Sunday, April 10, 2016

ஒருமுகப்பட்ட சிந்தனை

வாழ்க வளமுடன்!

!

வயது முதிர்ந்த சித்த வைத்தியர் ஒருவர் புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடிப்பதை தன் வாழ்க்கை லட்சியமாக கொண்டு, இரவு பகலாக பல ஆண்டு காலம் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் அவர் ஏறக்குறைய 90 சத வீதம் வெற்றியும் கண்டார்.இன்னும் ஒரே ஒரு மூலிகை மட்டும் கிடைத்து விட்டால் ஆராய்ச்சி பூர்த்தியாகிவிடும். ஆனால், அந்த அந்த அபூர்வ மூலிகை எங்கே இருக்கிறது என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.இந்த நிலையில் அந்த சித்த வைத்தியர் ஒரு துறவியை சந்தித்து ஆலோசனை கேட்டார் .

அவரும் நீ தேடும் மூலிகை எங்கே இருக்கிறது என்று ஒரே ஒரு மகா சித்தருக்கு மட்டும்தான் தெரியும். இமயமலையின் உச்சியில் உள்ள பனிக்குகையில் தவம் இருக்கும் அந்த மகா சித்தர் வருடத்துக்கு ஒரு முறை தன் குகையை விட்டு வெளியே வருவார்.அப்போது நீ அவரை சந்தித்தால், நீ தேடுகிற மூலிகை எங்கே கிடைக்கும் என்ற கேள்விக்கான பதில் உனக்கு தெரிய வரும் என்றார்.ஒரு முக்கியமான விஷயம், அந்த மகா சித்தர் நீ கேட்கும் ஒரே ஒரு கேள்விக்குதான் பதில் சொல்வார். இதை நன்றாக நினைவில் நிறுத்திக்கொண்டு,அதற்கேற்ப அவரிடம் கேள்வி கேள்" என்று சொல்லி அனுப்பினார் துறவி.

வைத்தியர் இமயமலை சித்தரை நோக்கி உடனடியாக தன் பயணத்தை தொடங்கி விட்டார். கடும் பனி காற்று என எல்லா சோதனைகளையும் தாண்டி பல மாதங்களுக்கு பிறகு,அந்த மகா சித்தர் தவம் இருக்கும் பனிக்குகைக்கு வெளியே சென்று நிற்கிறார் சித்த வைத்தியர். பல நாட்கள் காத்திருந்த பிறகு, அந்த குகையில் இருந்து மகா சித்தர் வெளிப்பட்டார். என்ன ஆச்சர்யம்! அந்த சித்தர் இவர் எதிர்பார்த்ததுபோல தாடி வைத்த பெரியவர் அல்ல! பருவம் பொங்கும் ஓர் அழகிய இளம் பெண்!

இப்படியும் ஒரு சித்தரா என்று வியப்பில் ஆழ்ந்த அந்த வைத்தியர், அந்த இளம் பெண்ணை பார்த்து "உங்களுக்கு திருமணமாகி விட்டதா?" என்று கேட்டார்.அதற்கு அந்த பெண் சித்தர் "இல்லை" என்ற பதிலை மட்டும் சொல்லி விட்டு வைத்தியரின் அடுத்த கேள்விக்கு காத்திருக்காமல் குகைக்கு உள்ளே சென்று விட்டார்.
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதை வாழ்க்கை லட்சியமாக கொண்டு வாழ்ந்ததும் அல்லாமல் இந்த தள்ளாத வயதிலும் பல இன்னல்களை கடந்து உயிரைப்பணயம் வைத்து இமயமலை ஏறிய அந்த வைத்தியரின் சிந்தனை ஒரே ஒரு கணம் தடம் புரண்டதால், வாழ்நாள் முழுவதும் அவர் பட்ட கஷ்டம் வீண் ஆனது!.

நம் லட்சியத்தை அடைய உழைப்பு, விடா முயற்சி எல்லாமே மிக மிக அவசியம்.என்றாலும் அந்த உழைப்பும் முயற்சியும் நாம் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவேண்டுமானால் ஒருமுகப்பட்ட சிந்தனை கண்டிப்பாக தேவை!

இதையே மகரிஷி " தேவையுணர்வு, சந்தர்ப்பம் என்பனவற்றால் செயல்களும், செயல்களால் உடலுக்கும், அறிவிற்கும் ஒரு விதமான பழக்கமும் ஏற்பட்டு அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் எண்ணமும் உடலியக்கமும் நடைபெற்று வருதல் மனிதருக்கு இயல்பு என்றாலும், சிந்தனை, துணிவு, விடாமுயற்சி என்பனவற்றின் மூலம் பழக்கத்தை மாற்றி வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திக்கொள்ள முடியும்" என்கிறார்.

No comments:

Post a Comment