ஓஷோவின் ஞானக்கதைகள் - 26
வாழ்வின் உண்மை
நான் ஒரு பழமையான சூபி கதையை உங்களுக்கு கூறுகிறேன்……..
ஒரு அரசர் தனது அரசவையிலுள்ள அறிஞர்களிடம், நான் எனக்காக ஒரு அழகான மோதிரம் செய்யப் போகிறேன். அதில் மிகச்சிறந்த வைரங்கள் பதிக்கப் போகிறேன். அந்த மோதிரத்திற்க்குள் மிக மோசமான சமயத்தில் படித்தால் எனக்கு உதவக்கூடிய ஒரு செய்தியை வைத்திருக்க விரும்புகிறேன். அது மிகவும் சிறியதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதை மோதிரத்தில் பதிக்கும் வைரத்தின் கீழே மறைத்து வைக்கமுடியும். அப்படி ஒரு செய்தி வேண்டும். என்று கேட்டான்.
அவர்கள் யாவரும் அறிஞர்கள், மிகச்சிறந்த பண்டிதர்கள். அவர்களால் மிகச்சிறந்த உபதேசங்களை எழுத முடியும். ஆனால் மிக மோசமான தருணத்தில் உதவக்கூடிய இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளுக்குள் அடங்கும் ஒரு செய்தியை எழுதுவது என்றால்…… அவர்கள் சிந்தித்தனர், தங்களது புத்தகத்தில் தேடிப்பார்த்தனர், ஆனால் அவர்களால் அப்படி ஒன்றை கண்டு பிடிக்கவே முடிய வில்லை. அரசரிடம் ஒரு வயதான வேலையாள் இருந்தான். அவனுக்கு அவரது தந்தையின் வயது. அவன் அரசரது தந்தையின் வேலையாள். அரசி சிறுவயதிலேயே மரணமடைந்து விட்டதால் இந்த வேலையாள்தான் அரசரை பாதுகாப்பாக வளர்த்தான். அதனால் அரசர் இவனை ஒரு வேலையாளாக கருதுவதில்லை. அவனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான்.
அந்த வயதானவன், நான் அறிவாளியுமல்ல, பண்டிதனுமல்ல, படித்தவனுமல்ல, ஆனால் எனக்கு அந்த செய்தி என்னவென்று தெரியும் – அப்படி பட்ட செய்தி ஒன்றே ஒன்றுதான் உள்ளது. இவர்களால் அதை உங்களுக்கு கொடுக்கமுடியாது. ஏனெனில் தன்னை உணர்ந்த ஒரு மனிதனால்தான், ஒரு ஞானியால்தான் அது போன்ற ஒரு செய்தியை கொடுக்கமுடியும். என்றான்.
இவ்வளவு காலம் இந்த அரண்மனையில் இருந்ததால் நான் பல்வேறு தரபட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். அதில் ஒருமுறை ஒரு ஞானியை சந்தித்திருக்கிறேன். அவர் உனது தந்தையின் விருந்தாளியாக வந்திருந்தார். அவருக்கு சேவை செய்வதற்காக உனது தந்தை என்னை அனுப்பினார். அவர் விடைபெறும்போது, நான் அவருக்கு செய்த பணிவிடைகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக அவர் இந்த செய்தியை எனக்கு அளித்தார். எனக்கூறி அந்த செய்தியை ஒரு சிறுதாளில் எழுதி அதை சுருட்டி அரசரிடம் கொடுத்து, இதை படிக்க வேண்டாம். மோதிரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமும் முடிந்து விட்டது, வேறு வழியேயில்லை எனும் சமயத்தில் இதை திறந்து பாருங்கள் என்றார்.
