உலக சமாதானம் – WORLD PEACE
================================
பிச்சைக்காரர்களை ஒழிக்க அறநிலைய சொத்துக்கள்
---------------------------------------------------------------------------------------
வேலையில்லாக் குறைபாட்டால் வயோதிகத்தால்
வியாதியினால் வருமானம் ஏதுமின்றி
மூலைமுடுக்குகளில் வாழ் பிச்சைக்காரர்
முழுஅளவில் வளைத்தாங்காங்குள்ள தர்ம
சாலைகளில் நிரப்பி யவரர்வர்க்கு ஒத்த
சாப்பாடு தொழில் கொடுக்க உலகில் உள்ள
சோலைசூழ் கோயில் மடம் ஆதினங்கள்
சொத்து பயன்படும் சிறந்த முறைவகுப்போம்.
மனித இனம் வாழ்வில் பலதுறைகளில் பெரும் அளவாக முன்னேற்றம் அடைந்திருக்கிறது. எனினும் இன்னும் சில நாடுகளில் பிச்சை வாங்கிச் சாப்பிட்டு ஜீவித்து வருகிறார்கள். இதற்குக் காரணம், வறுமை, வியாதி, பழக்கம் இவைகளே யாகும். இந்த நிலையை மாற்ற வேண்டியது அறிஞர்களின் பொறுப்பே ஆகும்.
இன்று பல அறநிலையங்களில் அளவற்ற சொத்துக்கள் குவிந்து இருக்கின்றன. பக்தர்களின் அறிவு நிலையைப் பயன்படுத்தும் முறைகளுக்குக்காக அவசியமான தொகையை ஒதுக்கி வைத்து, மீதித் தொகையைக் கொண்டு, எந்த நிலையத்தால் எத்தனை பிச்சைக் காரர்களைப் போஷிக்க முடியும் என முதலில் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சட்டத்தின் உதவியால் பிச்சை வாங்குவதையும் பிச்சைபோடுவதையும் குற்றமாக்கி விடவேண்டும். கைது செய்யப்படும் பிச்சைக்காரர்களை ஆங்காங்கே பாழடைந்து கொண்டு வரும் சத்திரங்களில் நிரப்பி, அவரவர்களின் உடல், பலம், வயது இவைகளுக்கேற்றபடி கல்வி, தொழில் இவைகளைப் போதித்து, உணவு கொடுத்து வர வேண்டும். இந்த முறையைத் தொடர்ந்து பத்து வருடங்கள் அமுல் நடத்தினால் உலகில் எந்த நாட்டிலும் பிச்சைக்காரர்கள் இல்லாமல் செய்துவிடலாம். உலகில் எந்தப் பாகத்திலேனும் ஒரு மனிதன் பிச்சை கேட்டு வாங்கி யுண்ணும் நிகழ்ச்சி மனித இனத்திற்கே அவமானச் சின்னமாகக் கருதப்பட வேண்டும்.
பிச்சைக்காரர்களில் குஷ்ட ரோகிகளின் நிலைமைதான் மிகவும் பரிதாபத்திற்கு உரியது. அவர்களைப் பிரித்து விசாலமான தனி இடங்களில் வாழ வைக்க வேண்டும். அவர்களிடம் ஆண் – பெண் தொடர்பு உணர்ச்சி அதிகமாக இருக்கும். அவர்களிடமிருந்து சந்ததிகள் தோன்றாமலிருக்க விந்து நாதத்தில் ரசாயன மாறுபாடுகளை ஏற்படுத்த சுகாதார நிபுணர்களால் முடியாததல்ல. கண்பார்வைக்கே அருவருப்பும் துன்பமும் அளிக்கக்கூடிய இந்த நோய், அது பற்றி இருப்போர்களை எவ்விதமாக துன்புறுத்தும் என்பதை யூகிக்கும்போது, இந்த நோயை ஒழிக்கும் முயற்சியில் அறநிலையங்களின் பணத்தைச் செலவிடுவது அனைவருக்கும் சம்மதமே அளிக்கும்.
கடவுளுக்கு என ஒதுக்கப்பட்ட பணத்தை வேறுவழியில் செலவு செய்யலாமா? என சில அன்பர்கள் கேட்கக்கூடும். கடவுளை மனிதர்கள் காப்பாற்ற வேண்டுமென்பதோ, பாதுகாக்க வேண்டுமென்பதோ அறியாமையாகும். கடவுள் என்ற நிலையை மனிதன் அறிந்து தெளிவாகவும் அன்பாகவும் வாழ, மனிதர்களைப் பக்குவம் செய்யவே அறநிலையங்கள் தோன்றின. பின்னர் பல பொருட்களின் வியாபாரச் சந்தையைக் கூட்டி வியாபாரிகள் அந்தச் சமயத்தில் மக்களுக்கு உற்சாக மூட்ட ஆலயங்களை அவர்கள் செலவில் அலங்கரித்து திருவிழாக்களும், உற்சவங்களும் ஏற்படுத்தி விட்டார்கள். இன்று மிகச் சிறந்த முறையில் பல பொருள்களின் கண் காட்சிகள் உலகெங்கும் நடந்து வருவதால் இதற்கென ஏற்பட்ட உற்சவங்கள் தேவையில்லை. ஆகையால் பக்தர்களின் வழிபாடுகளுக்கு வேண்டிய அவசியமான செலவுகளுக்காக ஒரு அளவு தொகையை ஒதுக்கி வைத்துக் கொண்டு, மற்ற சொத்துக்களையும், ஆபரணங்களையும் பிச்சைக்காரர் பிரச்சனையை தீர்க்கவும் தொழில் பள்ளிகளை ஏற்படுத்தவும் செலவிட்டு சமூக நலத்தைப் பெருக்கலாம்.
எந்த வகையிலோ குறுகிய நோக்கம் உடையவர்கள் கூட இந்தத் திட்டத்தை ஒப்புக்கொள்வார்கள் என நம்புகிறேன். இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தில், கடவுளை மனிதன் பாதுகாக்க வேண்டும் என்ற கற்பனையாகக் கொள்ளும் அறியாமையைப் போக்கவும், அந்தக் கடவுள் தத்துவத்தை அனைவருக்கும் தெளிவு படுத்தவும் சிந்தனையாளர்களின் பிரசாரம் அவசியமாகும்.
- வேதாத்திரி மகரிஷி
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
No comments:
Post a Comment