=========
பிறக்கும் போது யாருக்கும் எதுவுமே தெரிவதில்லை. வளர வளர ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்கிறோம். அந்த வகையில் விஷயங்களை நாம் எதன் மூலமாகவோ அல்லது யார் மூலமாகவோ அறிந்து கொள்கிற பொழுது, அந்தத் தத்துவங்கள் அனைத்துமே குரு என்றாகி விடுகின்றது. அப்படி ஒவ்வொன்றாக நாம் தெரிந்து கொள்ள, நமக்கு உதவுவது இறையாற்றல்தான். நமது தேவை, அந்தத் தேவை குறித்த அழுத்தமான இச்சை இவைகளை முன்னிட்டு இறையருள் நமக்கு விஷய ஞானத்தை உணர்த்தியருளுகிறது. மற்றபடி இங்கே எல்லாம் தெரிந்தவர்கள் யாருமில்லை. அதிகம் தெரிந்தவர்கள், ஓரளவு தெரிந்தவர்கள், ஒன்றுமே தெரியாதவர்கள் என்று மூன்று நிலைப்பாடுதான் இருக்கிறது. நாம் என்ன செய்கிறோம் ? நமது தேவை நிமித்தம் நம்மை விட அதிகம் விஷயங்களை அறிந்து வைத்திருப்பவர்களை நாடுகிறோம். அவர்கள் நம் தேவையை நிறைவேற்றுவதற்கு ஈடாக, தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அவர்களும் நமக்கு விஷயங்களை உணர்த்துவதால் குரு என்ற தத்துவத்தில்தான் வருகிறார்கள். ஆனால், இவர்கள் உலகாய குருமார்களாவார்கள். ஆன்மீக ஞானத்தைப் பொருத்த வரை குரு என்பவர் அப்படியல்ல. அவர் நிறை ஞானி. தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர் ஒருபோதும் பிரம்ம வித்தையை உபதேசிக்க மாட்டார். ஏனெனில் அவர்கள் தேவைகளைக் கடந்தவர்கள். அவர்களது மனதில் தோன்றி விட்டால் க்ஷண நேரத்தில் நம் மனதை புரட்டிப் போட்டு விட்டுப் போய்க் கொண்டேயிருப்பார்கள். எனவே நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். ஒரு நிறை ஞானியை நம்மிடத்தில் ஈர்க்கும் விதத்தில் ஒரு நல்ல சீடனாக நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த உலகாய குருமார்களின் உதவியும் நமக்கு சில நேரங்களில் தேவைப்படலாம். அப்படிப்பட்ட நிலையில் நம் தேவையை நிறைவேற்றிய அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு ஏற்பட்டு விடுகிறது. அது நம் கடனாக இருக்கிற நிலையில். பிறகு அதைப் பற்றி தவறாகப் பேசுவது நன்றி கெட்டத்தனமாக ஆகி விடும்.
இயற்கையின் கட்டமைப்பானது ஒன்றிலிருந்து மற்றொன்று பெற்றுக் கொள்ளும் விதமாகவே அமைந்திருக்கின்றது. நமது தகுதியை வைத்துதான் யாரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலைப்பாடு அமைகிறது. உலகாய குருமார்களிடம் பெற்றுக் கொள்ள வேண்டுமா ? நிறை ஞானியிடம் பெற்றுக் கொள்ள வேண்டுமா ? அல்லது இறையாற்றலிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டுமா ? என்பதை தீர்மானிப்பது நம் தகுதிதான். கடல் முழுவதும் நீரால் நிரம்பியிருந்தாலும், அதன் ஓரங்களில் அலைகள் ஓயாது அடித்துக் கொண்டே இருப்பது போல, அறிவில் சிறந்தவர்களுக்கும் கூட சில நேரங்களில் சலனங்கள் ஏற்பட்டு விடுகின்றன. அப்படிப்பட்ட நிலையில் இறையாற்றலே ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்து உண்மையை உபதேசித்து அவர்களை தெளிவுபடுத்தியிருக்கிறது என்பதை நாம் பழைய சரித்திரங்கள் மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம். உபதேசம் என்பது அறிவைக் காக்கும் கவசமாகும். அதாவது அறிவை உடையவன் அந்த அறிவை தக்க வைத்துக் கொண்டு மேலும் தெளிவடைய உபதேசம் தேவைப்படுகிறது.
