Saturday, April 30, 2016

விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்  !

விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்  !!!

விபஸ்ஸனா என்றால் என்ன?
விபஸ்ஸனா, உண்மையான மன-அமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான ஒரு வழிமுறையாகும். தன்னைத்தானே ஆராய்வதன் மூலம் மனதைத் தூய்மையடையச் செய்யும் படிப்படியான செயல்முறை இது.

விபஸ்ஸனா இந்திய நாட்டின் தொன்றுதொட்ட தியான வழிமுறைகளில் ஒன்று ஆகும். விபஸ்ஸனா என்ற சொல்லுக்கு 'உள்ளதை உள்ளபடி பார்த்தல்' என்று பொருள். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் இந்த முறையை மீண்டும் கண்டறிந்து, இதை உலகத்தின் அனைத்து பிணிகளையும் நீக்கும் அருமருந்தெனவும், இதுவே வாழும் கலை எனவும் போதித்தார்.

இந்த தியான முறை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, பிரிவையோ சார்ந்திராதது. உள்ளத்தின் மாசுகளை அறவே நீக்கி, மோட்சப் பெருநிலை அடைவதே இந்த தியான முறையின் உயரிய குறிக்கோள். உடல் நோய்களை நீக்குவதோடு நில்லாமல் மனிதர்களின் துன்பங்களை அறவே நீக்கி பூரண சுகம் அளிப்பதே இதன் நோக்கம்.

இது உடம்பிற்கும் மனதிற்கும் உள்ள ஆழமான தொடர்பை மையமாகக்கொண்டு செயல்படுகிறது. உடலையும் மனதையும் தொடர்ந்து இணைக்கக்கூடியவை உடலில் தோன்றும் உணர்ச்சிகள். உடலை உயிருள்ளதாக அறியவைப்பதும் உடலில் தோன்றும் உணர்ச்சிகள்தான். அதனால் உடல் உணர்ச்சிகளை நெறிமுறையோடு கவனிப்பதன் மூலம் உடலிற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை நேரடியாக அறியமுடிகிறது. தன்னைத்தானே கவனித்து, தன்னைத்தான் ஆராய்ந்து மனதிற்கும் உடலிற்கும் உள்ள பொதுவான வேரை நோக்கி இட்டுச் செல்லும் இந்தப் பயணம் மனதின் மாசுகளைக் கரைக்கிறது. அன்பும் கருணையும் நிறைந்த மனநிலையை ஏற்படுத்துகிறது.

ஒருவரின் எண்ணங்கள், மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் சீர்தூக்கி ஆராயும் குணம் எவ்வாறு அறிவியற்பூர்வமான விதிகளுக்கு உட்பட்டு இயங்குகின்றன என்பது இந்த தியான பயிற்சி மூலம் தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. ஒருவர் எவ்வாறு மேம்படுகிறார் அல்லது பின்நோக்கிச் செல்கிறார், எவ்வாறு ஒருவர் துன்பங்களை ஏற்படுத்துகிறார் அல்லது துன்பங்களிலிருந்து விடுபடுகிறார் ஆகியவற்றின் இயல்பு நேரடி அனுபவத்தின் மூலம் புலனாகிறது. இந்த தியான பயிற்சி மூலம் வாழ்க்கையில் கூடுதலான பிரக்ஞை, மாயையின்மை, சுய-கட்டுப்பாடு மற்றும் அமைதி ஆகியவை வாய்க்கின்றன.

இவை அல்ல விபஸ்ஸனா

இது கண்மூடித்தனமான ஒரு சடங்கோ, வழக்கோ அல்ல
இது அறிவை வளர்க்கும் ஓர் ஆட்டமோ, தத்துவ விளையாட்டோ அல்ல
இது ஓய்வு எடுக்கவும், விடுமுறையைக் கழிக்கவும், பலரைச் சந்தித்து பழகவும் ஏற்பட்ட ஒரு வாய்ப்பு அல்ல.
இது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்து ஓட ஒரு வழியும் அல்ல

