Monday, April 18, 2016

மூட்டு வலி சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

மூட்டு வலி
சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

முதிர்ந்த வயதை நெருங்கும்போது, மூட்டு வலிதான் முதலில் எட்டிப்பார்க்கும்.
மூட்டுகள் சிதைவதால் மூட்டு வலி உண்டாகிறது; மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். பெரும்பாலும் 55 வயதைத் தாண்டியப் பெண்களிடம் காணப்படும் இந்த வலிக்குக் காரணம், முதுமையை அடையும்போது, எலும்புகளின் முனைகளை மூடியுள்ள குருத்தெலும்புகள் தேய்ந்து முற்றிலும் அரிக்கப்படும். இந்த நிலையில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படும் பிரச்னையே.
முக்கிய காரணங்கள்: பரம்பரை, அதிக உடல் எடை, அதிக நேரம் சம்மணமிட்டு உட்கார்ந்து இருத்தல், சத்தான உணவுகளை உண்ணாமல் இருத்தல், எலும்பு முறிவு.
அறிகுறிகள்: காலையில் எழுந்திருக்கும்போது வலி அதிகரித்தும், நேரம் செல்லச் செல்லக் குறைந்தும் காணப்படும். நடக்கும்போது அதிகரித்தும், ஓய்வின் போது வலி குறைவாகவும் இருக்கும். மூட்டுகளைஅசைக்கும்போது, ஒருவிதமான ஒலியை (Criptations)உணரலாம்; இணைப்புகளைச்(Joints)சுற்றியுள்ள தசைகளும் தசை நாண்களும் வலுவிழந்து விறைப்புடன் காணப்படும்; அதிகப்படியான எலும்பு வளர்ச்சிகளும், சிறு குருத்துகளும் (spur) வளரும். மூட்டுகள் வீங்கிக் கடினமாக இருக்கும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
அமுக்கரா கிழங்குப் பொடி அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து உண்ணலாம்.
சிற்றாமுட்டி சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம்.
குங்கிலியத்தைப் பொடித்து ஒரு கிராம் பாலில் கலந்து பருகலாம்.
தழுதாழை இலைப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
நிலாவாரைத் தூள் ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து உண்ணலாம்.
மருதம்பட்டை மற்றும் மாவிலங்குப் பட்டை சம அளவு பொடித்து, அதில் கால் ஸ்பூன் வெந்நீரில் கலந்து உண்ணலாம்.
வாகைப் பூ, வேப்பம் பூ சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கற்றான் இலைப் பொடி இவற்றை சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் பாலில் சேர்த்து உண்ணலாம்.
சங்கன் இலை, வேர்ப் பொடி சம அளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் பாலில் உண்ணலாம்.
ஈயக்கொழுந்துப் கொடியை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
வெளிப்பிரயோகம்:
சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கிக் கட்டலாம்.
சுக்கை, எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
குப்பைமேனி இலையுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
புளி இலையை அரைத்து, நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துப் 'பத்து’ப் போடலாம்.
சதகுப்பை விதையை அவித்து, பின் சதகுப்பை வேருடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
வசம்பை, காய்ச்சுக்கட்டி உடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
வெங்காயத்தை, கடுகு எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
நொச்சி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
நீர்ப்பிரம்பி இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டலாம்.
கருஞ்சீரகத்தை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம்.
சேர்க்க வேண்டியவை: கோதுமை, பச்சைப்பயறு, குதிரைவாலி, தினை, சிவப்புச் சம்பா, பார்லி, இஞ்சி, நாட்டு வாழைப்பழம், பால், கீரை.
தவிர்க்க வேண்டியவை: கேழ்வரகு, கிழங்குவகை, காபி, டீ, எண்ணெய், வாழைக்காய், புளி.

http://sivamgi.blogspot.in/2016_02_01_archive.html

No comments:

Post a Comment