சிறந்த புத்தி கூர்மையும், திறமையும் கொண்ட அர்ஜுனனுக்கு இறைவனே குருவாக நின்று உபதேசித்து அருளினார். அறிவில் சிறந்த ஔவைக்கு சுட்டபழம் வேண்டுமா ? சுடாத பழம் வேண்டுமா ? என்று கேட்டு, முருகனை குமரகுருவாக நின்று உண்மையை உபதேசித்து அருளினார். ஆதி சங்கரருக்கு புலையன் வடிவில் வந்து இறைவனே உண்மையை உபதேசித்து அருளினார். அப்படிப்பட்ட பேரறிவாளனாகிய ஈசனே பிரணவப் பொருளை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு, சுப்ரமண்யரிடம் சிஷ்ய பாவமாக அமர்ந்து உபதேசத்தை ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், உபதேசம்தான் முக்கியமே தவிர உபதேசத்தை உணர்த்தும் உருவமோ அல்லது அந்த உபதேசத்திற்கு பிரிதி உபகாரமாக நாம் செலுத்தும் காணிக்கைகளோ ஒரு பெரிய விஷயமே அல்ல.
இவையனைத்திற்கும் மேலாக ஒரு விஷயத்தை நாம் கவனித்தே ஆக வேண்டும். இங்கே நாம் அறிந்து கொள்கிற அல்லது அறியத் துடிக்கிற விஷயங்கள் எதுவுமே நிரந்தரமானவைகள் அல்ல. பிரம்மம் ஒன்று மட்டுமே நிரந்தரமானது. நம் ஆத்மாவே அந்த ப்ரம்மம் என்கிற ஞானம் நமக்குள் உருவாக வேண்டும். அதை அடைவதற்கு நாம் செய்கிற முயற்சிகள் அனைத்தும் முற்றிலும் உள்மயமான, தனிப்பட்ட முயற்சிகளாகும். புற விஷய ஞானங்கள் எதுவுமே அங்கு செல்லுபடியாகாது. அனைத்தையும் துடைத்தெறிந்து விட்ட நிர்மலமான, தூய்மையான மனம் மட்டுமே உண்மை ஞானத்தைப் பெற முடியும். எனவே நமக்குத் தேவை என்ன ? புற விஷய ஞானங்களா ? அல்லது ப்ரம்ம ஞானமா ? என்பது குறித்த தெளிவு அவசியம். ப்ரம்ம ஞானம்தான் வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா ? இவ்வளவு காலமும் பிரயத்தனப்பட்டு நாம் அறிந்து கொண்ட விஷய ஞானங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் அழிக்க வேண்டும்.
என்னிடம் கேட்டால் உண்மையை உணர வேண்டும் என்று நினைக்கிறவன் அறிவாளியாக இருப்பதை விட,
புற விஷய ஞானங்களைப் பொருத்த வரையில் முட்டாளாக இருப்பது எவ்வளவோ மேல் என்று சொல்லுவேன். ஏனெனில் விஷய ஞானி ஆயுளில் பாதியை அறிந்து கொள்வதற்கு செலவிடுகிறான். பிறகு அவற்றை அழிப்பதற்கு மீதி ஆயுளை செலவிடுகிறான். முடிவில் கையிருப்பு ஏதுமின்றி மீண்டும், பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கிறான். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மலைமேல் ஏறி தினமும் நெய்வேத்தியங்களை படைப்பதும், அவற்றைச் சுத்தம் செய்வதுமாக இருந்த விஷய ஞானிக்கு எந்தத் தரிசனமும் வாய்க்கவில்லை. அறிவேதுமில்லாத கண்ணப்பனுக்குத்தான் அது உடனே கிடைத்தது. இங்கே நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு நம் அறிவே தடையாக இருக்கிறது. எனவே எதை அறிய வேண்டுமோ அதை அறிய முயற்சி செய்யுங்கள். எதை அடைய வேண்டுமோ அதை அடைய வேண்டி முன்னேறுங்கள்.
வாழ்கவளமுடன்
No comments:
Post a Comment