இதுதான் விபஸ்ஸனா

இது மனத்துயர்களை வேரோடு அழிக்கும் ஒரு வழிமுறை ஆகும்
இது சமுதாயத்திற்கு நற்பணிகள் ஆற்ற உதவும் வாழும் கலை ஆகும்
இது வாழ்வின் இன்னல்களை அமைதியுடனும் சமநோக்குடனும் எதிர்கொள்ளும் வண்ணம் மனதைத் தூய்மைப்படுத்தும் முறை ஆகும்

பாரம்பரியம்

விபஸ்ஸனா புத்தபெருமான் காலத்திலிருந்து தொடங்கி இடையீடின்றி வழிவழியாக ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு இன்று வரை நிலைத்துள்ளது.

இதன் தற்போதைய ஆசிரியர் திரு சத்திய நாராயண் கோயன்கா அவர்களின் மூதாதையர்கள் இந்தியர்களாக இருந்த போதிலும், இவர் மியன்மார் (பர்மா) நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அங்கு இருக்கையில் அவர், உயர் அரசாங்க அதிகாரியாக பதவி வகித்து வந்த சயாக்யி ஊ பா கின் அவரிடம் விபஸ்ஸனா பயிலும் நல்வாய்ப்பைப் பெற்றார். தம் ஆசிரியரிடம் பதினான்கு ஆண்டு காலம் பயின்ற பின், 1969 ஆண்டு முதல் அவர் இந்தியாவில் தங்கி விபஸ்ஸனா பயிற்றுவித்து வருகிறார். கீழை மற்றும் மேலை நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இன-மத பாகுபாடின்றி அவரிடம் பயின்று வந்துள்ளனர். விபஸ்ஸனா பயில பெருமளவில் மக்கள் ஆர்வம் காட்டுவதை அறிந்து அவர் 1982 முதல் தனக்கு உதவியாக துணை-ஆசிரியர்களையும் நியமித்து வந்துள்ளார்.

குறிக்கோள்

விபஸ்ஸனா தன்னைத் தானே ஆராய்வதின் மூலம் மனத்தூய்மை அடைய ஒரு வழி. ஒருவர் முதலில் தம் மூச்சுக்காற்றின் மீது கவனம் செலுத்தி மனதை ஒருநிலைப்படுத்துகிறார். பின் கூர்மையடைந்த மனதுடன் தன் உடல் மற்றும் உள்ளத்தில் எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களைக் கவனித்து, அதன் மூலம் நிலையாமை, துக்கநிலை மற்றும் சாரமின்மை ஆகிய உலகப்பொதுவான உண்மைகளை உணர்ந்தறிகிறார். இவ்வாறு பேருண்மையை நேரடியாக உணர்ந்தறிவதில் மனம் தூய்மை அடைகிறது.

மனமாசுகளிலிருந்து முழு விடுதலை அடைதலும், அகத்தெளிவு பெறுதலும் விபஸ்ஸனா தியான முறையின் உயரிய குறிக்கோள்கள் ஆகும். உடற்பிணிகளை நீக்குவது இதன் நோக்கமல்ல. ஆயினும் மனம் தூய்மை அடைவதன் பயனாக மனநிலை சம்பந்தப்பட்ட பல நோய்கள் குணமடைகின்றன. சொல்லப்போனால், விபஸ்ஸனா மனத்துயர் எழக் காரணமான விருப்பு, வெறுப்பு, அறியாமை என்ற மூன்றையுமே அழிக்கிறது. தொடர்ந்த பயிற்சியினால் இந்தத் தியான முறை அன்றாட வாழ்வில் ஏற்படும் மன-இறுக்கத்தைத் தளர்த்துகிறது. விரும்பத்தக்க அல்லது வெறுக்கத்தக்க சந்தர்ப்பங்களை சந்திக்க நேரும்போது சமநிலை இழக்கும் மனதின் பழைய பழக்கத்தினால் விளைந்த முடிச்சுகளை இது அவிழ்க்கிறது.

யார் பயிலலாம்?

