Tuesday, October 25, 2016

விவேகானந்தரின் ஆற்றல்

விவேகானந்தரின் ஆற்றல்
---
தூங்கிக் கிடந்த பாரதத்தைத் தட்டியெழுப்பியவர் விவேகானந்தர். அடிமை நாடாகக் கிடந்த இந்தியாவை இன்று உலகின் முன்னணி நாடுகளுடன் நடைபோட வைத்திருப்பது விவேகானந்தரின் ஆற்றல். இந்த ஆற்றல் அவருக்கு எங்கிருந்து வந்தது?
அதனை அவரது வார்த்தைகளிலேயே காண்போமா?
விவேகானந்தர் சிகாகோ சர்வமத மகாசபையில் கலந்துகொண்டதும் அதில் வெற்றிவீரராக பவனி வந்ததும் நாம் அறிந்ததே! மகாசபை நிகழ்ச்சியைச் சற்றுப் பார்ப்போம்
சர்வமத மகாசபையில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களும் துறவியரும் கலந்துகொண்டிருந்தனர். அவர்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து தங்கள் கருத்துக்களைக் கூறுமாறு கேட்டுக்கொண்டனர். காலையில் நிகழ்ச்சிகள் தொடங்கின.
ஆனால் நிகழ்ச்சிகளை நடத்துபவர் பலமுறை அழைத்தும் விவேகானந்தர் எழுந்து போகவில்லை; ‘இப்போது இல்லை, பிறகு’ என்று தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார். நண்பகல் கடந்து மாலையையும் நெருங்கியது. ஒருவேளை இவர் பேசவே மாட்டாரோ என்று மற்றவர்களுக்குச் சந்தேகமே வந்துவிட்டது.
இனி தாமதிக்க முடியாது என்ற நிலைமை வந்தபோது விவேகானந்தர் எழுந்தார். ஒருகணம் கலைமகளை மனத்தில் நினைத்தார். ‘அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே’ என்று அழைத்தார்! ‘அவ்வளவுதான். அவரால் அடுத்த வார்த்தையைப் பேசமுடியவில்லை. அங்கிருந்த அனைவரையும் ஏதோவோர் ஆர்வப் பேரலை ஆட்கொண்டதுபோல் தோன்றியது. நூற்றுக் கணக்கானோர் தங்கள் உற்சாகத்தை அடக்க முடியாமல் எழுந்துவிட்டனர். காதுகளையே பிளப்பதுபோல் அங்கே கரவொலி எழுந்தது’ என்று எழுதுகிறார் அங்கிருந்த ஒருவர்.
தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் விவேகானந்தர் பேச முயற்சி செய்தார். ஆனால் அந்தக் கைதட்டல் ஒலியில் அவரால் பேச முடியவில்லை. இப்படியொரு வரவேற்பா என்று அவர் சற்று ஆடித் தான் போனார்! எழுதுகிறார் அவர்:
‘இசை, விழா, உரைகள் என்று விமரிசையாகப் பேரவை தொடங்கியது. பிறகு பிரதிநிதிகள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்பட்டனர்; அவர்கள் வந்து பேசினர். என் இதயம் படபடத்தது, நாக்கு அனேகமாக வறண்டே போயிற்று; நடுக்கத்தின் காரணமாக, காலையில் பேச எனக்குத் தைரியம் வரவில்லை. கடைசியாக, மாலையில் பேசுவதற்காக எழுந்தேன். கலைமகளை வணங்கிவிட்டு மேடையில் வந்தேன். ஆரம்பத்தில் “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!” என்று அழைத்தேன். அவ்வளவுதான், இரண்டு நிமிட நேரம் காது செவிடுபடும்படியான கரகோஷம். அதன்பிறகுதான் உரையைத் தொடர முடிந்தது.’
சிறிய உரைதான்; ஆனால் அது சமய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றின் ஏடுகளில் ஒரு பொன்னிதழாக மாறியது. ‘அவரது வார்த்தைகளில் தீப்பொறிகள் பறந்தன’ என்று எழுதுகிறார் ரோமா ரோலா என்ற பிரெஞ்சு அறிஞர்.
ஆனால் அந்தத் தீப்பொறிகள் சுடுகின்ற கதிர்கள் அல்ல, உலகியல் வெப்பத்தால் வாடிக் கிடக்கின்ற இதயத் தாமரைகளை மலரச் செய்கின்ற குளிர்க் கிரணங்கள்! அதனால் தான் அந்த அரங்கில் அமர்ந்திருந்த அத்தனை இதயங்களும் ஒருசேர ஆர்வத்துடன் ஆர்ப்பரித்தன. ஆயிரம் உள்ளங்களைக் கொள்ளைகொள்கின்ற அந்தத் தெய்வீக ஆற்றல் எங்கிருந்து வந்தது? அது என்ன ஆற்றல்?
விவேகானந்தரின் வார்த்தைகளில் கேட்போம்:
‘சிகாகோவில் எனது முதல் சொற்பொழிவில் நான் எல்லோரையும் “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே” என்று அழைத்ததும், எல்லோரும் எழுந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அப்படி அவர்கள் பரவசப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா? ஏதோ அதிசய ஆற்றல் என்னிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். உண்மை தான். என்னிடம் அத்தகைய ஆற்றல் உள்ளது, அது இதுதான்— ஒருமுறைகூட காம எண்ணம் என்னுள் புக நான் அனுமதித்ததில்லை. என் மனம், எனது சிந்தனை, பொதுவாக மனிதன் அந்த வழியில் செலவழிக்கின்ற என் ஆற்றல்கள் அனைத்தையும் ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது.’
தூய வாழ்க்கையின் ஆற்றல் அத்தகையது. ‘தூய்மை மற்றும் மௌனத்திலிருந்து ஆற்றல் மிக்க சொற்கள் பறக்கின்றன’ என்பார் விவேகானந்தர்.

No comments:

Post a Comment