அந்த சமயமும் விரைவிலேயே வந்தது. அந்த நாட்டின்மீது படையெடுப்பு நடந்தது. அரசர் தனது நாட்டை போரில் இழந்தார். அவர் தனது குதிரையில் தப்பித்து ஓடினார். அவரது பின்னால் அவரது எதிரி படை வீரர்கள் குதிரையில் துரத்தி வந்தனர். அவர் ஒரு ஆள், அவர்கள் பலர். அவர் ஒரு பாதை முடிவுக்கு, அதற்கு மேல் பாதையில்லை என்ற இடத்திற்கு, ஒரு மலைமுகடுக்கு வந்து விட்டார். கீழே பெரும் பள்ளத்தாக்கு, அதில் விழுந்தால் முடிந்தது. அவரால் திரும்பியும் போக முடியாது, எதிரிகள் வந்து கொண்டிருந்தனர், குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்டது. – முன்னேயும் போக முடியாது, அங்கே வழியில்லை.
திடீரென அவருக்கு மோதிரத்தின் நினைவு வந்தது. அவர் அந்த மோதிரத்தை திறந்து, அந்த பேப்பரை எடுத்தார், அதில் மிகச் சிறந்த பொருளுடைய ஒரு வாசகம் இருந்தது. அது இதுவும் கடந்து போகும் அந்த வாசகத்தை படித்தவுடன் அவருக்குள் மிகப் பெரும் அமைதி வந்தமர்ந்தது. இதுவும் கடந்து போகும், அதுவும் கடந்து போயிற்று.
எல்லாமும் கடந்து போகும், எதுவும் இந்த உலகில் தங்காது. அரசரை பின்தொடர்ந்து வந்த எதிரிகள் வழி மாறி போய் விட்டனர், வேறு வழியில் அவரை தேடி சென்று விட்டனர். குதிரைகளின் குளம்பொலி படிப்படியாக குறைந்து தேய்ந்து போய் விட்டது. அரசருக்கு அந்த ஞானியிடமும், அந்த வேலையாளிடமும் அளப்பரிய நன்றியுணர்வு தோன்றியது. இந்த வார்த்தைகள் அபூர்வ சக்தி படைத்தவை. அவர் அந்த தாளை மடித்து, திரும்பவும் அந்த மோதிரத்தினுள் வைத்தார்.
பின் தனது படைகளை திரட்டிக் கொண்டு வந்து, திரும்பவும் போராடி தனது அரசை வென்றார். அவர் தனது தலைநகரத்தில் வெற்றியோடு நுழையும்போது, ஆடல்பாடலோடு கோலாகலமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அரசர் தன்னைப் பற்றி பெருமையாக உணர்ந்தார். அந்த வேலையாள் அவரது ரதத்தின் கூட நடந்து வந்து கொண்டிருந்தார். அவர், இதுவும் சரியான தருணம். அந்த வாசகத்தை திரும்பவும் பாருங்கள். என்றார்.
அரசர், என்ன சொல்கிறீர்கள், இப்போது நான் வெற்றி பெற்று இருக்கிறேன். மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், நான் தோல்வியுற்ற நிலையில் இல்லையே. வேறு வழியே இல்லை என்ற நிலையில் நான் இப்போது இல்லையே. எனக் கேட்டார்.
அந்த வயதானவன், பாருங்கள், இதைத்தான் ஞானி என்னிடம் கூறினார். அந்த செய்தி கையறு நிலைக்கானது மட்டுமல்ல, அது சந்தோஷ தருணங்களுக்கானதும்தான். நீங்கள் தோல்வியுற்ற நிலையில் மட்டுமல்ல, வெற்றி பெற்ற நிலையில் கூட அந்த செய்தி உண்மையானது தான். நீ தொலைந்து போன சமயத்தில் மட்டுமல்லாமல் முதல் ஆளாக நீ இருக்கும் நேரத்தில்கூட அது தேவைதான். என்று கூறினார்
அரசர் தனது மோதிரத்தை திறந்து, இதுவும் கடந்து போகும் என்ற செய்தியை படித்தார். உடனே திடீரென அந்த கூட்டத்தினுள்ளும், மகிழ்ந்து கூத்தாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலும் அதே அமைதி, அதே மௌனம் கவிழ்ந்தது. அந்த பெருமை, அந்த ஆணவம் அகன்றது. எல்லாமும் கடந்து போகும்.
No comments:
Post a Comment