தன்னைத் தானே ஆராய்வதன் மூலம் நிலையாமை, துக்கநிலை மற்றும் சாரமின்மை ஆகிய உலகப்பொதுவான உண்மைகளை உணர்ந்தறிந்து மனத்தூய்மை அடைவதே 'விபஸ்ஸனா' முறையாகும். இந்த பாதை முழுக்க முழுக்க அனைவருக்கும் பொதுவானது. யாவருக்கும் பொதுவான நோய்களுக்கு யாவருக்கும் பொதுவான மருந்தாக அமைவது. இது எந்த ஒரு மதத்தையோ, இனப்பிரிவையோ சாராதது. எனவே, இன-குல-மத வித்தியாசங்கள் இன்றி யாவரும் எங்கும் எப்போதும் இதைப் பயிற்சி செய்யலாம். அனைவர்க்கும் இது சம அளவில் பயனளிக்க வல்லது.

இந்த தியான முறையை புத்தர் தோற்றுவித்திருந்தாலும், இதை புத்த மதத்தினர் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற விதி எதுவும் கிடையாது. மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக மக்கள் யாவரும் ஒரே வகையான பிரச்சினைகளை எதிர்கொள்வதால், அப்பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் முறையும் அனைவர்க்கும் பொதுவானதாகவே இருக்கவேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டே இந்த தியான முறை செயல்படுகிறது. பல மதங்களை சேர்ந்த பலதரப்பட்ட மக்கள் விபஸ்ஸனா முறையின் பயன்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும் இந்த தியான முறைக்கும், தம் தொழில் அல்லது சமய நம்பிக்கைகளுக்கும் முரண்பாடு ஏதும் உள்ளதாக கண்டதே இல்லை.

அக-ஆராய்வின் மூலம் மனதை தூய்மைப்படுத்தும் இந்த முறை சுலபமானது அன்று. பயிற்சி பெறுபவர்கள் கடும் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். அவரவர் தம் சொந்த முயற்சியினால் தமக்கே உரிய இயல்புகளை புரிந்துகொள்ள வேண்டி இருக்கும். வேறு யாரும் அவர்களுக்காக இதை செய்ய முடியாது. ஒழுக்க நெறியைக் கடைபிடித்து, மிகுந்த ஈடுபாட்டுடன் முயற்சி செய்ய வல்லவர்களுக்கே இந்த முறை ஒவ்வும்.

விபஸ்ஸனா தியான முறை தம் மனம் சார்ந்த குறைபாடுகளை குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் என்ற தவறான நம்பிக்கையுடன் சில தீவிர மன-நோயாளிகள் இந்தப் பயிற்சி பெற வந்துவிடுகின்றனர். நிலைப்பட்டு பிறருடன் பழக இயலாமை மற்றும் பல்வேறு குணப்படுத்தும் முறைகளை பின்பற்றியதாலான விளைவுகள் ஆகியவை இத்தகைய நோயாளிகள் பயனடைவதைக் கடினமாக்குகின்றன. சிலருக்கு பத்து நாட்கள் பயிற்சியை முடிப்பதுகூட கடினமாக உள்ளது. நாங்கள் தொழில் அடிப்படையில் இன்றி, தாங்களாகவே முன்வந்து சேவை புரிபவர்களைக் கொண்டே பயிற்சி முகாம்களை நடத்துவதால் இத்தகைய பின்னணி கொண்ட பிணியாளர்களை முறைப்படி கவனித்துக் கொள்வது இயலாததாகிறது. விபஸ்ஸனா தியான முறை பெரும்பாலானவர்களுக்கு நற்பயன் விளைவிக்கக் கூடியதே ஆயினும், அது மருத்துவ அல்லது மனச் சிகிச்சைக்கு மாற்றாக அமையாது. எனவே, நாங்கள் தீவிர மன-நோயாளிகளுக்கு இந்த முறையை அறிவுறுத்துவதில்லை.

பயிற்சி முறை

இந்த தியான முறை பத்து-நாள் பயிற்சி முகாம்கள் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அது சமயம் பயிற்சி பெறுவோர் பயிற்சி பெறும் இடத்திலேயே தங்கியிருந்து, பரிந்துரைக்கப்பட்ட ஒழுக்க நெறியை தவறாது பின்பற்றி, தியான முறையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு, முறையாகவும், தேவையான அளவும் பயிற்சி செய்ய பத்து நாட்களுக்குள்ளேயே நற்பலன்களை அனுபவிக்க ஆரம்பிப்பர்.

பயிற்சி பெறுவோர் ஈடுபாட்டுடன் கடுமையாய் பயிற்சி செய்ய வேண்டி இருக்கும். மூன்று நிலைகளை கொண்டது இந்த பயிற்சி. 'சீல', அதாவது நன்னடத்தை, என்பதே இந்த முறையின் அடித்தளம் ஆகும். சீலத்தின் அடிப்படையில் எழும் மன-ஒருநிலைப்பாட்டிற்கு 'சமாதி' என்று பெயர். அக-ஆராய்வினால் விளையும் ஞானத்திற்கு 'பஞ்ஞ' என்று பெயர். இந்த ஞானத்தின் மூலமே ஒருவர் மனத்தூய்மை அடைகிறார்.

முதன்மையாக, பயிற்சி நடக்கும் பத்து நாட்களும் எந்த உயிரையும் கொல்லுவது, எந்த பொருளையும் திருடுவது, பாலியல் உறவுகள் கொள்வது, தவறாக பேசுவது மற்றும் போதை ஊட்டும் பொருட்களை உட்கொள்வது ஆகிய செயல்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இந்த எளிய அறநெறி, உள்ளத்தை அமைதிபடுத்தப் பெரிதும் உதவுகிறது. இல்லையேல், தெளிவாகத் தன்னைத் தான் கவனிக்க இயலாது மனம் அலைபாய்ந்துகொண்டு இருக்கும்.

ஒருவர் இடைவிடாது தன் மூச்சுக்காற்றின் போக்கின் மீது தன் முழு கவனத்தையும் நிலைநிறுத்தி, அதில் இயல்பாக நிகழும் பல மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் தன் மனதின் மேல் உள்ள கட்டுப்பாட்டை ஓரளவு வளர்த்து கொள்வது இரண்டாம் நிலை.

நான்காம் நாள் வருவதற்குள் மனம் பெரிதும் அமைதி பெற்று, கூர்மையுற்று விபஸ்ஸனா பயிற்சி தொடங்கத் தேவையான திறனை அடைகிறது. உடலெங்கும் புலனாகும் உணர்ச்சிகளை உணர்ந்தறிந்து, அதன் தன்மைகளைப் புரிந்துகொண்டு, எதிர்வினைகளை ஏற்படுத்தாது, சமநோக்கை வளர்த்துக்கொள்வதே இந்த பயிற்சி.

இறுதியாக, கடைசி நாள் அன்று, பத்து நாட்களில் பெருகிய மனத்தூய்மையை அனைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வண்ணம் அனைவரிடமும் நல்லுறவு வளர்க்கும் 'பேரன்பு தியான முறை' பயிற்சியுடன் முகாம்கள் நிறைவடையும்.

மூச்சு மற்றும் உடலோடு இணைந்த உணர்ச்சிகளை கவனிக்கும் செயல்முறை பற்றிய சிறு விடியோ படம் (5.7 மெகா பைட்டுகள்) 'க்விக்டைம் மூவி ப்ளேயர்' துணைகொண்டு காணலாம். இம்முழுபயிற்சியும் உண்மையிலேயே மனதிற்கு தரப்படும் பயிற்சியாகும். நாம் உடல் நலம் பெற உடற்பயிற்சி செய்வதைப்போன்றே, மனநலம் பெற செய்யும் பயிற்சியே விபஸ்ஸனா தியான முறை ஆகும்.

