப் பிரயோஜனம் இல்லை!’
Tuesday, October 4, 2016
ஜென் கதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment