வேதாத்திரிய சிந்தனைகள் :
===========================
" "
-------------------------------
அறிவு ஆறாம் நிலையை எய்த பின்னர்
அது முழுமை பெற்றுத் தனையறியும் மட்டும்
அறிவிற்கு அமைதிகிட்டா ; அவ்வப்போது
அது தேவை, பழக்கம், சூழ்நிலைகட் கொப்ப
அறிவேதான் காம முதல் அறு குணங்கள்
ஆகிவிளைவாய் இன்பதுன்பம் துய்த்து
அறிவுதன் மூலநிலை நோக்கி நிற்கும்
அதன்பிறகே முழுமைப்பெறும், அமைதி உண்டாம்.
- வேதாத்திரி மகரிஷி
மழை பொழிகிறது. அது வெள்ளமாக மாறுகிறது.
ஓடுகிறது. சிறுசிறு குட்டைகளில் நிரம்புகிறது.
அதன் பின் பெரிய பெரிய ஏரிகளிலும் நிரம்புகிறது.
அதன் வேகம் குறையவில்லை. காட்டாற்று
வெள்ளமாக மாறி ஓடிக்கொண்டே இருக்கிறது.
அணைகள் கட்டி சேமிக்கிறார்கள். நிரம்பிய பிறகு
மீண்டும் வேகமெடுத்து ஓடுகிறது. அதன் வேகம்
குறையவில்லை. இறுதியாக கடலில் போய்
கலக்கிறது. அதன் பிறகே அதன் வேகம் தனிகிறது.
ஏன் ? ஏனெனில் நீரின் மூலம் கடல்தான். எனவே
தன் மூலத்தோடு இணைந்தபிறகே அது அமைதி
பெறுகிறது. இது போன்றுதான் மனித மனமும்.
அதன் ஆதிநிலை எது என அறியாததால் புலனளவில்
தன்னைக் குறுக்கிக்கொண்டு அது தேவை, பழக்கம்,
சூழ்நிலைகட் கொப்ப, பேராசை, சினம், கடும்பற்று,
முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை,
வஞ்சம் எனும் ஆறு தீய குணங்களாகி, விளைவாக ஐந்து
பெரும் பழிச் செயல்களாகிய பொய், சூது, களவு, கொலை,
கற்பழிப்பு எனும் நிலைகளில் இயங்கி, இன்பம், துன்பம்
ஆகியவற்றை மாறிமாறி அனுபவித்து நிறைவு பெறாமல்
துன்பமடைகிறது. சோர்வடைகிறது. அது தனது ஆறாம்
அறிவின் சிறப்பை உணர்ந்து, தன்னைப் பற்றி சிந்தித்து,
தனது மூலநிலையை அறிந்து அந்த பரம்பொருளோடு
தன்னை இணைத்துக்கொள்ளும்போது அமைதியடைகிறது.
ஆனந்தமடைகிறது. நிறைவு பெறுகிறது. முழுமையடைகிறது.
தன்னையறிந்து அந்நிலையில் விழிப்போடு இருந்து பிற
உயிர்களிடத்தில் அன்பும் கருனையுமாக வாழும் வகையில்
எண்ணம், சொல், செயல்களை ஒழுங்குபடுத்தி
செயல்படுவதே முழுமைப்பேறு.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
No comments:
Post a Comment