**
ஒவ்வொரு நாளும் அனைவருக்கும்
மலச்சிக்கல் இல்லாம விடியணும்.....
மனச்சிக்கல் இல்லாம முடியணும்.....
மலச்சிக்கல் என்பது ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால், அல்லது மலம் மிகவும் வலியுடனுடம் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என ஆங்கில மருத்துவம் கூறுகிறது.
நபருக்கு நபர் குடலின் செயல்பாடுகள் மாறுபடும். வாழ்வில் எல்லோருக்கும் எப்பொழுதாவது மலச்சிக்கல் ஏற்படும். இது சில காலம் நீடிக்கும். இது எதனால் ஏற்படுகிறது என புரிந்து கொண்டால் இதைத் தடுக்க முடியும்.
நாம் உண்ணும் உணவு வயிற்றிலும், சிறுகுடலிலும் பயணிக்கும்போது பல்வேறு இரசாயனங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு, அதில் இருந்து உடலுக்குத் தேவையான சத்துக்கள் எடுக்கப்படுகின்றது.
தேவையான சத்துக்களைப் பிரித்தெடுத்த பின் மிஞ்சும் சக்கை, கழிவாக பெருங்குடலுக்கு வந்து சேர்கிறது. பெருங்குடலில் தண்ணீர் அனைத்தும் உறிஞ்சப்பட்டவுடன், மீதி உள்ளவை மலமாக வெளியேற்றப்படுகிறது.
*மலச்சிக்கல் ஏற்பட பொதுவான காரணங்கள்*:
உணவுமுறையில் மாற்றம் குறைந்த நார்ச் சத்துள்ள உணவு சாப்பிடுவது தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை இரும்பு, சுண்ணாம்பு மாத்திரைகள் மற்றும் வலியை மட்டுப்படுத்தும் சில மாத்திரைகள் உட்கொள்வது. உடல் உழைப்பின்மை அதிக மனஅழுத்தம், பிரயாணம் செய்யும் பொழுது மலம் வந்தால் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வது போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன, பொதுவாக பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தால், கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.
*மருத்துவக் காரணங்கள்* :
பெருங்குடல், ஆசனவாய் இவற்றில் உள்ள தசைகளில் மாற்றம் ஏற்படுவது, தைராய்டு குறைவாகச் சுரப்பது, சர்க்கரை நோய் பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்திலும், சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் மலச்சிக்கல் ஏற்படும்.
*மலச்சிக்கலில் இருந்து எவ்வாறு விடுபடுவது*?
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சரி செய்யலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணத்தொடங்கவேண்டும். நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவினால் மலச்சிக்கல் ஏற்படுகிறதா எனக் கவனிக்கவும். நீர் வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, டீ மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
தொடர் உடற்பயிற்சி, குடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும். மலம் வரும்போது, வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் புறக்கணிக்காமல் செல்லவும். எப்போதும் தளர்வு நிலையில் இருப்பது உதவும்.
*மருந்துகள்*:
இப்பிரச்சினை மிகவும் பாதிப்பாக இல்லையென்றால் மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது. மிகுந்த தொந்தரவாக இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நீங்களாகவே எடுத்துக்கொள்ளும் மருந்துகள் குடலின் செயல்பாட்டைப் பாதிக்கும். முடிந்தவரை மூலிகை மருந்துகளை தேர்ந்தெடுங்கள்.
*ரத்தம் கலந்த அல்லது கறுப்பான மலம்*:
மலத்தில் இரத்தம் கலந்திருந்தால், ஜீரண மண்டலத்தில் ஏதோ காயம் ஏற்பட்டிருக்கிறது என அர்த்தம். வாயிலிருந்து ஆசனவாய் வரை ரத்தக் கசிவு எங்கிருந்து வேண்டுமானாலும் ஏற்படலாம். ரத்தம் கறுப்பு நிறத்திலிருந்தால் ஜீரண மண்டலத்தின் முதல் பாதியிலிருந்தும் சிகப்பு நிறத்தில் இருந்தால், ஜீரண மண்டலத்தின் இரண்டாவது பகுதியிலிருந்தும் வருவதாகக் கொள்ளலாம்.
வயிற்றுப் புண், இரத்த நாளங்களின் பாதிப்பு போன்றவை கறுப்பான மலத்தை ஏற்படுத்தும். ஆசன வாயில் வெடிப்பு, ஹெமராய்ட்ஸ், குடலில் ஏற்படும் தொற்று, புற்றுநோய் மற்றும் குடல் நோய்கள் போன்றவை சிவப்பு நிற ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.
இரும்புச் சத்து மாத்திரைகள் மற்றும் பிற மருந்துகளும் மலத்தைக் கறுப்பு நிறமாக்கும். ஆஸ்பிரின் மற்றும் புரூஃபன் போன்ற வலி மாத்திரைகளைத் தேவைக்கதிகமாக உட்கொண்டால் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை உட் கொள்ள வேண்டும்.
தினமும் உடலை கவனியுங்கள்...
1. உங்கள் வியர்வையின் வாடை மாறுகிறதா?
2. சிறுநீரின் நிறம் மாறுகிறதா? சிறுநீரில் கெட்ட வாடை வருகிறதா?
3. மலத்தின் நிறம் மாறுகிறதா? மலத்தில் இருந்து புதிதாக அதீத கெட்ட வாடை வருகிறதா?
4. பசி சரியான நேரத்தில் எடுக்கிறதா?
5. அனைத்து ருசிகளின் சுவையையும் உணரமுடிகிறதா?
நீங்கள் மட்டுமல்ல நண்பர்களே....
உங்கள் குடும்பத்தில் சிறியவர் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் கவனிக்கச் சொல்லுங்கள்.
இதில் ஏதேனும் மாற்றம், வித்தியாசத்தை உணர்ந்தீர்கள் என்றால் உடலில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்....
நன்றி...
No comments:
Post a Comment