கால அட்டவணை
பயிற்சியின் தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு பின்வரும் கால அட்டவணை வரையப்பட்டுள்ளது. சிறந்த பயனை பெற மாணவர்கள் முடிந்தவரை இந்த அட்டவணைப்படி தவறாது காலத்தை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலை 04.00 மணி விழித்தெழுதல்
காலை 04.30 முதல் 06.30 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
காலை 06.30 முதல் 08.00 வரை காலைச்சிற்றுண்டி இடைவேளை
காலை 08.00 முதல் 09.00 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
காலை 09.00 முதல் 11.00 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
காலை 11.00 முதல் நண்பகல் 12.00 வரை பகல் உணவு
நண்பகல் 12.00 முதல் மாலை 01.00 மணி வரை ஓய்வு அல்லது ஆசிரியருடன் நேர்காணல்
மாலை 01.00 முதல் 02.30 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
மாலை 02.30 முதல் 03.30 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
மாலை 03.30 முதல் 05.00 வரை தியானக்கூடத்திலோ தங்கள் தங்கும் அறையிலோ தியானம்
மாலை 05.00 முதல் 06.00 வரை தேநீர் இடைவேளை
மாலை 06.00 முதல் 07.00 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
மாலை 07.00 முதல் இரவு 08.15 வரை தியானக்கூடத்தில் ஆசிரியரின் பேருரை
இரவு 08.15 முதல் 09.00 வரை தியானக்கூடத்தில் கூட்டுத்தியானம்
இரவு 09.00 முதல் 09.30 வரை தியானக்கூடத்தில் கேள்வி நேரம்
இரவு 09.30 மணி தங்கும் அறைக்குச் செல்லுதல்; விளக்கணைப்பு

நிதியளித்தல்

விபஸ்ஸனா பயிற்சி பெற எந்த விதமான கட்டணமும் கிடையாது. உணவும், இருப்பிடமும் கூட இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. விபஸ்ஸனா முறையின் பாரம்பரியப்படி பயிற்சி முகாம்கள் நன்கொடைகளை மட்டும் கொண்டு நடத்தப்படுகின்றன. திரு சத்திய நாராயண் கோயன்கா அவரிடமோ அல்லது அவர்தம் உதவி ஆசிரியரிடமோ ஒரு முறையாவது பத்து-நாள் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து மட்டுமே நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முதன் முறையாக பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் ஒருவர், முகாமின் கடைசி நாள் அன்றோ, அதன் பின்னரோ நன்கொடை வழங்கலாம்.

இந்த முறையில், பயிற்சியின் பயனை தாமே சொந்தமாக உணர்ந்தவர்களே மேலும் பயிற்சி முகாம்கள் நடக்க வழிவகுக்கிறார்கள். தாம் பெற்ற பயனை பிறருக்கும் அளிக்கும் வகையில் மனமுவந்து தம்மால் இயன்றதைக் கொடுக்கலாம். முதல் முறையாக பயிற்சி பெறுபவர்கள், பயிற்சியின் முடிவிலோ அல்லது அதன்பிறகு எப்பொழுதுமோ நன்கொடை வழங்கலாம்.

இவ்வாறு வரும் நன்கொடைகள் மட்டுமே உலகம் முழுவதும் இந்த பாரம்பரியத்தின் கீழ் நடக்கும் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கான ஒரே வருவாய். செல்வந்தர்களான எந்த நிறுவனமோ தனிப்பட்டவரோ இந்த பயிற்சி முகாம்களுக்கு உபயம் செய்வதில்லை. மேலும், இதன் ஆசிரியரோ நிர்வாகிகளோ எந்தவிதமான சம்பளமும் பெற்றுக்கொள்வதில்லை. இவ்வாறாக, விபஸ்ஸனா நோக்கத் தூய்மையுடன் பொருள் ஈட்டும் குறிக்கோள் எதுவும் இன்றி பரவி வருகிறது.

நன்கொடை பெரியதாகினும், சிறியதாகினும், 'எனக்கு முன்னால் பயிற்சி பெற்றவர்களின் வள்ளன்மையினாலேயே நான் பயிற்சி பெறுவது சாத்தியமாயிற்று; எனக்குப் பின்னால் பலரும் இந்த தியான முறையின் பயன்களைத் அனுபவிக்க நானும் இனிவரும் பயிற்சி முகாம்கள் நடத்தும் பொருட்டு ஏதாவது வழங்குகிறேன்' என்கிற பிறருக்கு உதவும் நல்லெண்ணத்தோடே அளிக்கப்படவேண்டும்.

tamil:http://www.tamil.dhamma.org/Code%20of%20Discipline.htm

No comments:

Post a Comment